தொற்றுநோய் தொடர்பிலான பயணத்தடைகளின் போதிலான வீட்டு வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகள்
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசியமட்ட செயலணியின் அறிக்கை
இலங்கையிலுள்ள பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான தேசிய மட்ட செயலணியானது, தொற்றுநோய் தொடர்பிலான முடக்குதல்களின் போது வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உடனடிக் கவனத்திற்கொள்ளும்படி வலியுறுத்துகிறது.
தொற்றுநோய்க்கு முன்னரான காலத்தில் கூட, வீட்டு வன்முறையானது மனித உரிமைகளுக்கெதிரான பொதுவான மீறல் என உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் பயணத்தடைகளை விதித்து, வீடுகளில் இருக்கும்படியும் வீடுகளிலிருந்து பணியாற்றும்படியும் அறிவுறுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகள் வீட்டு வன்முறைகள் பன்மடங்கு அதிகரிப்பதற்கான காரணியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைத்துப்பார்க்க முடியாதளவு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், "வீட்டு வன்முறைகளில் பயங்கரமான உலகளாவிய அலையாக'' உள்ளமையினை அங்கீகரித்து குடும்பங்களில் 'யுத்த நிறுத்தம்' ஏற்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
தொற்றுநோய்க் காலம் ஆரம்பமான 2020 மார்ச்சில் இருந்து, வீட்டு வன்முறைகளுக்கு எதிரான ஆதரவு சேவைகளுக்கான கோரிக்கையானது அதிகரித்து வந்துள்ளதுடன் அதற்கு தேசியமட்ட செயலணியின் அங்கத்தவர்கள் பல்வேறு மட்டங்களில் பதிலளித்தும் வருகின்றனர்.
அரசாங்கமானது தேசிய துரித அழைப்பான 1938இனை 24 மணி நேரமும் நடைமுறைப்படுத்த எடுத்த முடிவை நாம் அங்கீகரித்துப் பாராட்டும் அதேவேளை, உடனடியான அவதானத்தினை வேண்டிநிற்கும் மேலும் சவால்கள் உள்ளன. கரிசனைக்குரியது என்னவெனில், இவற்றிற்கு பதிலளிக்கத் தவறுமிடத்து, அவை பாரிய தீங்குகளை அல்லது இறப்புகளை விளைவாக்கக்கூடும் என்பதாகும்.
2005இன் வீட்டு வன்முறைத் தடுப்புச்சட்டம் (PDVA), மற்றும் குற்றச்செயலினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்கும் சட்டம் இல.4/2015 ஆகியவற்றில் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டரீதியான கடப்பாடுகள் காணப்படுகின்றன.
தற்போதுள்ள சவால் யாதெனில் இச்சம்பவங்களிற்கு, குறிப்பாக முதலாவது கட்ட நிவாரணம் வழங்குபவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதும் செயற்றிறனானதுமான பதிலளிப்புகளை வழங்குவதாகும். பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை நம்பத்தவறி, பயத்தினையும் தப்பிப்பிழைத்து வாழ்பவர்களின் மீது குற்றத்தினையும் அவமானத்தினையும் சுமத்தும், அவர்;களைத் துஷ்பிரயோகம் செய்தவர்களிடம் திரும்பிச் செல்லுமாறு கோரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை செய்யத்தவறும் சம்பவங்கள் பற்றி நாம் கரிசனையுடைவர்களாக உள்ளோம்.
இலங்கையில் பால்நிலைசார் வன்முறைகளுக்கெதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் தேசிய அமைப்பாகிய நாங்கள் கீழ்க்காணும் தரப்பினருக்கு விடுக்கும் அழைப்பு:
(1) சட்ட அமுலாக்க மற்றும் சமூக சேவைகளிலுள்ள அதிகாரிகள்:
தொற்றுநோய்க் காலத்திலான, குறிப்பாக வீட்டுவன்முறைகளுக்குப் பதிலளிப்பதில் நியமமான நடைமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
உதவி நாடிவரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கப்படுவதனை நிச்சயப்படுத்தவும். தப்பிப்பிழைத்து வாழ்வோர் சுமைக்குள்ளாக்கப்படாமல் அல்லது துன்புறுத்தல் அனுபவித்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அல்லது பயணத் தடைகளின் போது விசாரணைகளைச் செய்வதற்கு வற்புறுத்தப்படுவதனால் மீளவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதனை நிச்சயப்படுத்தவும்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உரிய முறையான பதிவுகளைப் பேணும் பொருட்டு சட்ட மருத்துவ அதிகாரிகளின் பரிசோதனைகளுக்கும் மற்றும் இக்காலத்தின் போது பராமரிப்பினையும் உதவி மற்றும் பாதுகாப்பினையும் வழங்கும் பொது மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவது தொடர்பாக உதவியளிக்கப்படுவதனையும் உறுதிசெய்யவும்.
(2) நாட்டின் நீதித்துறை:
உடனடியான பாதுகாப்புக் கட்டளைக்கான தேவையுள்ள தப்பிப்பிழைப்பவர்களுக்கான ஒரு பொறிமுறையினை, வீட்டு வன்முறைத் தடுப்புச்சட்டத்திற்கு (PDVA) அமைவாக ஒன்லைன் (online) விண்ணப்பங்கள் மூலமாக அவ்வாறான கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும்.
பிரதிவாதிகளுக்கு பாதுகாப்புக் கட்டளைகள் பற்றி அறிவிக்கவும் அவ்வாறான பாதுகாப்புக் கட்டளைகளை மீறுவதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இலங்கைப் பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம்: அத்துடன்
(3) அரசியல் மற்றும் நிர்வாக துறையில் தலைமை வகிப்பவர்கள்:
வன்முறைகளிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் அவர்களுக்குரிய பாதுகாப்பானதும் அவர்கள் பற்றிய முன் அனுமானங்கள் இன்;றியதுமான பாதுகாப்;பை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுதலானது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானதாகும்.
இக்காலகட்டத்தில் அனுபவிக்கப்படும் வன்முறையின் தாக்கமானது நீண்ட கால சமூக-பொருளாதார தாக்கத்தினையும் தலைமுறை கடந்த விளைவுகளையும் கொண்டிருக்கலாம் என்பதனை மனதில் கொண்டு, பொதுத் தகவலளிப்பிற்கும் ஏற்பாடுகளுக்குமான அவசரமானது மிகைப்படுத்தப்படமுடியாது.
உதவிகள் தேவைப்படுவோருக்கு அவ்வாறான தகவல்களும் ஏற்பாடுகளும் ஓரு மாற்றத்தினை ஏற்படுத்துவதுடன் வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டு தப்பி வாழ்வோருக்கு உதவிசெய்வதற்கு சமூகங்களை ஊக்கப்படுத்தி வலுப்படுத்தும். இந்த மாற்றத்தினை ஏற்படுத்த நாம் ஒன்றாகப் பணியாற்றுவோம்.
Comments (0)
Facebook Comments (0)