தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை பின்தொடரும் நபர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜாவினை பின்தொடரும் நபர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தினால் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தகவல்களை வெளியிடுமாறும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் கையொழுத்திட்டு பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (13) வெள்ளிக்கிழமை கடிதமொன்றினை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2021-08-13
திரு. சந்தன விக்ரமரத்ன,
பொலிஸ்மா அதிபர்,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு.
தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவராஜா ராமசாமியை பின்தொடரும் நபர்கள் தொடர்பாக உடன் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டு, தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்தல்.
பொலிஸ்மா அதிபர் அவர்களே,
தமிழன் எனும் தமிழ் மொழி மூல பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ஆர். சிவராஜா வசித்து வரும் கல்கிசை பிரதேசத்தில் உள்ள தனியார் வீட்டுத் தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு 'குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து' என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தேகத்துக்கிடமான இருவர் வந்துள்ளதாக, அவர் உங்களுக்கு முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
வீட்டுத் தொகுதியின் நுழைவாயிலைத் திறந்து, தமக்கு பிரதம ஆசிரியர் வசிக்கும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்குமாறு குறித்த சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டாலும், பாதிகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளதாக சிவராஜா எமக்கு தெரிவித்தார்.
இந்த சந்தேகத்துக்கிடமானவர்கள் யார், இவர்கள் ஏன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை அவ்வாறான அதிகாலை வேளையில் சந்திக்க முயற்சி செய்தார்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக பரிசோதனை செய்து, விடயங்களை வெளிப்படுத்தி, உரியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு, பத்திரிகை ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏதும் இருப்பதாக தெரியவந்தால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
Comments (0)
Facebook Comments (0)