தேயிலையினை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை
கடந்த பல வருடங்களாக நிலுவையில் காணப்பட்டு வந்த 250,925,169 அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஈரானுக்கு திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த கடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஈரானின் தேசிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது. இந்த நீண்ட கால கடனை இலங்கை தேயிலையினை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாகவே நிவர்த்திக்கப்படவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (21) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் ஈரானின் வர்த்தக மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர் Alireza Paymanpak ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான கனகா ஹேரத், தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹாசீம் அஷாட் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
எரிபொருள் கொள்வனவு நிலுவையினை தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பான செயற்திட்டம் தொடர்பான விடயங்களே இந்த ஒப்பந்தத்தில் உள்ளக்கடக்கட்டுள்ளது.
இலங்கை தேயிலையினை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஈரான் கடந்த பல தசாப்தங்களாக காணப்படுகின்றது. எனினும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக வங்களின் ஊடாக ஈரானுக்கு தேயிலை ஏற்றுவமதி செய்வதில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினர்.
இதனால் 2016ஆம் ஆண்டு காணப்பட்ட ஈரானுக்கான 46 சதவீத இலங்கை தேயிலையின் ஏற்றுமதி 2020ஆம் ஆண்டில் 25 சதவீதமாக குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய 2013ஆம் ஆண்டில் 38.42 மில்லியன் கிலோ இலங்கை தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் 2020 இல் 14.73 மில்லியன் கிலோவாக குறைவடைந்தது.
இவ்வாறான நிலையில், ஈரானுக்கான நீண்ட கால கடனை செலுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் தொடர்ச்சிய இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்தது.
இதனால், இலங்கை தேயிலை ஏற்றுமதியினை அதிகரிப்பதன் ஊடாக குறித்த நீண்ட கால கடனை தீர்க்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான உள்ளூர் நாணயத்தினை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையன்று இலங்கை மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்ட மாற்று விகிதத்தில் இலங்கை தேயிலை சபைக்கு வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஈரானுக்கான நிலுவையில் உள்ள கடன் தீர்;க்கப்படுவதுடன் இலங்கை தேயிலையின் ஈரானுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது.
இதன் விளைவாக, தேயிலை ஏற்றுமதியாளர்களால் ஈரானுக்கு அனுப்பப்படும் தேயிலை ஏற்றுமதி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கான கொடுப்பனவுகளை இலங்கை தேயிலை சபை தீர்த்து வைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்படாது என்பதால், எந்தவொரு சர்வதேச பணப் பரிவர்த்தனைகளும் இல்லாமல் ஈரானுக்கு இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் தேநீர் ஒரு உணவுப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், கறுப்புப் பட்டியலிடப்பட்ட ஈரானிய வங்கிகள் எதுவும் தொடாபில் ஈடுபடுத்தப்படாமையினால் இந்தத் திட்டம் ஐநா அல்லது அமெரிக்கத் தடைகளை மீறாது எனவும் அமைச்சு குறிப்பிட்டது.
Comments (0)
Facebook Comments (0)