இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் பேச்சாளர்
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன அறிவித்தார்.
கொழும்பில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பினை மேற்கொண்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னரான திகதியொன்றிலேயே இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹசீம் உயிருடன் இருந்த காலப் பகுதியிலேயே இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட, ஒத்துழைப்புக்களை வழங்கிய, அதனை செயற்படுத்த முயற்சித்தவர்கள் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது திரட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு வெளிநாடொன்றில் வசிக்கும் சிலர் உதவிகள் வழங்கியிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தெற்காசிய நாடொன்றின் மீது தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தை திட்டுவதற்கு இலங்கையை ஒரு தளமாக செயற்படுத்துவதற்கான திட்டமொன்று குறித்தும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் இஸ்லாமியவாத கொள்கைகளை தவறான வழியில் புரிந்துக்கொண்டு, பல அமைப்புக்களை உருவாக்கிய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுள் அவ்வாறான நபர்களும் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தலைமைத்துவம் வழங்கியவர்களும், நிதி உதவிகளை செய்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் ஆரம்ப கட்டத்தில் இரண்டாக பிளவுப்பட்டிருந்ததாக கூறப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Comments (0)
Facebook Comments (0)