சவூதி அரசின் அழைப்பின் பேரிலேயே ஞானசார தேரர் அங்கு விஜயம்
ஏ.ஆர்.ஏ.பரீல்
ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்தமை உண்மையே என அவ்வமைப்பின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே விடிவெள்ளியிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த விஜயத்தில் தானும் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், சவூதி அரேபிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் அங்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விஜயத்தின்போது தாம் சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மானைச் சந்திக்கவில்லை என்றும் இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயம் தொடர்பில் டிலந்த விதானகே தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில்,
"பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சவூதி அரேபிய உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு சவூதி அரசு, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இச்சந்திப்பில் பொதுபல சேனாவின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்ற வகையில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியாவில் இரண்டு இரவுகள் உட்பட 3 தினங்கள் தங்கியிருந்தனர்.
காவி உடையுடன் ரியாத் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய ஞானசாரதேரருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தி சிலர் வரவேற்றனர். சவூதி மக்கள் விமான நிலையத்துக்கு வந்து எம்முடன் சினேகமாக உரையாடினார்கள். எம்மிடம் இனங்களுக்கிடையிலான நல்லுறவு பற்றிக் கேட்டார்கள்.
நாம் சவூதியில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் சவூதி அரேபிய பெண்கள் ஞானசார தேரரை சந்தித்து பேசினார்கள். எங்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.
சவூதி வர்த்தகர் ஒருவர் எம்மைச் சந்தித்து “ஏன் சவூதிக்கு விஜயம் செய்வதற்கு தாமதித்து விட்டீர்கள்? ஏற்கனவே நீங்கள் எமது நாட்டிற்கு விஜயம் செய்திருக்க வேண்டும்” என்றார். கூட்டங்களில் ஞானசார தேரருக்கு அருகில் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.
சவூதி அரேபிய மன்னரின் அரண்மனை உட்பட பல முக்கிய இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். எனினும் நாம் இளவரசர் சல்மானை சந்திக்கவில்லை. தீவிரவாத சிந்தனைகளை ஒழிப்பதற்கான நிலையத்திற்கும் எம்மை அழைத்துச் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை விளக்கினார்கள். வேறு சில நிறுவனங்களுக்கும் நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.
நாங்களும் சவூதி அரேபிய அதிகாரிகளும் இரு நாடுகளிலும் தீவிரவாதத்தை இல்லாமற் செய்வது குறித்தும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டுள்ள இளைஞர்களை இனங்கண்டு அவர்களை புனருத்தாபனம் செய்து நல்வழிப்படுத்துவது தொடர்பிலும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
சவூதி அதிகாரிகள் இது தொடர்பிலான எமது அனுபவங்களைக் கேட்டறிந்து கொண்டார்கள். சவூதி அரேபியாவில் தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
பேச்சுவார்த்தையின் போது சவூதி அரேபியா அடிப்படைவாதிகளுக்கு உதவி செய்கிறது என எமது கூட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் ஏசியிருக்கிறோம் என்பதையும் அவர்களுக்குக் கூறினோம்.
அளுத்கம வன்செயல்களின் பின்னணியில் நாம் இருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினோம். இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றினை நியமிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அது சாத்தியப்படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டினோம்.
முஸ்லிம்களின் கலாசார உடையை நாம் எதிர்க்கவில்லை. முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவதையே நாம் எதிர்த்தோம். அத்தோடு ஹலால் விடயத்தில் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதையே நாம் எதிர்த்தோம்.
ஹலாலுக்காக கட்டணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றே கூறினோம். ஆனால் ஊடகங்களே எமது செயற்பாடுகளை திரிபுபடுத்தி பிரசாரம் செய்தன என்பதை சவூதி அரேபிய அதிகாரிகளிடம் விளக்கினோம்.
புத்த பெருமான் மனித மாமிசம் புசித்ததாக அப்துர் ராஸிக் நிந்தனை செய்த சம்பவத்தையும் கூறினோம். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்றாலும் நாம் அப்துர் ராஸிக்கைத் தாக்கவில்லை என்பதையும் விளக்கினோம்.
ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் சவூதி அதிகாரிகள் எம்மிடம் வினவினர். அதற்கும் பதிலளித்தோம். குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்தோம்.
இலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் பொதுபலசேனா மீதே குற்றம் சுமத்தப்பட்டது என்பதையும் கூறினோம். சவூதி அரேபியா இலங்கை முஸ்லிம்களுக்கு நல்ல விடயங்களைச் செய்வதற்கே உதவி செய்கிறது. ஆனால் அவ்வுதவிகள் இங்கு தவறாக செலவளிக்கப்படுகிறது. அடிப்படைவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றோம்.
உலகளாவிய பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பத்தில் இளைஞர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமை காரணமாகவே அவர்கள் அடிப்படைவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அவர்களை இனங்கண்டு புனருத்தாபனம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சவூதி அரேபியா இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்
எமது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உதவி செய்வதற்கு அவர்கள் கரிசனை கொண்டுள்ளார்கள். எமது சவூதி அரேபிய விஜயத்தை பலர் பலவாறு விமர்சிக்கிறார்கள். நாம் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். எமது நாட்டில் நல்லது செய்வதை விமர்சிப்பதே வழக்கமாகிவிட்டது. எமது கழுத்தை வெட்ட வேண்டும் என்கிறார்கள்.
காவியுடையுடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்வது ஆபத்தானது என பலர் எச்சரித்தார்கள். நானும் பயந்து கொண்டே சென்றேன். ஆனால் ஞானசார தேரர் எதற்கும் பயப்படவில்லை. சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினார்.
உண்மையில் சவூதி அரேபியா மாற்றம் கண்டுவிட்டது. ஆனால் அது 100 வீதமான மாற்றமல்ல. சவூதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், எம்முடன் சுமுகமாக பழகினார்கள்.
சவூதி அதிகாரிகள் இலங்கையில் எமது செயற்பாடுகளை ஆராய்வதாகக் கூறினார்கள். அங்கும் நாம் இதையே எதிர்பார்க்கிறோம். எமக்குள்ளான ஒத்துழைப்புகள் மனித சமுதாயத்துக்கு நிச்சயம் பயனுள்ளவையாக அமையும். அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் எவ்வாறு செயற்படுவது என்பதை ஆராய வேண்டும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)