மூன்றாம் தரப்பால் தேசமான்ய, தேசபந்து போன்ற பட்டங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை
றிப்தி அலி
தேசமான்ய தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை முறைசாராத வகையில் மூன்றாம் தரப்பினரால் (வேறு நிறுவனங்களினால்) வழங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்கள், மூன்றாம் தரப்பினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதை தடுப்பதற்கான சட்ட மூலத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன் தினம் திங்கட்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கண்டியில் இடம்பெற்றது. இதன்போது, தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
"தேசமானி, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஜனாதிபதி அன்றி, வேறு தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும்" என்ற விடயத்தினை தகவலறியும் விண்ணப்பத்திற்கான ஜனாதிபதி செயலகத்தின் பதிலின் ஊடாக "விடியல் இணையத்தளம்" கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வெளிக்கொண்டுவந்தது.
இந்த நிலையிலேயே தேசிய நன்மதிப்புப் பட்டங்களை முறைசாராத வகையில் வேறு நிறுவனங்களினால் வழங்குவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய விருதுகளில் தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக முறைசார்ந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்து தகைமைவுடையவர்களை குறித்த விருதுக்கு தெரிவுசெய்யவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
குறித்த விருதுகளுக்கு மேலதிகமாக கலை, இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டுவதற்காக விசேட கௌசல்யாபிமானி விருதும், தேசத்திற்கு வழங்கிய பெரும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக விசேட குடியரசு அபிமான விருதும் இலங்கையர்களுக்கு வழங்குவது பொருத்தமானதெனவும் அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
அதற்கமைய, தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பங்களைக் கோரி விருது வழங்குவதற்கான தெரிவுகளை மேற்கொள்ளவுள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பல்வேறு துறைகளில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் முகமாக 1986ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
1995.03.20ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதிகளால் இலங்கையர்களுக்கான ஸ்ரீலங்காபிமானம், தேசமானி, தேசபந்து, வித்யாஜோதி, கலாகீர்த்தி, ஸ்ரீலங்கா சிகாமணி, வித்யாநிதி, கலாசூரி, ஸ்ரீலங்கா திலகம், வீரபிரதாப போன்ற முறைசார்ந்த நடைமுறைகளுக்கமைவான விருதுகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் 1990.09.12ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீலங்காரஞ்சன, ஸ்ரீலங்காரத்ன மற்றும் ஸ்ரீலங்காரம்ய போன்ற விருதுகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
அத்துடன் 2008.02.08ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீலங்கா மிதரவிபூசன விருது இலங்கை மக்களுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களைப் பாராட்டி இலங்கையுடன் நல்லுறவுகளைப் பேணுகின்ற அரச தலைவர்களுக்கு வழங்கிக் கௌரவிப்பதுடன், இவ்விருது இலங்கையர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்ற தேசிய விருதுகள் வரிசையில் உயரிய விருதாகும்.
Comments (0)
Facebook Comments (0)