'வாக்காளர் அறிவூட்டல்' இலங்கைக்கு கட்டாயம்!

'வாக்காளர் அறிவூட்டல்' இலங்கைக்கு கட்டாயம்!

றிப்தி அலி

'வாக்காளர் அறிவூட்டல்' என்ற விடயம் இலங்கைக்கு மிகவும் கட்டாயமானதொன்றாகும் என ANFREL என்று அழைக்கப்படும் சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தெரிவித்துள்ளது.

"இலங்கையில் வாக்களிப்பு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை" எனவும் அந்த வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் 55 நாட்களுக்குள் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் மூலம் இந்த விடயம் தெளிவாக விளங்குகின்றது என ANFREL தெரிவித்தது.

தேர்தல் ஆணைக்குழு, உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியன இணைந்து 'வாக்காளர் அறிவூட்டல்' என்ற செயற்த்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் இந்த வலையமைப்பு கூறுகின்றது.

இந்த நடவடிக்கை தேர்தல் காலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படாமல் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரை தலைமையகமாகக் கொண்ட இந்த வலையமைப்பு, கடந்த 27 வருடங்களாக மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், இலங்கை போன்ற பல ஆசிய நாடுகளில் 75க்கு மேற்பட்ட தேர்தல் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடத்தப்பட்ட 12 தேர்தல்களில் இந்த வலையமைப்பு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்த வலையமைப்பு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் என்று 30 பேரைக் கொண்ட குழுவொன்றினால் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக வாக்களிப்பு,  வாக்கெண்ணல் போன்ற பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இந்த கண்காணிப்பாளர் கண்காணித்தனர். இக்கண்காணிப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையொன்றினை கடந்த நவம்பர் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த வலையமைப்பினால் வெளியிடப்பட்டது.

பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், சட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகம் ஆகிய ஆறு துறையினருக்கு குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்ற அடிப்படையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றாக இலங்கைக்கு மிகவும் கட்டாயமான 'வாக்காளர் அறிவூட்டல்' என்ற விடயத்தினை இந்த வலையமைப்பு முன்வைத்துள்ளது.

இந்த வருடம் 1.7 மில்லியன் பேர் வாக்காளர் இடாப்பில் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 35 இலட்சம் பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

இந்த எண்ணிக்கை பாராளுமன்றத் தேர்தலில் மேலும் 20 இலட்சமாக அதிகரித்து 55 இலட்சமாக மாறியுள்ளது. இதன் ஊடாக இலங்கை மக்கள் தேர்தல் வாக்களிப்பில் அக்கறையின்றி இருக்கின்ற விடயம் தெளிவாகின்றது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள், சிறைக்கைதிகள், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், பௌத்த பிக்குணிகள் மற்றும் அத்தியவசிய சேவையாளர்கள் ஆகிய துறையினர் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதற்கான வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாமையும் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான காரணமொன்றாகும். 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக செலுத்தப்பட்ட வாக்குகளில் மூன்று இலட்சம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதன் மூலம் வாக்களிப்பது தொடர்பில் இலங்கை மக்களுக்கு போதியளவிலான அறிவில்லை என்ற விடயமும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டே 'வாக்காளர் அறிவூட்டல்' என்ற விடயம் இலங்கைக்கு மிகவும் கட்டாயமானதொன்று என்ற முடிவுக்கு சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையினைப் பொறுத்த வரையில் 'வாக்காளர் அறிவூட்டல்' என்ற விடயம் தேர்தல் காலங்களில் மாத்திரமே நடைபெறுவதையே அவதானிக்க முடிகின்றது. இந்த அறிவூட்டல் அனைத்து காலப் பகுதியிலும் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டியுள்ளது.

இதனையே தற்போது சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு வலியுறுத்துகின்றது. அத்துடன் இந்த வலையமைப்பு கூறுவது போன்று நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த விடயத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மாறாக, தேர்தல் ஆணைக்குழுவினாலோ அல்லது தேர்தல் கண்காணிப்பாளர்களினாலோ மாத்திரம் இந்த விழிப்புணர்வு விடயத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இதேவேளை, கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தினை தேர்தல் ஆணைக்குழு வினைத்திறனாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக வேண்டி சுயாதீன் அலுவலகமொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட வேண்டும் எனவும் சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பதிவுசெய்யப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக கிடைக்கப் பெறுகின்ற வருமான விபரத்தினை சுயமாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அந்த வலையமைப்பு தெரிவிக்கின்றது.

பேஸ்புக், டிக்டொக், யுடியூப் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக ஊடங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போலி தேர்தல் பிரச்சாரங்களை கட்டுப்படுத்துவதில் பாரிய சவால்களை தேர்தல் ஆணைக்குழு எதிர்நோக்கி வருகின்றது. இதனை வலுத்தப்பதவும் நடவடிகை;கை எடுக்க வேண்டும் என அனைத்து தேர்தல் கண்காணிப்பாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மிகவும் அவசியமாகும். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் புதிய அரசாங்கத்தினால் இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவினை பலமிக்க ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற முடியும்.