தமிழ் முற்போக்கு கூட்டணி - இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஐவரடங்கிய குழுவினர் மனோ கணேசன் எம்பி தலைமையில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினை நேற்று (06) செவ்வாய்க்கிழமை இந்திய இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வி.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், வேலு குமார் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்ரா ஷாப்டர் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் அரசியல் பிரிவு கவுன்சிலர் பானு பிரகாஷ் ஆகியோர் உயர் ஸ்தானிகருடன் இணைந்திருந்தனர்.
கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் நடைபெற்றிருந்த இந்த சந்திப்பில் இலங்கையில் வாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினரின் மீது தாக்கங்களைக் கொண்டிருக்கும் சமகால விடயங்கள் மற்றும் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான விவகாரங்கள் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அதிகாரப் பகிர்வுக்கான தமது நம்பிக்கைகள் தொடர்பாகவும் அதேவேளை இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார மற்றும் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் என்ற அடிப்படையில் இலங்கையில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கான இந்தியாவின் ஆதரவு மற்றும் மாகாண சபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டியதற்கான அவசியம் ஆகியவை தொடர்பாக உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் ஆராய்ந்திருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)