தென் கிழக்கு பல்கலையின் பீடாதிபதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு
-எம்.வை.அமீர்-
தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இப்பதவி உயர்வு 05.09.2019 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பீடாதிபதி ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற் தடவையாகும்.
இப்பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சமூகவியல் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பவர்கள் மிகச்சொற்பமானவர்களே. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சமூகவியல் பேராசிரியர் விடயத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது.
இவ்வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக இளம் கல்விமானும் சமூகச் செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பதவி உயர்வு பெறுவது பாராட்டத்தக்கது.
இப்பதவி உயர்வின் மூலம் தனது பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றக்கூடிய ஒருவராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.
சாய்ந்தமருதினைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினைக் கொண்டவர். இவர் மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார்.
மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாகக் கொண்ட பேராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மியத்துல் சிபானாவினை மணமுடித்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார்.
பல்கலைக்கழக கல்வியினை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற்றுக்கொண்டார்.
2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சமூகவியல் முதுதத்துவமாணிப் பட்டத்தினை (2010) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின்படிப்பினை (2010) இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.
தனது கலாநிதி பட்டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இக்கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப்பரிசிலினை பெற்றுக்கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமான் பேராசிரியர் செய்ட் பரீட் அலடாஸின் வழிகாட்டலின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூகப் பிரச்சினைகள், தொடர்பாடல், இனத்துவம், அரசியல் சமூகவியல், சிறுபான்மைக் கற்கைகள் முதலிய ஆய்வுப் பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றிற்கும் பதவியுயர்த்தப்பட்டார்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவினை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும் பங்காற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி சேவைகள், சர்வதேச தொடர்புகள், பல்கலைக்கழக ஆசிரியர் விருத்தி நிலையங்களின் பணிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போது வரை அதன் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.
பீடாதிபதி என்றவகையில் தனது பீடத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவரது அயராத முயற்சியின் பயனாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து துறைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியியல், தமிழ்) பட்டப்பின்படிப்புக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் எமது பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப் பட்டத்தினை பல முறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், ஆசிய மன்றம் உள்ளிட்ட பல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆய்வு நிதிகளை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் 2019இல் கெய்சிட் என அழைக்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினைப் (பெலோசிப்) பெற்றுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)