60 வயதிற்கு மேற்பட்ட 1,38,000 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை

 60 வயதிற்கு மேற்பட்ட 1,38,000 பேர் இதுவரை  கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை

நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1,38,000 பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இது கண்டறியப்பட்டதாக அமைச்சின் செயலாளர் N.M.M. சித்ராநந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசியை பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதற்கிணங்க, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசியை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் N.M.M. சித்ராநந்த தெரிவித்தார்.

இதனிடையே, கொழும்பு நகரில் 60 வயதிற்கு மேற்பட்ட 92 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

எஞ்சிய 8 வீதமானவர்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலர் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை கட்டமைப்பில் உள்ளடக்கப்படாத பெரும்பாலானோர் வீடுகளில் சிகிச்சை பெறுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், அனைவரையும் கவனத்திற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக அவர் கூறினார்.