இலங்கையின் ஆபரணத் தொழில் துறைக்கு தென்னாபிரிக்காவில் கதவுகள் திறப்பு
இலங்கையின் ஆபரணத் தொழில் துறைக்கு தென்னாபிரிக்காவில் கதவுகள் திறக்கப்படுள்ளதாக தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ரொபினா பி. மார்க்ஸ் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவின் ஆபரணத் தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை கைவினைஞர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து வெளிச்செல்லும் தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ரொபினா பி. மார்க்ஸ், வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினை வெளிநாட்டு அமைச்சில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில்நுட்ப இடைவெளிகளால் அறுவடையில் 40% நாட்டில் வீணடிக்கப்படுகின்றமையால், இலங்கையில் உணவு மற்றும் மரக்கறித் தொழிலுக்கான பதப்படுத்தல் தொழில் துறையில் தென்னாபிரிக்காவின் நிபுணத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன கோரினார்.
அது தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
தென்னாபிரிக்க விநியோக வலையமைப்பின் மூலமாக ஆபிரிக்கக் கண்டத்திற்கான தேயிலை ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தென்னாபிரிக்காவின் பல்பொருள் அங்காடிச் சங்கிலியான எஸ்.பி.ஏ.ஆர். இலங்கையில் சுமார் 20 அலகுகள் வரை விரிவாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த வெளிச்செல்லும் உயர் ஸ்தானிகர், இலங்கைத் தயாரிப்புக்களை தென்னாபிரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தென்னாபிரிக்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் கொள்கலன்களை பயன்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார்.
இறுதியாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேலும் பலப்படுத்துவதற்கு மகத்தான பங்களிப்புக்களை மேற்கொண்டமைக்காக, உயர் ஸ்தானிகருக்கு வெளிநாட்டு அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது, அமைச்சின் ஆபிரிக்க அலுவல்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுமித் தஸநாயக்க அவர்களும் வெளிநாட்டு அமைச்சருடன் இணைந்திருந்தார்.
Comments (0)
Facebook Comments (0)