முறையற்ற அபிவிருத்தியினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது: மாநகர சபை உறுப்பினர் மனாப்
கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூதாய தூய்மை இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 18.7 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வரும் கல்முனை மாநகர பேருந்து நிலைய அபிவிருத்தியில் திருப்தியில்லா நிலை உள்ளதாகவும் அதனை சபை அமர்வுகளில் கேட்டால் உரிய பதில்கள் கிடைக்காமல் அலைக்கழிப்படுவதாகவும், அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் கல்முனை மாநகரத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுவதாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். எச்.எம். அப்துல் மனாப் குற்றஞ்சாடினார்.
கல்முனையில் இன்று (17) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர்,
"கல்முனை மாநகர பேருந்து நிலையத்தில் கல் பதிப்பதானது தூரநோக்கு சிந்தனையில்லாதவர்களின் செயலாகவே நான் பார்க்கிறேன். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் இந்த கற்கள் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்பதே கேள்விக்குறி.
இது தொடர்பில் ஆளும்தரப்பின் உறுப்பினர் ஒருவர் கொரோனா அலையையும் கவனத்தில் கொள்ளாது இந்த மோசமான அபிவிருத்தியை எதிர்த்து போராட்டம் செய்திருந்தமையும், அவரது போராட்டத்தை கூடிய சீக்கிரமே முடித்து இந்த விடயத்தை கல்முனை மாநகர முதல்வர் ஊடகங்களை அழைத்து மழுப்பல் கதைகளை கூறியதையும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இப்போது அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் மரம் எனக்கூறி வெறும் கம்புகளை நாட்டிவைத்துள்ளனர். இதற்கும் பெருந்தொகை செலவானதாக கணக்குகள் வெளியாகும்.
கல்முனை மேயரின் மிகநெருங்கிய உறவினர் ஒருவருக்கு இந்த வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பதற்காக போலியான அபிவிருத்தி மாயையை காட்டி மக்களின் வரிப்பணத்தை சுரண்டுகிறார்கள்.
இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான கல்முனை மாநகர பேரூந்துநிலைய சந்தை கட்டிடங்களின் நிலை, அவசர தேவைகளை பூர்த்தி செய்ய கூட முடியாதளவிற்கு ஒழுங்கான கழிப்பிட தொகுதி கூட இல்லாதளவிற்கு இருக்கிறது.
இவற்றையெல்லாம் மாநகர சபை அமர்வுகளில் தட்டிக்கேட்டால் பதிலளிக்காமல் விடயத்தை திசைதிருப்புகிறார்கள். இது போன்று பல சம்பவங்களும், கொள்ளைகளும், சுரண்டல்களும் கல்முனையில் நடக்கிறது.
இது தொடர்பிலான பல்வேறு முறைப்பாடுகளை பல சந்தர்ப்பங்களில் செய்து உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். கணக்காய்வாளர் திணைக்களம், உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் போன்றோர்கள் கல்முனை மாநகர சபை விடயங்களில் பாராமுகமாக இருப்பது கவலையளிக்கிறது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)