இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பின் மூலமான துரிதமான தீர்வுக்கு இந்தியா ஆதரவு
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள், மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தமது அபிலாசைகளை நனவாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் துணை நிற்பதாக இந்தியா மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.
2022 ஜூலை 14ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஓர் ஊடக சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர், இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கம் தொடர்பான தற்போதைய நிலைப்பாடுகளுக்கு ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக உடனடியான தீர்வொன்று முன்வைக்கப்படுவதை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னேற்றகரமான வழிகளைக்கண்டறிவதற்கான சகல முயற்சிகளுக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலை காரணமாக எழுந்துள்ள சவால்களை
எதிர்கொள்வதற்கு அந்நாட்டு மக்களுக்கு வழங்கிவரும் ஆதரவுகளில் காண்பிக்கப்படும் இந்தியாவின் அர்ப்பணிப்பு, அயலுறவுக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கையையும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டையும் சுட்டிக்காட்டுகின்றது.
மேலும், இலங்கை மக்களுடனான கூட்டொருமைப்பாடும் இந்தியாவின் ஆதரவும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார இடர்பாடுகளிலிருந்து இலங்கை மக்கள் மேலெழுவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் துரிதமாக பதிலளித்து செயற்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்த ஊடகப்பேச்சாளர், 2022 இல் மாத்திரம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியினை துரித கதியில் தீர்மானம் மேற்கொண்டு இந்தியா வழங்கியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
நாணய பரிமாற்றங்கள், ஆசிய கணக்கு தீர்வக ஒன்றியத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கான மீள் கொடுப்பனவு ஒத்திவைப்பு, எரிபொருள் உணவு, மருந்து, உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்களுக்கான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவி திட்டங்கள் ஆகியவை இந்த உதவிகளில் அடங்குகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது அவரது பயணத்துக்கோ ஆதரவு வழங்கியதாக கூறப்பட்ட கருத்துகளையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
(இந்த ஊடக அறிக்கைக்கான உள்ளீடுகள் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அவர்களால் புதுடில்லியில் 2022 ஜூலை 14 ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலிருந்து பெறப்பட்டவை)
Comments (0)
Facebook Comments (0)