கொட்டியாகலை கிராமத்திற்கான வீதி ஜப்பானினால் நிர்மாணம்

கொட்டியாகலை கிராமத்திற்கான வீதி ஜப்பானினால் நிர்மாணம்

ஊவா மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போதுஇ இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ இசோமடா, மொனராகலை மாவட்டத்தின் கொட்டியாகலை கிராமத்தில் 2.5 கி.மீ நீளமான வீதியினை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த வீதி, அடிப்படை மனித பாதுகாப்பிற்கான உதவித் திட்டத்தின் கீழ், மக்கள் வசதியாக அணுக முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட மொனராகலை மாவட்டம் இலங்கையின் குறைந்த அபிவிருத்தியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது. 

கொட்டியாகலை கிராமத்தின் குடியிருப்பாளர்கள் அயல் கிராமங்களில் அத்தியாவசிய சேவைகளை அணுக செப்பனிடப்படாத பாதைகளை நீண்ட காலமாக பாவித்துள்ளனர். 

மோசமான சாலை நிலைமைகள், குறிப்பாக மழைக்காலங்களில், பள்ளி வருகை, சுகாதார அணுகல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளன. இந்த புதிய சாலை உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்தை அணுக உதவுவதோடு, சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

இந்த நிகழ்வில், தூதுவர் இசோமடா, இலங்கை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஜப்பான் உறுதியாகச் செயல்படுவதற்கு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், இலங்கையின் நிலையான அபிவிருத்தியின் அடித்தளம் ஒவ்வொரு தனிநபரின் செயலூக்கமான ஈடுபாட்டாகும் என்பதை வலியுறுத்தினார்.