இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஸெய்யித் முஹம்மத் மறைந்தார்
எம்.எச்.எம். ஹஸன்
உதவிப் பொதுச் செயலாளர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் அவர்கள் தனது 90வது வயதில் மாவனல்லை, ஹெம்மாதகமை, மடுள்போவையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (03.05.2020) காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
முஹம்மத் யூசுப் ஸெய்யித் முஹம்மத் அவர்கள் ஹெம்மாதகம மடுள்போவையின் பிரபல ஆலிம் யூசுப் மௌலவியின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். அளுத்கம, தர்கா நகர் அல்ஹம்ரா பாடசலையில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற இவர், பின்னர் அங்கு தொழில் நிமித்தம் தங்கியிருந்தார்.
சமகாலத்தில் சமூக ஆர்வமுள்ள பல இளைஞர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிரபல தொழிற்சங்கவாதியும் அமைச்சருமாக இருந்த அலவி மௌலான இவரது நெருங்கிய நண்பர் ஆவார்.
பிற்காலத்தில் பிரபல கல்விமானாகத் திகழ்ந்த தர்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம்.சுஹைப் என்பவரோடு இணைந்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1947 காலப் பகுதியில் தர்கா டவுனிலும் கம்பளை- ஹெம்மாதகமை வீதியில் அமைந்துள்ள “தெல்கஹதெனிய” எனும் கிராமத்திலும் வாசிகசாலைகளை நிறுவி வாசிப்பின் பாலும் அறிவுத் தேடலின் பாலும் மக்களைத் தூண்டினார்.
தெல்கஹதெனியவில் அமைக்கப்பட்ட வாசிகசாலையின் திறப்பு விழாவுக்கு கம்பளை ஸாஹிரா கல்லூரியின் அன்றைய அதிபர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1954ஆம் ஆண்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் அமர்வில் கலந்துகொண்ட 13 பேரில் ஒருவரான ஸெய்யித் முஹம்மத் அவர்கள், ஒரு பழம் பெரும் ஜமாஅத் அங்கத்தவராகவும் அனைவரதும் கொளரவத்துக்கம் நன்மதிப்புக்கும் உரியரவாக திகழ்ந்தார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முதலாவது அமீராக அதன் ஸ்தாபகர் எம்.ஏ.ஸீ.ஜெய்லானி ஹஸரத் அவர்கள் 1954இல் பதவியேற்றார். அவர் இந்தியா செல்ல இரண்டாவது அமீராக யூ.எல். தாஸிம் நத்வி தெரிவுசெய்யப்பட்டார். 1958 மே மாதம் 22ஆம் திகதி தாஸிம் நத்வி அவர்கள் ஹஜ் கடமைக்காக சென்றபோது பதில் அமீராக ஸெய்யித் முஹம்மத் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அவரே அமீராக பணியாற்றினார். செப்டம்பரில் அடுத்த ஆண்டுக் காலத்திற்கான அமீரைத் தெரிவு செய்யும் தேர்தலில் தாஸீன் நத்வி அவர்கள் அமீராக தெரிவுசெய்யப்பட்டாலும் அவர் தனது அசெளகரியங்களைக் கூறி மறுக்கவே மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது ஸெய்யித் முஹம்மத் அவர்கள் அமீராக தெரிவுசெய்யப்பட்டார்.
அவர் அப்பதவியை ஏற்கும்போது ஒரு வருடம் மட்டுமே தான் பதிவியில் இருப்பதாக நிபந்தனை விதித்து அப்பதவியை ஏற்றார். அவர் கூறியபடியே 1959 செப்டம்பர் வரை மட்டுமே அவர் பதவி வகித்தார்.
ஸெய்யித் முஹம்மத் அவர்கள் ஜமாஅத்தின் அமீராக இருந்த காலத்தில் நாட்டின் நாலா பக்கங்களுக்கும் சென்று இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், மர்தஸாக்கள் என்று பல இடங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தினார்.
1959இல் யாழ்ப்பாண முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் மீலாத் விழாவில் பிரதம பேச்சாளராக ஸெய்யித் முஹம்மத் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது. அங்கு அவர் “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை அன்றும் அதன் பின்னரும் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. முஸ்லிம் அல்லாத பலரும் அவ்விழாவில் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்ப காலத்தில் அவர் தனது பிரதேசத்தில் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளை ஆரம்பித்தபோது பலத்த எதிர்ப்புகளுக்கு ஆளானார். புதிய மார்க்கத்தைச் சொல்வதாகக் கூறிய சிலர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இவரை எதிர்க்கச் செய்தனர்.
மடுள்பேவைப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது தும்புளுவாவையைச் சேர்ந்த இந்தியாவில் ஓதிப் பட்டம் பெற்றிருந்த ஓ.எல்.எம். இப்றாஹீம் ஆலிம் அவர்கள் உண்மைகளை எடுத்துக் கூறிய பின்னரே எதிர்ப்பு ஓரளவு தணிந்தது.
வழிகாட்டி பத்திரிகையில் ஆக்கங்களை எழுதி வந்ததோடு வாராந்த குர்ஆன் விளக்க வகுப்புகளை நடத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டார். அமீராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் 1957களில் அவர் பாகிஸ்தான் சென்று 6 மாதங்கள் கல்வி கற்றார்.
மேலும் பாகிஸ்தானில் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களையும் பாகிஸ்தான் செல்லும் வழியில் அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்களையும் சந்தித்து உரையாடினார்.
1960களின் பின் ஜமாஅத்தின் பணிகளிலிருந்து சற்றுத் தூரமாக இருந்தாலும் மௌலவி ஏ.எல்.எம். இறாஹீம் அவர்கள் அமீராகத் தெரிவுசெய்யப்பட்ட 1980களில் மீண்டும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அன்றைய ஜமாஅத்தின் ஐ.பீ.ஸீ. அச்சகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார்.
பின்னர் இஸ்லாமிக் புக் ஹவுஸைப் பொறுப்பேற்று நீண்ட காலமாக அதனை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஒரு சாதாரண புத்தக விற்னை நிலையத்தை இலங்கையில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தக இல்லமாக மாற்றியமைத்தார். அரபுக் கல்லூரிகள், இஸ்லாமிய கல்வி நிலையங்களுக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இடமாகவும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சஞ்சிகைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமான ஒரு தரமான புத்தக நிறுவனமாகவும் அதனை மேம்படுத்தினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையாரான ஸெய்யித் முஹம்மத் ஹஸரத் அவர்கள், மார்க்க விடயத்தில் மிகவும் பேணுதலாக நடந்தவர். அனைவருடனும் இனிமையாகப் பழகக்கூடிய மென்மையான பண்புகள் கொண்டவராக அவர் விளங்கினார்.
இஸ்லாமிக் புக் ஹவுஸில் அவர் முகாமையாளராக பணியாற்றியபோது தமிழ் நாட்டிலும் இலங்கையிலுமுள்ள ஏராளமான எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் அவருடன் தொடர்பு வைத்திருந்தனர். புத்தகங்களைக் கொள்வனவு செய்ய வரும் வாடிக்கையாளர்கள்கூட ஒரு முறை அவரை சந்தித்து ஸலாம் கூறிவிட்டுச் செல்கின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அங்குரார்ப்பண ஆரம்ப உறுப்பினராக இணைந்து கடந்த 66 வருடங்களாக ஆர்வத்துடன் கடமையாற்றி பல காத்திரமான பணிகளை ஆற்றி அனைவரது நன்மதிப்புக்கும் கௌரவத்துக்கும் ஆளான எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சுவனபதியை வழங்க புனித ரமழானில் வல்ல அல்லாஹ்வைப் பிராத்திப்போம்.
Comments (0)
Facebook Comments (0)