உயிராபத்தை ஏற்படுத்தும் புகைத்தலை ஒழிப்போம்

உயிராபத்தை ஏற்படுத்தும் புகைத்தலை ஒழிப்போம்

மனிதனின் சுக வாழ்வுக்கு அச்சுருத்தலாக இருந்துவரும் புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையானது உடல் உள சமூக ரீதியான பாதிப்புக்களையும் இறுதியில் உயிராபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

புகையிலை பாவனை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகில் 8 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நேரடி புகையிலை பாவனையின் மூலமும் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பவர்களினால் விடப்படும் புகையினை சுவாசிப்பதனாலும் நோய்களுக்கு ஆளாகியும் மரணமடைகின்றனர்.

கொரோனா நோய்த் தாக்கத்தை அதிகரிக்கும் புகையிலைப் பாவனை:

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தற்போது உலகம் முழுவதும் திடுக்கிடச் செய்து உயிர்களையும் பறித்துக் கொண்டிருக்கும் COVID-19 புகைப்பவர்களின் உடலில் கடுமையான நோயை உருவாக்குவதுடன் அதிக இறப்புக்கும் காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

COVID-19 தொற்று ஏற்படும் போது அது நுரையீரலைப் பாதிப்புக்குள்ளாக்கி அதன் செயற்பாட்டுத் திறனைக் குறைப்பதால் ஆபத்தான நோய்நிலைகளையும் ஏற்படுத்துகின்றன. இதனால் உலகில் கொரோனா இறப்புக்களை குறைப்பதற்கு புகைப்பிடிப்பவர்களை அதில் இருந்து வெளியேற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை WHO வலியுறுத்தி கூறியுள்ளது.

ஒருவர் சிகரட் புகையினை உள்ளெடுத்து 20 நிமிடங்களினுள் இதயத்துடிப்பு மற்றும் குருதியோட்டம் அதிகரிக்கின்றது. 12 மணி நேரத்தில் இரத்தத்தில் கார்பன் மோனொக்சைட்டு அளவு அதிகரிக்கும். 2 தொடக்கம் 12 வாரங்களுக்குள் நுரையீரலின் செயற்பாடு அதிகரித்து 1 தொடக்கம் 9 மாதங்களுக்குப் பிறகு இருமல் மூச்சுத்திணறல் அதிகரிக்கின்றது. இதனால் நியுமோனியா சுவாச நோய் ஏற்படுகின்றது.

புகைப்பிடிப்பவர்கள் சிகரட்டினை தங்களின் விரல்களினால் பிடித்து வாயில் வைத்து உறுஞ்சும் போது கையில் உள்ள COVID-19 கிருமிகள் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.. இதனால் WHO மற்றும் உலகிலுள்ள நாடுகளின் சுகாதாரப் பிரிவினர் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதனால் கொரோனா நோய்த்தாக்கத்தினைக் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

புகையிலை உற்பத்தியிலும் பாவனையிலும் பாரிய வீழ்ச்சி:

உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது புகைத்தல் பாவனையானது சுமார் 75% குறைவடைந்துள்ளதாக ஆய்வு அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது.

COVID-19 தொற்று ஏற்பட்டதன் பின்னர் இலங்கையில் மதுப்பாவனை மற்றம் போதைப் பொருள் தகவல் நிலையம் (ADIC) மேற்கொண்ட ஆய்வுகளின்படி சாராயப்பாவனை 80% ஆலும் புகையிலைப்பாவனை 68%ஆலும் குறைவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான மாற்றத்திற்கு காரணம் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டமும் அதனால் மக்களினால் பேணப்பட்ட சமூக இடைவெளிக் கட்டுப்பாடும் அவர்களின் பொருளாதாரம் மற்றும் மனோநிலையில் புகையிலைப் பொருட்களின் தேவையின் அவசியத் தன்மையின் பின்னடைவும் புகையிலைப் பாவனையை தொடர்ந்து விடுவதற்கு வாய்ப்புகளாக காணப்படுகிறன. 

இந்த புகையிலைப் பாவனை இல்லாத வாழ்க்கையை சுவைத்த மக்கள் அதிக மகிழ்ச்சியையும் மனஆறுதலையும் அடைந்துள்ளனர். இதனால் புகைத்தல் மதுபாவனைக்காக செலவு செய்யும் வீணான பணம் சேமிக்கப்படுவதனை உணர்ந்து வியப்படைந்துள்ளார்கள்.

மேலும் COVID-19 காரணமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளவர்களில் 48% மானவர்கள் புகைப்பதை குறைத்துள்ளதுடன் 20%  மானவர்கள் முற்றாக நிறுத்தியுமுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறிருக்க COVID-19 தாக்கம் குறைந்து பழையநிலைய அடையும் போது புகைப்பதை கைவிட்டவர்கள் அல்லது பாவனையைக் குறைந்தவர்களில் 51% மானவர்கள் பாவிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ADIC நிறுவனத்தினர் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இளைஞர்களை இலக்கு வைத்துள்ள புகையிலை கம்பனிகள்:

பலசகாப்த காலமாக புகைத்தல் பாவனைக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டின் தரவுகளின்படி 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 17% உலகில் புகைக்கின்றார்கள். 13-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 13.8% புகைக்கின்றார்கள்.

எனவேதான் புகையிலைப் பாவணையைக் குறைப்பதற்கு இந்த குழுவினரைப் பாதுகாக்க வேண்டும். 20 வயதுக்கு முன்னர் புகைக்கும் பழக்கமுடையவர்கள் எதிர்காலத்தில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.            

இவ்வாறான சூழ்நிலை புகையிலைக் கம்பணிகளுக்கு ஒரு பாரிய தலையிடியாகவும், பிரச்சினையாகவும் மாறிவருகின்றது. இதற்கான தந்திரோபாயங்களையும், சூழ்ச்சிகளையும் கையாண்டு புகையிலைப் பாவனையை மீளவும் அதிகரிக்கச் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்காக புதிய பாவனையாளர்களாக இளைஞர்களை உள்ளீர்ப்பதுடன் வியாபார உற்பத்திக்கும் புதிய தலைமுறையை கொண்டு புகையிலைப் பாவனையின் வீதத்தை மீண்டும் அதிகரிப்பதுடன் இளைஞர் சமூகத்தை நஞ்சுண்ண வைக்க திட்டம் தீட்டி வருகின்றது இவ்வாறான கொலைகாரக் கம்பணிகள்.

இளைஞர்களை புதிய நுகர்வோராக ஈர்த்தெடுக்கும் வியாபார தந்திரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக உலக சுகாதார ஸ்தாபனம் 2020ம் ஆண்டு மே 31ல் அனுஷ்டிக்கும் உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக புதிய சந்தைப்படுத்தல் வியாபார தந்திரங்களிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

இதன் மூலம் சமூக ஊடகங்கள், வீடுகள், வகுப்பறைகளில் புகையிலைத் தொடர்பான பொய்களையும் மூடநம்பிக்கைகளையும் அகற்றுவதன் மூலம் எமது இளைஞர்களை புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துவது எம் அனைவரினதும் கட்டாய கடமைப்பாடாகும்.

05நாட்களில் புகையிலைப் பாவனையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஆலோசனை:

தற்போது உலகில் தோன்றியுள்ள கொரோனா நோய் வேறூன்றியுள்ள காலப்பகுதியாக இருந்த போதிலும் மறுபுறம் புகைப்பிடிப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பான காலமாகாலமாகவும் காணப்படுகின்றது.

குடும்ப உறவுகள் வழுப்பெற்றுள்ள நிலை மற்றும் புகையிலைப் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை போன்றன புகையிலைப் பாவனை இல்லாது வாழமுடியும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான ஊக்கத்தை தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் புகையிலைப் பொருட்களின் பாவனையிலிருந்து முற்றாக வெளியேற முடியும்.

குடும்பத்தினதும் தனதும் உடல்,உள ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு COVID-19 காலப்பகுதியிலிருந்தே புகைத்தலிருந்து விடுபடுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

தற்போது  நாம் குடும்பத்தோடு கழித்து வருகின்ற நாட்களில் 5 நாட்களை ஒதுக்கி குறிப்பிடப்படும் ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் வாழ்நாள் முழுவதும் புகையிலைப் பாவனையிலிருந்து விடுபடமுடியும்.

01ம் நாள்:
.................

புகையிலைப் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான காரணங்களைப் பற்றி முதலில் சிந்தியுங்கள்.நீங்கள் விடுவதற்காக எடுத்துள்ள தீர்மாணங்களை குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறி சிகரட் வாங்குவதை நிறுத்துவதாக முடிவெடுங்கள்.

02ம் நாள்
................

ஒரு நாளில் புகைக்கும் நேரங்களை அறிந்து அந்த நேரத்தில் புகையிலைப் பொருட்களுக்குப் பதிலாக வேறபழக்கங்களை (டொபி, சுவிங்கம், கருவா) போன்றவற்றை சிந்தித்துப் பட்டியல் படுத்தி செயற்படுத்துங்கள்.

03ம் நாள்
.................

சிகரட்டுக்காக செலவு செய்யும் பணத்தினைப் பற்றி சிந்தித்து இப்பணத்தில் வாங்கக் கூடிய குடும்பத்திற்கு அவசியமான பொருட்களைப் பட்டியல்படுத்துங்கள்.

04ம் நாள்
................

புகைக்கும் உணர்வு ஏற்படும் போது சுவிங்யம், டொபியைப் பயன்படுத்துதல். உடலில் புகைத்தல் காரணமாக ஏற்பட்ட துர்நாற்றங்களை அகற்றுதல்.

05ம் நாள்
.................

புகைக்காத நாட்களைப் பற்றி நினைத்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறி சந்தோசமடையுங்கள். பின்னர் பல் வைத்தியரைச் சந்தித்து பற்களை துப்பரவு செய்து கொள்ளுங்கள்.

மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை தொடர்ச்சியாக 05 நாட்கள் செயற்படுத்தி தொடர்ந்து புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசமாகவும் நீண்ட வாழ்வுடனும் வாழ முயற்சிப்போம்.

என்.எம்.நௌஸாத் (BA)
சிரேஷ் உளவளத் துணையாளர்
சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோத்தர்,
கல்முனை