அம்பாறை நகரம் நிர்வாக கேந்திரமாக அபிவிருத்தி செய்யப்படும்: மஹிந்த
அம்பாறை நகரம் நிர்வாக கேந்திரமாக அபிவிருத்தி செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கல்முனை, நற்பட்டிமுனை பிரதேசத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த பிரச்சார மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றும் போது கருத்து வெளியிடுகையில்,
"வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும்
நாங்கள் சொல்வதை செய்வோம்
செய்வதைதான் சொல்வோம்
இது உங்களுக்கு நன்றாக தெரியும்
எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேகர் என்ற பேதமில்லை
யாழ்ப்பாணம் முதல் அம்பாந்தோட்டை வரை
கொழும்பு முதல் கல்முனை வரை எல்லோருக்கும் சமமான அபிவிருத்தி
என்பது தான் எமது நோக்கம்
தாமரை மொட்டின் வெற்றி
உங்களின் வெற்றி
எமது நாட்டின் வெற்றி
சமாதானத்தின் வெற்றி
நன்றி வணக்கம்"
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர்,
அம்பாறை மாவட்டத்தில் உங்களின் கல்முனை பிரதேசத்திற்கு வருகைத்தர முடிந்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பிரதேசம் போன்று முழு அம்பாறையிலும் 30 வருட போரில் பாதிக்கப்பட்ட மக்களே வாழ்கின்றார்கள்.
சில பிரதேசங்களில் 20 வருடங்கள் கூடாரங்களில் அநாதைகள் போன்று வாழ்கின்றவர்களும் உள்ளனர். அதே போன்று போர் இடம்பெற்ற கால பகுதியில் யாருக்கும் சிறந்த பாடசாலைகள் குறித்து சிந்திக்க கிடைக்கவில்லை.
அதனாலேயே அந்த கால பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் குறித்து நினைக்க முடியவில்லை. சிறந்த தொழில்கள் குறித்து சிறந்த யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனக்கு நினைவிருக்கின்றது, அந்த காலத்தில் பாதைகள் அமைக்குமாறு, தொழில் வழங்குமாறு, பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு கூறும் போது, போருக்கு செலவிடப்படுகின்றமையினால் அவற்றிற்கு வழங்க பணம் இல்லை என கூறினார்கள்.
இன்னுமொரு பக்கம் போரினை நிறைவு செய்யுமாறு கூறிய போது கல்விக்கு, தொழிலுக்கு, வைத்தியசாலைகளுக்கு செலவிடுகின்றமையினால் போரிற்கு பணம் இல்லை என கூறினார்கள்.
இந்த நிலைமையை 30 வருடங்களாக காணப்பட்ட அரசாங்கங்கள் கொண்டு சென்றது. அம்பாறை, கல்முனை மாத்திரமல்ல முழு நாட்டு மக்களும் 20 வருடங்கள் இருளிலேயே வாழ்ந்தார்கள்.
30 வருடங்களாக காணப்பட்ட அந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். லட்ச கணக்கிலான மக்களுக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி நிம்மதியை பெற்றுக் கொடுத்தோம். நாங்கள் ஒரு போதும் மக்களுக்கு பொய் கூறவில்லை.
எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு வேலை செய்ய பணம் இல்லை என கூறினார்கள். எங்கள் அரசாங்கம் கடன் பெற்றமையினால் கடனை செலுத்துவதற்கேனும் பணம் இல்லை, அதனால் வேலை செய்ய முடியவில்லை என்றே கடந்த 4 வருடங்களாக அந்த அரசாங்கம் மக்களிடம் கூறியது.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் கடன் பெற்றுள்ளது, அதனால் நாட்டை அமைக்க முடியாதென நாங்கள் கூறவில்லை. கூறவும் மாட்டோம். நாங்கள் எப்படியும் இல்லை என்றும் கூற மாட்டோம். முடியாது என்றும் கூற மாட்டோம்.
அதேபோன்று நல்லிணக்கம் என கூறி கோடி கணக்கிலான பணத்தை கொழும்பில் இருந்து செலவு செய்து, இந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை மறந்து போலியான வேலைகளுக்கு பணம் செலவிடவும் மாட்டோம்.
கடந்த அரசாங்கம் நல்லிணக்க அமைச்சு ஒன்றை அமைத்தது. கொழும்பு ஹோட்டல்களில் இருந்துக் கொண்டு பட்டறைகள், விளம்பர வேலைத்திட்டங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் செலவிட்டுள்ளது. எனினும் நாட்டிற்கு கிடைத்த நல்லிணக்கம் ஒன்று இல்லை.
இனங்களுக்கு இடையில் விரிசலை தான் ஏற்படுத்தினார்கள். முஸ்லிம் மக்களின் வர்த்தகங்கள் சரிவடைந்தது. வீதிகளில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் முஸ்லிம் வர்த்தகங்கள் முதல் பாரிய முஸ்லிம் வர்த்தகங்களும் கடந்த அரசாங்கத்தின் போது சரிவடைந்தது.
பல பிரதேசங்களில் மோதல் ஏற்பட்ட போது அதனை தீர்ப்பதற்கு முன்வராமல் மறைந்துக் கொண்டார்கள். எனினும் நான் அந்த மக்களுக்கு மத்தியில் சென்று அவர்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.
பொத்துவில்லுக்கு அருகிலும் அக்கறைப்பற்றிற்கு அப்பால் உள்ள 7 கிராமங்களுக்கும் இன்னமும் குடி நீர் இல்லை. நல்லிணக்கத்திற்கு மேற்கொண்ட செலவில் அக்கறைப்பற்றிற்கு குடிநீர் வழங்கியிருந்தால் தாகமேனும் தீர்ந்திருக்கும்.
திருக்கோவில் வைத்தியசாலையில் எத்தனை வைத்தியர்கள் உள்ளனர்? ஒரு அம்பியுலன்ஸ் வண்டியே உள்ளது. VOG வைத்தியர்கள் இல்லை. நல்லிணக்கத்திற்கு செலவிட்ட பணத்தில் அந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்திருந்தால், நோய்களில் உயிரிழக்கும் மக்களும் இன்னமும் உயிரோடிருந்திருப்பார்கள்.
சம்மாந்துறைக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் நீண்ட தூரம் நடந்தே செல்கின்றார்கள். நல்லிணக்கத்திற்கு செலவிட்ட பணத்தில் பாடசாலை ஒன்றிற்கு பேருந்து ஒன்று வழங்கியிருந்தால் அந்த மாணவர்கள் சுதந்திரமாக நேரத்திற்கு பாடசாலைகளுக்கு சென்றிருப்பார்கள்.
இந்த பிரதேசத்தில் அதிகமாக கூலிக்கு வேலை செய்யும், விவசாயம் செய்யும் மக்களே உள்ளனர். படித்தவர்களுக்கு இந்த பிரதேசங்களில் தொழில் இல்லை. அந்த நல்லிணக்கத்திற்கு செலவிட்ட பணத்தை தொழிற்சாலை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தியிருந்தால், ஆயிரக்கணக்கான படித்த மாணவர்கள் இவ்வாறு அலைந்து திரிந்திருக்க வேண்டியதில்லை.
எங்களுக்கு தெரியும் இங்கு நுண்நிதி கடன் பெற்ற பலர் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் இந்த பிரதேச பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்தனர். இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினர் மத்திய வங்கியை உடைத்து பல பில்லியன் பணத்தை கொள்ளையடித்தார்கள்.
அவர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கும் போது கல்முனை மக்கள் நுண் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டனர். நீங்கள் கடந்த முறை தேர்தல்களில் உங்கள் வாக்குகளை யானைக்கு வழங்கினீர்கள். எனினும் காட்டு யானைகளிடம் இருந்து உங்களை காப்பாற்றுவதற்கு அந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை.
இன்னமும் இந்த பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை போன்று விவசாயத்தையும் காட்டு யானைகள் அழிக்கின்றது. வறட்சி ஒன்று ஏற்பட்டாமல் தினமும் நிவாரணம் கேட்டு செல்கின்றார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் உள்ளன. அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கு யாரும் ஒன்றும் செய்யவில்லை.
நாங்கள் எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தினுள் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும். இன்று கொவிட் 19 காரணமாக சுற்றுலா பயணிகள் வரவில்லை என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்தவுடன் நாங்கள் இந்த மாகாணங்களுக்கு முதன்மை இடத்தை வழங்க வேண்டும்.
அம்பாறை என்பது நிர்வாக நகரமாகும். எனினும் இன்னமும் இந்த நகரம் அந்த அளவிற்கு அபிவிருத்தியடையவில்லை. நாங்கள் அம்பாறை நகரத்தை நிர்வாக கேந்திரமாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இந்த பிரதேசங்களில் நீர்பாசன துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல நாங்கள் இந்த மாகாணங்களில் மக்களின் நீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இங்குள்ள குளங்களை மீள் திருத்தம் செய்யவது போன்று புதிய குளங்களை அமைக்க வேண்டும்.
நீங்கள் வீடுகளில் இருந்து ஆடை தொழிற்துறை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கை கொடுப்போம். உங்கள் ஆடை தயாரிப்புகளுக்கு சிறந்த சந்தை ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)