இறுதி மாதமும் இறுதிக் கடமையும்
மிப்றாஹ் முஸ்தபா (நளீமி)
நாம் அடைந்திருக்கின்ற இறுதி மாதமான துல்ஹஜ் பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கியிருக்கின்றது. அல்குர்ஆன் புனிதப்படுத்திக் குறிப்பிட்டுள்ள நான்கு மாதங்களில் இதுவும் ஒன்று.
சூறா அல் பஜ்ரில் அல்லாஹுத்தஆலா சத்தியம் செய்துள்ள பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களையே குறிப்பதாக இப்னு அப்பாஸ், இப்னு கஸீர், முஜாஹித் உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சூறா அல்ஹஜ்ஜின் 28 வது வசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது: “குறிப்பிட்ட அந்த நாட்களில் நீங்கள் அல்லாஹ்வின் பெயரை அதிகமதிகம் ஞாபகப்படுத்துங்கள்”. இந்த வசனத்தில் “குறிப்பிட்ட அந்த நாட்கள்” என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களையே சுட்டிக்காட்டுவதாக தப்ஸீர் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களான) இந்த நாட்களில் செய்கின்ற எந்தச் செயலும் மற்ற நாட்களில் செய்யும் செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” (புகாரி).
இன்னொரு அறிவிப்பிலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல்லமல்களும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவைகளாக இல்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமாக திக்ருகளை செய்யுங்கள்” (அஹ்மத்).
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப தினங்கள் ஏன் அல்லாஹ்விடத்திலே உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன என்பதை இமாம் இப்னுல் ஹஜர் அல்அஸ்கலானி (றஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: “இஸ்லாத்தின் தலையாய வணக்க வழிபாடுகள் அனைத்தையும் ஒருமிக்கச் செய்யும் ஒரு காலமாக துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் அமையப்பெற்றுள்ளன.
தொழுகை, நோன்பு, ஸதகா, ஹஜ், உழ்ஹிய்யா ஆகிய அனைத்தும் இந்நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை. ஆகவேதான் இந்த நாட்களும் இந்த நாட்களில் நிறைவேற்றப்படும் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவைகளாக காணப்படுகின்றன.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் நிறைவேற்றப்படுகின்ற மாதமாகவும் துல்ஹஜ் திகழ்கிறது. “ஹஜ்ஜுக்காக நீங்கள் மனிதர்களை அழையுங்கள். (அவ்வழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தவர்களாகவும், இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலைவில் இருந்தும் உங்களிடம் வருவார்கள்” (அல் ஹஜ்- 27).
ஹஜ் கடமையானது நபி (ஸல்) அவர்களது உம்மத்துக்கு மாத்திரம் விதியாக்கப்பட்ட ஒரு கடமையல்ல. மாறாக, அது காலாகாலமாக மனித சமூகத்தால் நிறைவேற்றப்பட்டு வருகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடமையாகும்.
பல இலட்சக் கணக்கான மக்கள் எத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இன்றி தங்களுடைய இறைவனை சந்திப்பதற்காக ஒன்றுகூடுகின்ற ஒரு சர்வதேச மாநாடாகவும் அதனை நோக்க முடியும்.
அறபா மைதானத்தில் வைத்து நபி (ஸல்) அவர்கள் மனித சமூகத்துக்குச் சொன்ன இறுதிச் செய்தியும் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10 ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘மக்களே இது எந்த நாள்’ எனக் கேட்டார்கள். மக்கள், ‘புனிதமிக்க தினம்’ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இது எந்த நகரம்” எனக் கேட்டதும் மக்கள், ‘புனிதமிக்க நகரம்’ என்றனர். பிறகு அவர்கள் ‘இது எந்த மாதம்’ எனக் கேட்டதும் மக்கள், ‘புனிதமிக்க மாதம்’ என்றனர்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்’ எனப் பலமுறை கூறினார்கள்.
பின்னர் ‘இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். என்னுடைய மரணத்திற்குப் பின்னர் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).
அந்தவகையில், ஹஜ் கடமை பல வகையான படிப்பினைகளை எமக்குக் கற்றுத் தருகின்றது. சுருக்கமாக அவற்றை பின்வரும் அடிப்படையில் நோக்க முடியும்.
1. நபி இப்றாஹீம் (அலை) அவர்களது வரலாற்றை ஞாபகப்படுத்தல்
இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகம் நிறைந்த வாழ்க்கை எமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தருவதோடு எமது ஈமானுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. அல்குர்ஆனிலே 70க்கும் மேற்பட்ட இடங்களில் இப்றாஹீம் (அலை) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இப்றாஹீம் (அலை) அவர்கள் காணப்படுகிறார்கள். “இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது” (அல் மும்தஹினா- 4).
இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக எதிர்நோக்கிய கஷ்டங்களையும் சவால்களையும் ஹஜ் கடமையானது எமக்கு ஞாபகப்படுத்தி நிற்கின்றது.
அதேபோன்று, இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் கட்டளையை மீறுதல் என்ற விடயத்தை நாம் காணவே முடியாது. “அவருக்கு அவருடைய இரட்சகன் நீர் எனக்குக் கீழ்ப்படியும் எனக் கூறிய போது அவர் அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன் எனக் கூறினார்” (அல்பகரா- 131).
தனது சமூகம் இணைவைப்பில் இருந்த போது அதனை எதிர்த்து நின்று, உறுதியாகப் போராடிய நபி இப்றாஹீம் (அலை) அவர்களது வரலாற்றை அல்குர்ஆன் அழகாகப் பதிவு செய்திருக்கின்றது. ஒரு சமூகம் சேர்ந்து செய்ய வேண்டிய பணிகளை தனி மனிதனாக செய்து காட்டிய பெருமை இப்றாஹீம் (அலை) அவர்களைச் சாரும்.
அதனால்தான் அல்குர்ஆன் அவர்களைப் பார்த்து இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. “நிச்சயமாக இப்றாஹீம் பின்பற்றப்படும் ஒரு தலைவராகவும் அல்லாஹ்வுக்குப் பயந்து அடிபணிபவராகவும் ஏகத்துவத்தின்பால் சார்ந்தவராகவும் இருந்தார்” (அந்நஹ்ல்- 120).
இப்றாஹீம் (அலை) அவர்களின் இத்தகைய தூய்மையான இறை நம்பிக்கையின் காரணமாக உலகம் அழியும் வரை முஸ்லிம்கள் தங்களது தொழுகைகளில் ஞாபகப்படுத்துமளவுக்கு அல்லாஹ் இப்றாஹீம் (அலை)அவர்களை கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.
“மேலும் தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவு செய்தோம். நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்” (அல் பகரா-130).
2. இஸ்லாமிய குடும்ப அமைப்பிற்கான முன்மாதிரி
ஹஜ் கிரியை நினைவூட்டும் மற்றுமோர் அம்சமாக இப்றாஹீம் (அலை) அவர்களது குடும்பத்தினரின் முன்மாதிரி திகழ்கின்றது. சத்தியத்தை எடுத்துரைத்த ஒரே காரணத்திற்காக இப்றாஹீம் (அலை) அவர்கள் தமது சமூகத்தால் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள்.
பல நாடுகளுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அவர்களுக்கு இருந்த ஒரேயொரு கவலை தன் மரணத்தின் பின் இஸ்லாத்தின் தூய கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சந்ததி இல்லாமலாகி விட்டது என்பது மட்டுமே. இந்தக் கவலையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்கினான்.
என்றாலும், நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு கிடைத்த தனது குழந்தையை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது, எவ்வித தயக்கமுமின்றி இறைவனின் கட்டளையை நிறைவேற்ற முன்வந்தமையானது ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
எனவேதான் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றத் துடிக்கும் கணவன், கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கின்ற மனைவி, பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கும் பிள்ளை போன்றோரை நாம் காண முடியும்.
அதேபோன்று ஆரோக்கியமான குடும்ப வாழ்வுக்கு கலந்துரையாடல் எவ்வளவு முக்கியமானது என்பதையும் இப்றாஹீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வினூடாக விளங்கிக் கொள்ள முடியும்.
தனது மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் தனது மகனான இஸ்மாயீல் (அலை) அவர்களோடு இப்றாஹீம் (அலை) அவர்கள் கலந்துரையாடலை மேற்கொள்கிறார்கள். “அவர் (தன் மகனிடம்) என் அருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்? என்று கேட்டார்” (அஸ்ஸாப்பாத்- 102).
இறைவனின் கட்டளையாக இருந்தபோதிலும் தனது மகனுடன் கலந்துரையாடி இப்றாஹீம் (அலை) அவர்கள் முடிவெடுத்தமையை அல்குர்ஆன் மேலுள்ள வசனத்தினூடாக எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. குடும்பத்தினருக்கு மத்தியில் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது குடும்ப வாழ்வை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ஆக்கிக் கொள்வதற்கான சிறந்ததொரு வழிமுறை என்பதை இப்றாஹீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு எமக்குக் கற்றுத் தருகின்றது.
3. இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்
ஹஜ் கடமை எமக்குக் கற்றுத் தரும் இன்னுமொரு படிப்பினையாக இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல் என்ற விடயம் காணப்படுகிறது. இந்த உலகில் இஸ்லாம் சொல்லும் வழியில் வாழ்கின்ற போது பல வகையாக கஷ்டங்களையும், சோதனைகளையும் ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் என்பது பொது நியதி. இந்த உண்மையை நாம் நபிமார்கள், ஸஹாபாக்கள், நல்லடியார்கள் போன்றோரின் வாழ்வில் காண முடியும்.
இப்றாஹீம் (அலை) இஸ்லாத்திற்காகப் பட்ட கஷ்டங்களையும், தியாகங்களையும் ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு அம்சமும் எம் மனக்கண் முன் கொண்டுவருகின்றது. ஹாஜரா (அலை) தனது ஏக புதல்வனை அல்லாஹ்வின் கட்டளை என்பதற்காக அறுப்பதற்கு விட்டுக் கொடுத்ததமை, இஸ்மாயீல் (அலை)தனது தந்தைக்கு ஏவப்பட்ட கட்டளையை மறுக்காமல் மனதார ஏற்றுக் கொண்டமை என்பன அல்லாஹ்விற்காகவும், இஸ்லாத்திற்காகவும் மனிதர்கள் இந்த உலகில் எதையும் இழப்பதற்கு, தியாகம் செய்வதற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.
இப்றாஹீம் (அலை) தனது மகனிடம் உன்னை அறுத்துப் பலியிடுமாறு இறைவனிடத்திலிருந்து கட்டளை வந்திருக்கிறது எனக் கூறிய போது இஸ்மாயீல் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் தியாகத்தின் முழு மொத்த வடிவமாகத் திகழ்கின்றன. “என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள் என்று கூறினார்”. (அஸ்ஸாப்பாத்- 102).
4. சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்
சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை முஸ்லிம் சமூகம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை ஹஜ் கிரியை தெளிவாக முன்வைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது இறுதிப் பேருரையில் கூட இந்த அம்சத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
“மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே. மேலும், உங்களுடைய தந்தையும் ஒருவரே. உங்களில் எந்தவொரு அரபியும் ஓர் அஜமியை விடவோ அல்லது எந்தவொரு சிவப்பனும் கறுப்பனை விடவோ சிறந்தவன் அல்ல. தக்வாவில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்”.
இன்று பிரதேசம், நிறம், மொழி என வேற்றுமைப்பட்டிருக்கின்ற மனித சமூகத்தை ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமைப்படுத்துகின்ற ஓர் உன்னதமான கிரியையாக ஹஜ் திகழ்கின்றது. இந்த விடயத்தை மௌலானா மௌதூதி (றஹ்) பின்வருமாறு விபரிக்கின்றார்கள்:
“உலகின் நாலா திசைகளிலும் இருந்து பல்வேறு உருவங்கள், நிறங்கள், மொழிகள் வேறுபட்டவர்கள் ஒரே கேந்திரத்தை நோக்கி வந்து, இஹ்ராம் என்ற ஒரே சீருடையை அணிந்து கொள்கிறார்கள். ஒரே கோஷத்தை எழுப்புகின்றார்கள்.
இதன் மூலம் அவர்கள் முழு உலகிற்கும் விடுக்கின்ற செய்தி, முழு அகிலத்துக்கும் பேரரசனான இறைவனின் இந்தப் படை, உலகின் ஆயிரக்கணக்கான சமுதாயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற இந்தப் படை ஒரே பேரரசின் படைதான் என்பதாகும்”.
5. மறுமை வாழ்க்கைக்குத் தயாராகுதல்
ஹஜ் கடமையானது மனித உள்ளங்களை விட்டும் உலக ஆசைகள் உள்ளிட்ட ஷைத்தானியப் பண்புகளை விரண்டோடச் செய்கின்றது. அல்லாஹ்வுக்கு பூரணமாகக் கட்டுப்படுகின்ற மனோநிலையை மனிதர்களில் ஏற்படுத்துவதோடு, மறுமைக் காட்சிகளை மனக்கண் முன் கொண்டு வருகின்றது. மேலும், உலோபித்தனத்தில் இருந்து உள்ளங்களை விடுவித்து, தாராள மனப்பாங்கை சமூகத்திற்குள் நுளையச் செய்கின்றது.
ஹஜ் கடமையானது குடும்பம், நாடு, செல்வம், அந்தஸ்த்து போன்ற மனித உள்ளம் இயல்பாகவே ஆசை கொள்கின்ற விடயங்களில் இருந்து மனிதர்களைத் தூரமாக்கி, மறுமை வெற்றிக்குத் துணை புரியக்கூடிய அல்லாஹ்வின் அருளையும் திருப்தியையும் பாவமன்னிப்பையும் நாடிச் செய்யப்படுவதால் அது ஓர் உயர்ந்த இபாதத்தாக நோக்கப்படுகின்றது.
அதனால்தான் தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்).
இமாம் அபூ ஹனீபா (றஹ்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் இஸ்லாமிய வணக்கங்களில் எது மிகவும் சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தார்கள். இவர்கள் ஹஜ் செய்து, அதில் மறைந்திருக்கின்ற எண்ணற்ற பயன்களைக் கண்ட போது அனைத்தையும் விட ஹஜ் நிச்சயமாக சிறந்தது எனத் தயக்கமின்றி தம் முடிவைத் தெரிவித்தார்கள்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஹஜ் தொடர்பாகக் கூறுகின்ற பின்வரும் வசனமும் அதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றது: “யார் ஹஜ்ஜை (தன் மீது) கடமையாக்கிக் கொண்டாரோ அவர் தாம்பத்திய உறவு கொள்வதும், கெட்ட பேச்சுக்கள் பேசுவதும், வீண் தர்க்கம் செய்வதும் கூடாது” (அல் பகரா- 197).
Comments (0)
Facebook Comments (0)