பிரதேச எல்லைகளை மீளாய்வு செய்ய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்
பிரதேச எல்லைகளை மீளாய்வு செய்வதற்காக எல்லை நிர்ணயக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை நேற்று (27) திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, புதிய பிரதேச செயலகப் பிரிவு நிறுவுதல், தற்போது நிறுவப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவை வர்த்தமானி மூலம் அறிவித்தல், கிராம அலுவலர் பிரிவை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தல் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர், மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றம் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜக்ஷவினால் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் தொடர்பான ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி தேவைகளுக்காகவும் மக்களின் தேவைகளுக்காகவும் நாட்டில் புதிய பிரதேச செயலகங்கள் நிறுவுவதற்கு, சில செயலகப் பிரிவுகள் மீள நிறுவுவதற்கும் தற்போது நிறுவப்பட்டுள்ளதும் ஆனாலும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படாததுமான பிரதேச செயலகப் பிரிவுகளில் எல்லை நிர்ணம் செய்வதற்கும், வர்த்தமானி அறிவித்தலுக்கும் புதிய கிராம அலுவலர் பிரிவை நிறுவுதல் மற்றும் தற்போதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளை மீளாய்வு செய்வதற்கும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களால் பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இச்செயற்பாடுகளுக்காக ஐந்து (05) வருடத்திற்கு ஒருமுறை எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்படல் வேண்டியதுடன், இறுதியாக 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள தொழிநுட்பக் குறைபாடுகளால் வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதனால் குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)