பண்டாரவளையில் மார்ச் 14 இல் RTI ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு
இரண்டாவது தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் முதலாவது விசாரணை அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
பகிரங்க அதிகார சபைக்கு இச்சட்டக்கோவையின் கீழ் விதந்துரைக்கப்பட்டுள்ள கடப்பாடுகளை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நிறைவேற்றுதல் தொடர்பில் பிரஜைகளிடையே நிலவும் பிரச்சினைகளினை இந்த விசாரணை அமர்வின் போது ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளித்து முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பீ சத்குமார தெரிவித்தார்.
இதற்குப் பொறுப்பு வாய்ந்த பகிரங்க அதிகார சபையை வரவழைத்து விசாரணை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 15(அ) இன் பிரகாரமே இந்த விசாரணை அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்தின் பிரிவு 14 (அ) இன் படி, பகிரங்க அதிகாரசபைகள் மீது இச்சட்டத்தால் இடப்பட்ட கடமைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதனைக் கண்காணிப்பதற்கும் உரியவாறு இணங்கியொழுகப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் சட்டத்தின் பிரிவு 15 (அ) இன் படி விசாரணைகளை நடாத்துவதும் அதன் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கவும் ஆணைக்குழு தீரமானித்துள்ளது.
இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் அல்லது மறுக்கும் பட்சத்தில் அல்லது அவரது உடைமையில் அல்லது அதிகாரத்தின் கீழ் தக்க வைத்துள்ள ஏதேனும் தகவல்களினை ஆணைக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் அல்லது மறுக்கும் பட்சத்தில் அல்லது சத்தியப் பிரமாணம் அல்லது உறுதி மொழி அளிப்பதன் கீழ் வேண்டுமென்றே பொய்யான தகவல் வழங்கும் எந்தவொரு நபரும் 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 39(1)(ஈ) இன் கீழ் குற்றமொன்றினைப் செய்வதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)