நாட்டில் 16 பள்ளிகளுக்கு பூட்டு
-ஏ.ஆர்.ஏ. பரீல்-
கடந்த 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து நாட்டில் செயற்பட்ட 16 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
பல்வேறு காரணங்களை முன்வைத்தே குறித்த 16 பள்ளிவாசல்களிலும் சமய வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாகீம் அன்சார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தௌஹீத் கொள்கைகளை பரப்புகின்றன என்ற சந்தேகத்தின் கீழும், பெரும்பான்மை இனத்தவர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டதையும் அடுத்தே அரசினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இப்பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகள் பூரணமாக ஆராயப்படும். இதன்போது, அப்பள்ளிவாசல்களில் பிரச்சினைகள் எதுவுமில்லை எனக் கண்டால், அவை புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் பரிந்துரைகளைப் பெற்று மீண்டும் திறக்கப்படும்
பாதகமான நிலைமைகளற்ற பள்ளிவாசல்களே இவ்வாறு மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும். அது போன்று, சுமுகமான நிலமையுள்ள பள்ளிவாசல்களை மீளத் திறப்பதற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிராந்திய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.
மூடப்பட்டுள்ள தௌஹீத் பள்ளிவாசல்களின் நிர்வாகம் அருகிலுள்ள பெரிய பள்ளிவாசலிடம் கையளிக்கப்பட்டால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதன் மூலம் அங்கு தமது சமயக் கடமைகளை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்" என்றார்.
விடிவெள்ளி
Comments (0)
Facebook Comments (0)