3 ஆண்டுகளுக்குள் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

3 ஆண்டுகளுக்குள் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய செயற்படும் வாழ்வாதார மேம்பாட்டுக்குழுவின் முதலாவது கலந்துரையாடல் மாத்தளை மாவட்டத்தில் நேற்று (09) திங்கட்கிழமை இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் மேற்பார்வையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும்.

மாத்தளையில் இடம்பெற்ற குறித்த தேசிய வேலைத்திட்டத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்குழு கலந்துரையாடலில் அந்தந்த அமைச்சுக்களினால் மாத்தளை மாவட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

01.    சுற்றுலாத்துறை:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

மாத்தளை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து சுற்றுலா வலயமொன்று நிறுவப்படுவதுடன், அதற்கு மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான 500 ஹெக்டேயர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

02.    விவசாயத்துறை:

விதை உற்பத்தியை செயற்படுத்துவதற்கு ஒரு பாரிய திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரிய வெங்காயம் விதைகளை தம்புள்ளையிலும், உருளைக் கிழங்கு விதைகளை நுவரெலியாவிலும், மிளகாய் விதைகளை கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும்  உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்க விவசாய காப்புறுதியை முறையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாய காப்புறுதியை 2 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குள் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் இறக்குதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கௌரவ அமைச்சர், அதற்கு தேவையான விதை உற்பத்திக்கு 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கென 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாக  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தம்புள்ளை உர களஞ்சியசாலை உருவாக்குவதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றி, மாத்தளை உர களஞ்சியசாலையின் பணிகளை மேன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

03.    வனஜீவராசிகள்:

மாத்தளை மாவட்டத்திலுள்ள காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு வனஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் மின் வேலிகளை அமைப்பதற்கு கமத்தொழில் அமைச்சு 25 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சில கிராமங்கள் வனப் பகுதிகளில் அமைந்துள்ளமை தொடர்பில் இதன்போது கவனத்திற் கொள்ளப்பட்டதுடன், கிராம மக்கள் பிரச்சினைகள் இன்றி வாழ்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன், வன வளங்களை பாதுகாப்பதும் முக்கியமானதாகும் என வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர்  சி.பீ.ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க, அநுராத ஜயரத்ன, டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கோட்டேகொட, பிரமித்த பண்டார தென்னகோன், ரோஹன திசாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி சார்பாக பிரதமர் ஊடக பிரிவு