தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு மூவர் சிபாரிசு
நூருள் ஹுதா உமர்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உப வேந்தர் பதவிக்கு மூவரின் பெயரியனை பல்கலைக்கழக பேரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று (26) வெள்ளிக்கிழமை சிபாரிசு செய்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மற்றும் கலை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகிய மூவருமே உப வேந்தர் பதவிக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உப வேந்தர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இப்பல்கலைக்கழத்தின் முன்னாள் உப வேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் ஐந்து பேரை பல்கலைக்கழக பேரவைக்கு சிபாரிசு சொய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழு இன்று கூடி இப்பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரை சிபாரிசு செய்தது.
இதிலிருந்து மூவரை தெரிவுசெய்வதற்காக இன்று மாலை பல்கலைக்கழக பேரவை கூடியது. இதன்போது மேற்குறிப்பிட்ட மூவரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)