தடுப்பூசி ஏற்றுவது பற்றிய ஒரு கருத்து
அஷ்ஷெய்க் S.H.M. பளீல் (நளீமி)
பத்வாவுக்கான சர்வதேச இஸ்லாமிய மன்றங்களும் முன்னணி இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ள சூழ்நிலையில் அதனை பின்வருமாறு அணுகலாம்.
தடுப்பூசி ஏற்றிக் கொள்வது:-
தற்காப்பு முயற்சி- மார்க்கக் கடமை
இது மார்க்கம் கூறும் தற்காப்பு முயற்சிகளில் ஒன்றாகும். "ஈமான் கொண்டவர்களே! முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்."(அல்குர்ஆன்)
"உங்களையே நீங்கள் அழிவுக்குள் தள்ளிக்கொள்ளாதீர்கள்" (அல்குர்ஆன்)
"ஒட்டகையைக் கட்டு;அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை!" (ஹதீஸ்)
"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. மருந்து செய்யுங்கள்" (ஹதீஸ்)
துறை சார்ந்த நிபுணர்களைக் கேளுங்கள்!
ஒரு விவகாரம் தொடர்பாக சுயமாக முடிவெடுக்க முடியாமல் போகும் போது அந்த துறை சார்ந்தவர்களது ஆலோசனையைப் பெறவேண்டும் என்ற வகையில் சுகாதார துறையில் இருக்கின்றவர்களது ஆலோசனைகளின் பேரில் தான் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
"உங்களுக்கு தெரியாவிட்டால் வேதத்தை உடையவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன்)
"அவர்களது விடயங்கள் ஆலோசனையின் அடிப்படையிலேயே இடம்பெறும்" (அல்குர்ஆன்)
துறை சார்ந்த முஸ்லிம் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நாம் ஏற்று நடக்க வேண்டும்.
சுகாதார துறையில் முஸ்லிம் வைத்தியர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவ அறிவை மாத்திரமன்றி இஸ்லாமிய உணர்வோடும் அல்லாஹ்வை பயந்த நிலையிலும் இருப்பதாகவே காணுகிறோம்.
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொள்வது நல்லதல்ல என்றிருந்தால் அவர்கள் அது பற்றிக் கூறியிருப்பார்கள். மாறாக அவர்கள் தடுப்பூசி ஏற்றும் படி ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் சுயநலனுக்காக நிலைப்பாடுகளை எடுத்தால் கியாமத் நாளில் அல்லாஹ்விடம் நிச்சயமாக சிக்கிக்கொள்ள வேண்டி வரும். சந்தேகமில்லை.
ஆதாரபூர்வமாக அணுகுவோம்
தடுப்பூசி ஆபத்தானது, எனவே ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று எவராவது சொல்வதாயின் அவர் அதற்கு விஞ்ஞான பூர்வமான, அறிவு பூர்வமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமே தவிர ஆங்காங்கே உலாவரும் தகவல்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.
தடுப்பூசி என்பது நோய்த்தடுப்புக்காக உலகில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்வுத் திட்டம். அதேநேரம் அது பிழையானது என்று கூறுவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இத்திட்டம் பிழையானது அல்லது ஆபத்தானது என்றால் அதற்கான பதிலீடு என்ன என்றும் அவர்கள் சொல்ல வேண்டும். யாருக்கும் குறை சொல்லலாம் .ஆனால் காத்திரமான தீர்வுகளையும் சொல்ல வேண்டும்.
சதிகள் இருப்பதை நாம் அறிவோம்
சதிவலைகள் பற்றிய கோட்பாட்டுகள் (Conspiracy Theories) என்பது உலகத்தில் வெகுவாக பேசப்படுகின்ற ஒரு கருத்து. இலுமினாட்டிகள், பண முதலைகள், சுயநலமிகள் போன்றோர் இருகக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
Drugs Mafia என்பதை வைத்தியர்கள் கூட மறுக்க முடியாது. உலகம் சதிகாரர்களது கையில் சிக்கியிருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால், குறை கூறிக் கொண்டிருக்கும் நாம் உலகத்துக்கு ஆக்கப்பூர்வமாக எதனை வழங்கினோம்? எமது பதிலீடுகள்- தீர்வுத் திட்டங்கள் (Alternatives) எவை?
ஹராமான உள்ளீடுகள் சில பல மருந்துகளில் இருப்பதாக நாமும் ஏற்கிறோம். ஆனால், ஹலாலான உள்ளீடுகள் கொண்ட மருந்துகளை உருவாக்கும் Pharmaceutical Companies களை உருவாக்கவும் அவற்றுக்கான வளங்களை திரட்டவும் நாம் எத்தனை ரூபாய்களை செலவழித்திருக்கிறோம்?
முஸ்லிம் கர்ப்பவதிகள் பிள்ளைப் பேறின் போது அன்னிய ஆண்களுக்கு அவ்ரத்தை காட்டக் கூடாது என்று நாமும் நீங்களும் பேசுகிறோம். ஆனால் எமது முஸ்லிம் பெண்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தியர்களாகவும் மகப்பேற்று நிபுணர்களாகவும் மாற்றுவதற்கு எந்த அளவு கரிசனை எடுக்கிறோம்?
இவையெல்லாம் நியாயமான கேள்விகள். இவை விடை காணப்படாத கேள்விகளாக தொடர்ந்தும் இருந்து வருகின்ற பொழுது எமது சர்ச்சைகள் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. நாம் முயற்சிக்காத போது ஏற்கனவே அத்துறையில் முயற்சி செய்துகொண்டிருப்போரில் தான் தங்கியிருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், இப்போது நமக்கு முன்னால் ஒரு சிகிச்சை வழியாக தடுப்பூசியும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதில் சில பக்க விளைவுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும் அதனை ஏற்றாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் அதனை விடவும் அதிகமானவை.
ஒரு குறிப்பிட்ட கருமத்தை கட்டாயமாக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற பொழுது அக்காரியத்தில் உள்ள சாதகங்களையும் பாதகங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டுமென்றும் பாதகமான விளைவுகளை விடவும் சாதகமான விளைவுகள் அதிகம் இருப்பின் அக்காரியத்தை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் சொல்வார்கள்.
إذا تعارضت المصلحة والمفسدة قُدِّم أرجحهما
"ஒரு விவகாரத்தில் சாதகங்களும் பாதகங்களும் இருப்பின் அதில் எது அதிகமாக இருக்குமோ அதற்கு முன்னுருமை வழங்கி தெரிவுசெய்யப்பட வேண்டும்" என்பது எமது சட்ட அறிஞர்கள் கூறிய விதியாகும்.
ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்யலாகாது என்பது இஸ்லாமிய சட்டமாக இருந்தும் கூட உம்மு குல்தூம் (ரலி)அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தனியாக ஹிஜ்ரத் வருவதற்கு நபியவர்கள் அனுமதித்தார்கள். தனித்து பயணம் போவதில் இருக்கின்ற ஆபத்தை விடவும் மக்காவில் தங்கி இருப்பது ஆபத்து அதிகம் என்று உணர்ந்ததனால் அந்த அனுமதி வழங்கப்பட்டது.
அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா அஸ்ஸஹ்மீ(ரலி) அவர்கள் ஹிரகல் மன்னனின் சபைக்கு சென்ற போது முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமாயின் மன்னனின் தலையை அப்துல்லாஹ் (ரலி) முத்தமிட வேண்டும் என்று மன்னர் சொன்னார்.
அவ்வாறு முத்தமிடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லாவிட்டாலும் 100 கைதிகளது விடுதலை அதனை விடவும் பெரியது என்று உணர்ந்ததனால் அப்துல்லாஹ் அவரது தலையை முத்தமிட்டார். அவர் உமர்(ரலி) அவர்களது சபைக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வந்த போது அவரது தலையை உமர்(ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள். இது விரிவான ஆய்வுக்கு உட்பட்ட பகுதியாகும்.
அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும்
தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் கொரோனா தொற்றுக்கான சாத்தியங்கள் குறைவு என்று வைத்தியர்கள் சொன்னார்களே தவிர நோய் வரவேமாட்டாது என்று யாரும் சொல்லவில்லை.
ஒவ்வொருவரது உடம்பை பொறுத்தும் அதனது தாக்கம் வித்தியாசப்படக் கூடும். எந்தவொரு மருந்துக்கும் பக்க விளைவுகள் இருப்பதையும் எந்த ஒரு வைத்தியரும் மறுக்கவில்லை. மறுத்தால் அவர் வைத்தியரும் அல்ல. சாதாரண பரசிடமோலுக்கும் பக்க விளைவுகள் உண்டு.
கொவிட் காரணமாக இறந்தவர்கள் எல்லோரும் தடுப்பூசி போடாதவர்களுமில்லை.
தடுப்பூசி போட்டவர்கள் கொவிட் காரணமாக இறக்கவில்லை என்றும் யாரும் சொல்லவுமில்லை. எம்மால் இயன்றவரை தற்காப்பு முயற்சிகளில் கட்டாயமாக ஈடுபடுவோம். முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு அவனது தீர்ப்பை முழுமனதுடன் ஏற்போம். அல்லாஹ் நாடுவதே நடந்தேறும்.
நாட்டு சட்டத்தை மதிப்பதா இல்லையா?
இலங்கை அரசு தடுப்பூசி ஏற்றுவதை கட்டாயப்படுத்துகிறது. அதற்கு விரோதமாக செல்பவர்கள் நாட்டின் சட்டத்தை உடைப்பவர்களாகவும் சட்டத்துக்கு விரோதமானவர்களாகவும் பார்க்கப்படுவார்கள்.
எனவே அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். எனவே தடுப்பூசிக்கு எதிராக பேசுவோர் தைரியமாக தமது பெயர்களைக் கூறி முன்வர வேண்டும். சட்டத்தின் முன் நிற்க தயாராக இருக்கவேண்டும். அதற்கு தயாராக இல்லை என்றால் ஆங்காங்கு பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.
நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் நோய் வராமல் காப்பதற்கும் நோய் வந்தபின்னர் சிகிச்சை செய்வதற்குமான பின்வரும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் :-
Comments (0)
Facebook Comments (0)