'இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான உறுதிமொழியினை நிறைவேற்ற வேண்டும்'
இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநயாக்காவுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது இந்தியப் பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்த விஜயமானது நமது உறவுகளில் புத்துணர்ச்சியுடனான ஆற்றல்களையும் சக்தியினையும் உட்புகுத்தியுள்ளது. நமது பங்குடைமைக்கான எதிர்கால நோக்கினை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்துடன் நமது பொருளாதார பங்குடைமையில் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
நேரடியான தொடர்புகள், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் அடிப்படையிலான இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்காகவும் நாம் பணியாற்றவுள்ளோம்.
சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு LNG வழங்கப்படும். இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும்.
இன்றுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான நன்கொடை மற்றும் கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றொம். எமது பங்காளி நாடுகளின் அபிவிருத்தித் தெரிவுகளுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
இந்த ஆதரவினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாகோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை அடிப்படையிலான ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் எமது கல்வி ரீதியான ஒத்துழைப்பின் அங்கமாக இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு நாம் மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளோம்.
அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1,500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும். வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும்.
இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்காளராக இருக்கும். எமது பாதுகாப்பு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்களும் நானும் முழுமையான இணக்கப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் நீரியல் சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட நாம் இணங்கியுள்ளோம். பிராந்தியத்தின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு கொழும்பு பாதுகாப்பு குழுமம் மிகவும் முக்கியமான தளம் என நாம் நம்புகின்றோம்.
இவ்வாறான குடையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு வழங்கப்படும்.
இந்திய - இலங்கை மக்களிடையில் காணப்பட்டும் உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை ஆகும். பாளி மொழியினை செம்மொழியாக அறிவித்த தருணத்திலும் அதனுடன் இணைந்த கொண்டாட்டங்களிலும் இலங்கையும் எம்முடன் இணைந்திருந்தது.
கப்பல் சேவைகளும், சென்னை யாழ்ப்பாண விமான இணைப்புகளும் சுற்றுலாத்துறையினை மாத்திரம் மேம்படுத்தவில்லை, ஆனால் கலாசார உறவுகளையும் வலுவாக்கியுள்ளன. நாகபட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவைகள் வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினையும் ஆரம்பிக்க நாங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளோம்.
பௌத்த மத வளாகம் மற்றும் இலங்கையின் இராமாயணச் சுவடுகள் மூலம் சுற்றுலாத்துறையில் காணப்படும் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டுமென நாம் இருவரும் இணங்கியுள்ளோம். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
ஜனாதிபதி திசநாயக்கா அனைவரையும் உள்ளடக்கிய தனது நோக்கு குறித்து என்னிடம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம்.
அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது முயற்சிகளில் இந்தியா உண்மையானதும் நம்பத்தகுந்ததுமான பங்காளியாக இருக்குமென நான் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிடம் உறுதியளித்துள்ளேன்.
ஜனாதிபதி திசநாயக்காவையும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒரு முறை அன்புடன் இந்தியாவுக்கு வரவேற்கின்றேன். அத்துடன் புத்தகயாவிற்கு அவர் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பானதாக அமைய வாழ்த்துவதுடன் அவ்விஜயமானது ஆன்மீக சக்தி மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றால் நிறைந்திருக்குமென நம்புகின்றேன்” என்றார்.
Comments (0)
Facebook Comments (0)