நுரைச்சோலை அனல் மின் நிலையம்; வரமா? சாபமா?
நுரைச்சோலையிலிருந்து றிப்தி அலி
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கழிவுநீர்கள் நேரடியாக கடலுக்குள் உட்செலுத்தப்படுவதாக அப்பிரதேசத்தின் 40 வயதான மீனவர் தர்மலிங்கம் ரதிச்செல்வன் குற்றஞ்சாட்டினார்.
"வருடத்தின் இறுதிக் காலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால் எமது பிரதேசத்தின் மீன் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால், மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகின்றது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் முதலாவது அனல் மின் நிலையமான லக்விஜய மின் நிலையம், புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரக்கல்லி கிராமத்தில் அமையப் பெற்றுள்ளது.
இக்கிராமத்திற்கு அருகிலுள்ள இலந்தையடி கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக கரைவலை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ரதிச்செல்வனின் உள்ளக் குமுறலே இதுவாகும்.
இலங்கை மின்சார சபையினால் 1995ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து இலங்கை மின்சார சபை கடனாகப் பெற்ற 1,346 மில்லியன் அமெரிக்க டொலரின் ஊடாக இந்த மின் நிலையம் மூன்று கட்டங்களாக China Machinery Engineering Corporation எனும் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற இந்த மின் நிலையத்தின் முதற்கட்ட மின் உற்பத்தி 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த மின் நிலையத்தின் கழிவுநீர் கடந்த சில வருடங்களாக கடலுக்குள் நேரடியாக செலுத்தப்படுவதாக அப்பிரதேச மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெப்பமான நீர் கடலுக்குள் நேரடியாக செலுத்தப்பட்டதை நாரா என்று அழைக்கப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையகம் உறுதிப்படுத்தியது.
"இந்த மின் நிலையத்திலுள்ள இயந்திரங்களை குளிரூட்டுவதற்காக கடலிலிருந்து எடுக்கப்படும் கடல் நீர், குறித்த செயற்பாடு நிறைவடைந்த பின்னர் வெப்ப நீராக மீண்டும் கடலுக்குள் அனுப்பப்படுகின்ற விடயம் எமது ஆய்வின் போது கண்டறியப்பட்டது" என பெயர் குறிப்பிட விரும்பாத நாராவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால் கடலிலுள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் தடையேற்படும். இதனால் வெப்ப நீரை குளிர் நீராக மாற்றி கடலுக்குள் அனுப்புமாறு நாராவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை அமுல்படுத்த இந்த மின் நிலையம் இணக்கம் வெளியிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் மீனவர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்த லக்விஜய மின் நிலையத்தின் முகாமையாளரான பொறியியலாளர் பி.டப்ளியூ.எம்.என்.ஏ.பீ. விஜயகோன், "வெப்பமான நீர் ஒருபோதும் எமது மின் நிலையத்திலிருந்து கடலுக்குள் அனுப்பப்படவில்லை" எனவும் குறிப்பிட்டார்.
இந்த அனல் மின் நிலையத்திற்காக 310,630.05 மில்லியன் ரூபா பெறுமதியான நிலக்கரிகள் இலங்கை மின்சார சபையினால் கடந்த ஐந்து வருடங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகூடிய 135,125.74 மில்லியன் ரூபா பெறுமதியான நிலக்கரி கடந்த வருடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலக்கரிகளை கப்பலிலிருந்து மின் நிலையத்திற்கு கொண்டுவருவதற்காக இலந்தையடி கிராமத்தில் இறங்கு துறையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த இறங்கு துறை நிர்மாணத்தினை அடுத்து இலந்தையடி மற்றும் ஆலங்குடா போன்ற கிராமங்கள் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர் ரதிச்செல்வன் கூறினார்.
"வருடமொன்றுக்கு இக்கிராமங்களின் நிலப்பரப்பில் ஐந்து மீற்றரை கடல் காவுகொள்கின்றது. இதனால் பரம்பரையாக மேற்கொண்டு வரும் கரைவலைத் தொழிலை மேற்கொள்ள மிகவும் கஷ்டமாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கடலரிப்பினால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாகியுள்ளன. இது தொடர்பில் அரசாங்கத்திடம் பலமுறை கூறியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என ரதிச்செல்வன் தெரிவித்தார்.
இக்கிராமத்தில் முன்னர் நான்கு மீன்பிடி வாடிகள் காணப்பட்டதாகவும், கடலரிப்பினை அடுத்து ஏற்பட்ட பாரிய நட்டத்தினால் இரண்டு மீன்பிடி வாடிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினை அடுத்து கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலரிப்பினை தடுக்கும் நோக்கில் சவுக்கு மரங்கள் நடப்பட்டன.
இதற்கமைய, இலந்தையடி கிராமத்தில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடப்பட்ட சவுக்கு மரங்களும் காணப்படுகின்றன. எனினும், கடலரிப்பினால் இங்குள்ள சவுக்கு மரங்கள் தற்போது அழிவடைந்து வருவதை எமது கள விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், குறித்த இறங்குதுறை நிர்மாணத்தினாலேயே இக்கிராமங்களில் கடலரிப்பு ஏற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவலகம் முற்றாக மறுக்கின்றது.
"கற்பிட்டியை அண்டிய கடற்கரை பிரதேசங்களில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே இக்கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என மாவட்ட அலுவலகத்தின் பொறியியலாளர் இசுரு அரியரத்ன தெரிவித்தார்.
இக்கடலரிப்பினை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எமது திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பாறாங் கற்களினால் 11 கல்லணைகள் போடப்பட்டதை அடுத்து இக்கிராமங்களில் கடலரிப்பு குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
"இன்னும் மூன்று கல்லணைகள் மாத்திரமே போட வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவற்றை போட முடியாமல் போனது. எனினும், அடுத்த வருடம் குறித்த மூன்று கல்லணைகளும் போடப்படும்" என பொறியியலாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் நிலக்கரிகளை ஏற்றி இறக்கும் போது காற்றில் அடித்துச் செல்லப்படும் உலோகங்கள் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நாரா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, "இந்த அனல் மின்சார நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியினால் வெளியாகும் தூசுகள் காரணமாக மரக்கறிச் செய்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன" என 32 வயதான விவசாயி மோகன் அண்டனி தெரிவித்தார்.
இந்நிலைய நிர்மாணத்தினை அடுத்து இப்பிரதேசத்தில் மரக்கறி விளைச்சல் மிகவும் மோசமடைந்துள்ளது. முன்னர் மூன்று இலட்சம் முதலீடு செய்தால் மூன்று இலட்சம் வரை இலாபம் கிடைக்கும். தற்போது அப்படி இலாபம் எதுவும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த அனல் மின் நிலையத்திற்கு அருகில் மோகன் அண்டனி போன்று பல விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் மிளகாய், வீட்றூட், புகையிலை, டுபாய் வட்டக்காய் போன்ற பல மரக்கறிகளை கடந்த பல தசாப்த காலமாக பயிரிட்டு வருகின்றனர். இந்த மரக்கறிகளில் நிலக்கரியின் தூசுகள் படிந்திருப்பதை எம்மால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
"அத்துடன் இங்குள்ள நீரினை ஒருபோதும் குடிக்க முடியாது. இதனால் பனையடியில் இருந்து கொண்டுவரப்படுகின்ற சுத்திகரிக்கப்பட்ட நீரை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணம் கொடுத்து கொள்வனவு செய்கின்றோம்" என விவசாயி மோகன் அண்டனி மேலும் கூறினார்.
நிலக்கரியினை பற்றவைக்கும் போது வெளியாகும் காபன் துணிக்கைகள் உள்ளடக்கிய தூசுகள் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். இதனால் நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, நியூமோனியா, சுவாசப்பை அழற்சி போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்குதான் இது கடுமையாக பாதிக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் குறித்த மின் நிலையத்திற்கு அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்களை மேற்படி தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டாளர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்.
சுகாதார தரவுகளின் அடிப்படையில் குறித்த கிராமங்களில் மேற்படி தொற்றா நோய்கள் இதுவரை பாரியளவில் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த மின் நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பல்களைக் கொண்டு கற்கள் உற்பத்தி செய்யும் நடவடிக்கையினை Tang Dynasty Ceylon Huadong New Building Materials எனும் தனியார் கம்பனி தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த அனல் மின் நிலையத்தினால் கடந்த வருடம் மாத்திரம் 104,880.87 மில்லியன் ரூபா நட்டம் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
"இம்மின் நிலைய நிர்மாணத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை திறைசேரியின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனால், எவ்வளவு நிதி இன்று வரை திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் எதுவும் எம்மிடமில்லை" என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், 591.4 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரிக்கு மிகுதியாக செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் கணக்குப் புத்தகங்களில் 2022.12.31ஆம் திகதி காணப்பட்டுள்ளது. இத்தொகையினை திறைசேரியின் முதலீட்டுப் பங்காக மாற்றுமாறு திறைசேரி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த மின் நிலையம் அமைப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் இப்பிரதேசத்தின் காலநிலைக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத வகையில் சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர் அஜந்தா பெரேரா குறிப்பிட்டார்.
"குறித்த வழிகாட்டல்களை முறையாக அமுல்படுத்தாமையினாலேயே இப்பிரதேசத்தின் சூழலுக்கு தற்போது தீங்கும் ஏற்படுகின்றது. இதற்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் ஊடாக குறித்த பிரதேச மக்களுக்கு அனல் மின் நிலையத்தினால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்" என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் புதிய சுற்றாடல் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அதிக கவனம் செலுத்த வேண்டும் என அஜந்தா பெரேரா மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், சூழலுக்கு தீங்கு விளைவிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்த இந்த மின் நிலையத்தின் முகாமையாளர், இதன் செயற்பாடுகள் அனைத்தும் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையிலேயே முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிபுணர்கள் குழு அண்மையிலும் எமது மின் நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இதன்போது, சுழலுக்கு தீங்கு விளைவிக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் இங்கு இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என இந்த மின் நிலையத்தின் முகாமையாளரான பி.டப்ளியூ.எம்.என்.ஏ.பீ. விஜயகோன் மேலும் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)