சர்வதேச சட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் "தருணம்"

சர்வதேச சட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் "தருணம்"

ரமிந்து பெரேரா

கடந்த வாரம், தென்னாப்பிரிக்கா ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) பரிந்துரைத்ததுடன், இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலை குற்றத்திற்கு ஒப்பானவை என்று வாதிட்டது.

இந்த வழக்கின் வாய்வழியிலான விசாரணைகள் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ஹேக்கில் நடைபெற்றதுடன், இந்த வழக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

ICJ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை அமைப்பென்பதுடன், தென்னாப்பிரிக்கா இஸ்ரேல் தங்களின் இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற தற்காலிக ஏற்பாட்டை நாடுகிறது.

இந்த கட்டத்தில், இனப்படுகொலை உண்மையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை தென்னாப்பிரிக்கா நிரூபிக்க வேண்டியதில்லை. ஒரு தற்காலிக உத்தரவைப் பெறுவதற்கு, இனப்படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக முகத்தோற்றமளவில் நிரூபிப்பது போதுமானதாகும்.

குற்றங்களினுடைய குற்றம்

சர்வதேச குற்றவியல் சட்டத்தில் இனப்படுகொலை மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இது "குற்றங்களினுடைய குற்றம்" என்று அழைக்கப்படுகிறது.

நாஜி ஜெர்மனியால் ஆறு மில்லியன் யூதர்கள் அழிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக 1948 இல் இனப்படுகொலை தொடர்பான பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரகடனத்தின் நோக்கமும் குறிக்கோளும் மீண்டும் அத்தகைய நிகழ்வு இடம்பெறாமல் தடுப்பதாகும்.

எனவே, இப்பிரகடனம் இனப்படுகொலையை "தடுக்கவும் தண்டிக்கவும்" அரச தரப்பினர் செயற்பட வேண்டிய கடமையை குறிப்பிடுகின்றது.

பிரகடனத்தின் உறுப்புரை 8, இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்கவும் ஒடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தகுதிவாய்ந்த அமைப்புகளை எந்தவொரு திறத்துவ நாடும் அழைக்கலாம் என்று குறிப்பிடுகின்றது.

தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் இனப்படுகொலை பிரகடனத்தின் திறத்துவ நாடுகளென்பதுடன், தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பிரகடனத்தின் மேற்கூறிய ஏற்பாடுகளை நம்பியுள்ளது.

உள்நாட்டுச் சட்டத்தைப் போலல்லாமல், சர்வதேசச் சட்டத்தில் வலிமையான அமுலாக்கப் பொறிமுறை இருப்பதில்லை. எனவே, ICJ நாடுகளுக்கு இடையேயான மோதல்களில் தீர்ப்பளிக்க முடியுமென்றாலும், ஒரு திறத்துவ நாடு தீர்ப்பை புறக்கணிப்பதாக தெரிவு செய்தால், அத்தகைய நாட்டிற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.

உதாரணமாக, 2022 இல், ரஷ்யப் படையெடுப்பின் போது, உக்ரைன் ICJ க்கு முறைப்பாடளித்து, ரஷ்யாவை அத்தகைய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு தற்காலிக உத்தரவைப் பெற்றது.

ஆனால், அந்த உத்தரவை ரஷ்யா ஏற்கவில்லை. கிழக்கு உக்ரேனில் வசிக்கும் ரஷ்ய இன மக்களுக்கு எதிராக உக்ரைன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா குற்றம் சாட்டிய உக்ரேனிய சூழலில் இனப்படுகொலையின் வரைவிலக்கணத்தின் பிரயோகத்தை தெளிவுபடுத்துமாறு உக்ரைன் ICJ யிடம் கோரிக்கை விடுத்ததால் அந்த சம்பவமும் இனப்படுகொலை பிரகடனத்தை உள்ளடக்கியது.

இருப்பினும், தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகளை ICJ ஏற்றுக்கொண்டால், அது இராஜதந்திர மட்டத்தில் இஸ்ரேலுக்கு குறிப்பிடத்தக்க இழப்பைக் கொண்டுவரலாம்.

மேலும், இஸ்ரேலின் மேற்கத்திய நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள், அவர்களின் ஆதரவு ஒரு இனப்படுகொலை போருக்கு உதவுவதாகக் கருதப்படுவதால் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும். இந்த சாத்தியமான பின்விளைவுகளை எதிர்பார்த்து, மேற்கத்திய நாடுகள் தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலைக்கான கோரலை நிராகரிக்க ஏற்கனவே விரைந்துள்ளன.

அமெரிக்கா இனப்படுகொலைக்கான கோரலை "தகுதியற்றது" என்று அறிவித்துள்ள நிலையில், ஜேர்மனி இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் தரப்பல்லாத வகையில் வழக்கில் தலையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், உலகளாவிய தெற்கிலிருந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மற்றும் பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற முஸ்லீம் அல்லாத நாடுகளென பல நாடுகள் தென்னாப்பிரிக்காவின் தலையீட்டிற்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளன.

வாதங்கள் மற்றும் எதிர்வாதங்கள்

வாய்வழி விசாரணை சுற்றுகளில், தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் ICJ முன்பாக தங்களது வழக்குகளை முன்வைத்தன. இனப்படுகொலை பிரகடனம் இனப் படுகொலையை "ஒரு தேசிய, இன, சாதிய அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள செயல்கள்" என வரையறுக்கிறது.

எனவே, குழுவில் உள்ளவர்களைக் கொல்வது, கடுமையான உடல் மற்றும் உளநலப் பாதிப்பை ஏற்படுத்துவது, உடலியல் ரீதியாகவோ அல்லது பகுதியளவில் உடலியல் ரீதியாகவோ அழிவைக் கொண்டுவரும் நிலைமைகளை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகள் இனப்படுகொலைச் செயல்களாக வரையறுக்கப்படுகின்றன.

காசா பகுதியில் 23,000க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்ற, 85 சதவீத மக்களின் இடப்பெயர்வுக்கு காரணமான கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு, மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் போது மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை காசாவில் இனப்படுகொலை நிலைமையை விவரிப்பதற்கு தென்னாப்பிரிக்கா கொண்டு வந்த உண்மைகளில் உள்ளடங்கும்.

குற்றத்தை நிரூபிப்பதற்கு, இனப்படுகொலை நோக்கம் இருந்தமையை நிரூபிக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா பாலஸ்தீனத்தை ஒரு தேசியக் குழுவாக அழிக்கும் நோக்கத்தைக் குறிக்கும் பிரதமர் உட்பட இஸ்ரேலிய உயர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளை நம்பியுள்ளது. உதாரணமாக, 13 அக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் கூறுகையில்:

"காசாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம். அவர்கள் உலகை விட்டு வெளியேறும் வரை ஒரு சொட்டு நீர் அல்லது ஒரு மின்கலம் கூட அவர்களுக்கு கிடைக்காது.

இந்த வகையான அறிக்கைகளுக்கு இஸ்ரேலின் எதிர்-சமர்ப்பிப்பு என்னவென்றால், அவை "எழுந்தமானமான அறிக்கைகள்” என்பதுடன் அவற்றில் சில சூழலிலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இனப்படுகொலை சம்பவங்களில் சவாலான பகுதி, உள்நோக்கினை நிரூபிப்பதாகும், ஏனெனில் செயலை மேற்கொள்ளும் ஓர் கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவை அழிக்கும் குறிப்பான நோக்கத்தை தொடர்புடைய அரசு கொண்டிருந்தது என்பதை நிரூபிப்பது இலகுவானதல்ல.

ஒரு அரசின் செயல்களில் இருந்து நோக்கினை ஊகிக்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த சிக்கலான தன்மையின் காரணமாக, இனப்படுகொலை உரிமைகோரல்களில் (2007) போஸ்னியா செர்பியாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னய வழக்கில், ஸ்ரெப்ரெனிகா படுகொலையை இனப்படுகொலை என்று கண்டறிந்தாலும், ICJ செர்பியாவிற்கு பொறுப்பேற்கவில்லை.

இதற்கு இனப்படுகொலையின் குறிப்பிட்ட நோக்கினை நிரூபிக்கத் தவறியதே காரணமாகும். இஸ்ரேலின் பாதுகாப்பின் பிரதான முன்மாதிரி என்னவென்றால், அது ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையான தற்காப்புக்காக செயற்படுகின்றது என்பதாகும். தற்காப்பு எனும் வாதம் இரண்டு காரணங்களுக்காக பலவீனமான நிலையில் உள்ளது.

முதலாவதாக, சட்டபூர்வமான தற்காப்பு என்பது இனப்படுகொலையை அனுமதிக்கும் அளவிற்கு நீடிக்காது. இனப்படுகொலையை தடைசெய்வது சர்வதேச சட்டத்தில் ஓர் முடிவான விழுமியமாக கருதப்படுகிறது.

எனவே, தடை முழுமையானது - தடையிலிருந்து எந்த அவமதிப்பும் அனுமதிக்கப்படாது. வெறுமனே, தற்காப்பு என்ற பெயரில் இனப்படுகொலை செய்ய முடியாது.

இரண்டாவதாக, பலஸ்தீனம் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக இருப்பது தற்காப்பு வாதத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வினாவினை எழுப்புகின்றது. சர்வதேச சட்டத்தின் கீழ், அரசாங்கங்கள் மற்றைய அரசாங்கங்களுக்கு எதிராக தற்காப்பைப் பயன்படுத்துகின்றன. 1967 போருக்குப் பிறகு, பாலஸ்தீனம் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக் கருதப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஊடுருவி இஸ்ரேல் சுவர் கட்டியதன் சட்டபூர்வமான தன்மையை ஆய்வு செய்த வழக்கில் 2004 ஆம் ஆண்டு ICJ இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது (இஸ்ரேலிய சுவர் ஆலோசனை அபிப்பிராயம்). உங்களது சொந்த ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு பிரதேசம் தொடர்பில் தற்காப்பு வாதத்தை கொண்டு வர முடியுமா என்பது விவாதத்திற்குரியதாகும்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நிலையை மறுத்தாலும், குறிப்பாக 2006 இல் காசாவில் இருந்து வெளியேறியதில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாக இருப்பதாக பலமுறை கூறியுள்ளன.

மனிதாபிமானத்தின் எதிர்காலம்

சர்வதேச அரசியலில் மனிதாபிமான வாதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் ஒரு குறிப்பிட்ட திருப்புமுனையை குறிப்பதால் தென்னாப்பிரிக்க வழக்கு குறிப்பிடத்தக்கதாகும். மற்றைய அரசாங்கங்களின் நடத்தையை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மனிதாபிமான வாதங்களை முன்வைப்பது 1990 களுக்குப் பிறகு பொதுவான ஒன்றாகும்.

1990 களின் பிற்பகுதியில் யூகோஸ்லாவியா மீதான நேட்டோ குண்டுவெடிப்புகளில் இருந்து ஆரம்பித்து, மனிதாபிமானம் பெரும்பாலும் மேற்கத்திய மேலாதிக்க கும்பலால் அவர்களின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள்" முன்னர் காலனித்துவ நாடுகளான உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் எப்பொழுதும் ஐரோப்பியரல்லாத மக்களை "நாகரிகமானவர்கள்" ஆக்குவதற்கு ஒரு நாகரீக நோக்கம் இருப்பதாக ஒரு காலத்தில் நினைத்த, அவர்கள் உலகளாவிய தெற்கில் உள்ள அரசாங்கங்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிய முன்னைய காலனித்துவ எஜமானர்களாவர்.

மனிதாபிமானம் என்பது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒருமுனை உலக ஒழுங்கின் சித்தாந்தமாக மாறியது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நிகழ்வுகள் வெளிவருவதை அடுத்து, அலை ஓர் சுவாரஸ்யமான திருப்பத்தை எடுத்துள்ளது.

இஸ்ரேலின் கொடூரமான நடத்தையை மேற்குலகம் வெட்கமின்றி பாதுகாக்கும் அதே வேளையில், உலகளாவிய தெற்கில் இருந்து - ஈரான் முதல் சீனா வரை, தென்னாப்பிரிக்கா முதல் பிரேசில் வரையிலான நாடுகள் படுகொலை செய்யப்படுபவர்களுக்காக முன்வந்துள்ளன.

மற்ற கருவிகளுக்கிடையில், இஸ்ரேலின் தவறான செயல்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சட்டமும் பயன்படுத்தப்பட்டது. முரண்பாடாக, இதுவரை உலகளாவிய தெற்கில் உள்ள பழுப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் மக்களுக்கு மனிதாபிமானத்தின் நற்பண்புகளை போதித்த அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது சாத்தியமான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றவாளியான இஸ்ரேலை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

காசாவிற்குப் பிறகு, மேற்கத்திய மனிதாபிமானத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் படைகள் தலையிட்ட அட்டூழியங்கள் காரணமாக மேற்கத்திய மனிதாபிமானத்தின் வேண்டுகோள் எந்த வகையிலாவது வீழ்ச்சியடைந்துள்ளது.

இஸ்ரேலின் கொடூரமான குற்றங்களை பரந்த பகலில் பாதுகாத்த பிறகு, மீண்டும் மனித உரிமை மொழியை பேசவும், மற்ற நாடுகளை நோக்கி வினா எழுப்பவும் மேற்கு கூட்டமைப்புக்கு தார்மீக நிலைப்பாடு இருக்குமா?

ICJ இல் தென்னாப்பிரிக்காவின் தலையீடு, மனிதாபிமானம் தொடர்பாக மேற்கு நாடுகள் அனுபவித்த ஏகபோகத்தின் முடிவைக் குறிக்கிறதா? சக்திவாய்ந்த மேற்கத்திய நாடுகளையும் அவற்றின் நட்பு நாடுகளையும் கேள்விக்குட்படுத்த உலகளாவிய தெற்கு அதே மன்றங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த புதிய தொடக்கத்தை இந்த வழக்கு சுட்டிக்காட்டுகிறதா?

இந்த வினாக்களுக்கான பதில்கள் எதுவாக இருந்தாலும், தென்னாப்பிரிக்கா ஒரு சிறந்த தலையீட்டைச் செய்துள்ளதாகத் தோன்றுவதுடன், இது உரிய அங்கீகாரத்திற்குத் தகுதியான தலையீடாகும்.

ரமிந்து பெரேரா இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைகள் துறையின் விரிவுரையாளராவார். அவரை raminduezln@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.