யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பு வெற்றியளிக்குமா?

யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பு வெற்றியளிக்குமா?

கடந்த 12 வருடங்களில் 3,770 யானைகளை இலங்கை இழந்துள்ளது.

இந்தியாவை விடவும் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் பவித்ரா

யானைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்: ஜகத் பிரியங்கர எம்.பி

யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது பிழையான தகவல்: ஆர்வலர்கள்

2024இன் முதல் 7 மாதங்களில் 200 யானைகளை இழந்தது இலங்கை

றிப்தி அலி

இலங்கையிலுள்ள யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்கணக்கெடுப்பின் ஊடாக நாட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தமிழன் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரு தளத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு யானைகளையும் எண்ணுவதற்காக அல்ல, மாறாக யானைகளின் எண்ணிக்கை, அதன் குட்டிகளின் எண்ணிக்கை, புதிய பிறப்புக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் சுகாதார நிலை போன்ற தரவுகளை சேகரிப்பதற்காவே மேற்கொள்ளப்பட்டது என பணிப்பாளர் நாயகம் கூறினார்.

இதற்கு மேலதிகமாக யானைகளைப் பற்றிய எங்கள் அறிவைப் புதுப்பித்தல், அதன் பாலினம் மற்றும் வயது போன்ற தரவுகளை எடுத்தல் மற்றும் முந்தைய தரவுகளுடன் புதிய தகவலை ஒப்பிட்டு பார்த்தல் போன்றவற்றுக்காகவும் இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.+

யானைகளின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல முக்கிய தீர்மானங்களுக்கும், யானைப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த கணக்கெடுப்பு உதவும் என பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டார்.  

இலங்கையின் யானைகள் குடித்தொகை கணக்கெடுப்பு – 2024 கடந்த 17ஆம், 18ஆம், 19ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை யானைகள் குடித்தொகை கணக்கெடுப்பு இலங்கையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக கடந்த 2011ஆம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நாட்டிலுள்ள யானைகளின் அதி குறைந்த எண்ணிக்ககை 5,879 என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 2021ஆம் ஆண்டில் யானைகள் குடித்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் அது இடம்பெறவில்லை. இவ்வாறன நிலையில் 13 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் யானைகள் குடித்தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படையினர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நாட்டிலுள்ள காடுகளில் யானைகள் நீர் அருந்த வருகின்ற 2,500 இடங்களை மையமாகக் கொண்டு, காடுகளில் செயற்படுத்தப்பட்ட 3,130 கணக்கெடுப்பு நிலையங்களின் மூலம் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

குறிப்பாக மரங்களுக்கு கீழ் தங்கியிருந்தும் மறைந்திருந்துமே இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான கலந்துரையாடல்களும், பயிற்சிகளும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் கடந்த வாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனினும், இக்கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களுக்கு தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டதாக இக்கணக்கெடுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக மாணவரொருவர் தெரிவித்தார்.

யானைகளுக்கான புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துதல், யானை - மனித மோதலை தடுப்பதற்கான மூலோபாய திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யானைகள் காப்பு தேவைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடாத்தப்படுவதாக  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.

இதேவேளை, டோர்ச் லைட்களை ஒளிரச் செய்யாமல், நிலவின் வெளிச்சத்துடனேயே இந்த கணக்கெடுப் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டோர்ச் லைட்களை ஒளிரச் செய்வதனால் யானைக் கூட்டத்திற்கு குழப்பம் விளைவிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

தமன காட்டுப் பிரதேசத்தில் இந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக இடம்பெற்றதாக  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். ஏனைய இடங்களில் கடும் மழை காரணமாக இந்த கணக்கெடுப்பு மிகவும் சிரமமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது அதிக யானைகள் காணப்படுவதாகவும் இதன் எண்ணிக்கை 7,000 தாண்டியுள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினை மேற்கோள்காட்டி விவசாய அமைச்சின் இணையத்தளதில் கடந்த 2022.09.15ஆம் திகதி செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும், யானைகளின் இறப்பு வீதம் எமது நாட்டில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. துப்பாக்கிச் சுடு, மின்சாரம் தாக்குதல், ரயிலுடன் மோதல், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படல் போன்ற பல காரணங்களினால் யானைகள் உயிரிழக்கப்படுகின்றன.

அண்மையில், பொலனறுவை மாவட்டத்தின் பகமுன பிரதேசத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களினால் யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண் ஒன்றினை இழந்த குறித்த யானை, அப்பிரதேச மக்களினால் ராஜா என்று அழைக்கப்படுவது வழமையாகும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு ஹிங்குராங்கொட நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் மாத்திரம் 405 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் சுமார் 200 யானைகளை இலங்கை இழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில், யானைகளின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர, யானைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற யோசனையை பாராளுமன்றத்தில் கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி முன்வைத்தார்.

நாட்டின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கூறிய அவர், காட்டு யானைகளை ஏற்றுமதி செய்யுமாறும் அல்லது சரணாலயங்களிற்கு விடுவிக்குமாறும் அல்லது அவற்றை வளர்ப்பதற்காக மக்களுக்கு வழங்குமாறும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோளொன்றை முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கு பதிலளிக்கும் போது, "நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்ற விடயத்தினை வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஒப்புக்கொண்டார்.

அத்துடன் இந்தியாவை விடவும் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யானைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் யானைகளின் இயற்கை மரணங்கள் குறைந்து நாட்டில் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் தந்தம் மற்றும் தந்த தயாரிப்புகளுக்கு இலங்கை பிரபலமாகக் காணப்பட்டது. அதற்குக் காரணம், அந்த நாட்களில் பல யானைகள் இறந்தமையேயாகும். ஆனால், தற்போது யானைகளின் இயற்கை மரணங்கள் குறைவடைந்துள்ளளதாக அவர் குறிப்பிட்டார்.

யானைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், மனிதர்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் யானைகளினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான வழிகளையும் நாம் கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் பவித்ரா மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற அமைச்சரின் பவித்ரா வன்னியாராச்சின் கருத்தினை சூழலியலாளர்களும், யானைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்கின்றவர்களும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித – யானை மோதலை கட்டுப்படுத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் இதுவரை எந்தவித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில், நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எந்தவித விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் மேற்கொள்ளமால் அமைச்சரினால் தெரிவித்த விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

"கடந்த 2011ஆம் ஆண்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகும்" என யானைகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றன சுபுன் லகிரு பிரகாஷ் தெரிவித்தார்.

இறுதியாக இடம்பெற்ற யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பின் போது இலங்கையில் காணப்படுகின்ற யானைகளின் எண்ணிக்கை 5,879 என அறிவிக்கப்பட்டது. எனினும், 2012ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான 12 வருடங்களில் 3,770 யானைகளை இலங்கை இழந்துள்ளது. இவ்வாறான நிலையில் எப்படி இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் அவர் கேள்வி எழுப்பினார்.

"இதே காலப்பகுதியில் எமது நாட்டில் யானைகளின் பிறப்பு வீதம் அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம், ஒரு யானை குட்டியொன்றினை பிரசவிப்பதற்கு 24 மாதங்கள் தேவைப்படுவதாகும்" என அவர் குறிப்பிட்டார்.

யானைகளின் ஆயுட் காலம் மிகவும் நீளமானது. இதனால் அதன் இயற்கை உயிரிழப்பு மிகவும் அரிதாகும். எனினும், யானைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அதன் இயற்கை மரணங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கும் கருத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுபுன் லகிரு பிரகாஷ் கூறினார்.

இதேவேளை, காடுகளில் யானைகள் நீர் அருந்த வருகின்ற இடங்களை மையமாகக் கொண்டே இந்த வருட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பாகும். எனினும் வரட்சியான காலப் பகுதியிலேயே இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும் இந்த முறை கணக்கெடுப்பு இடம்பெற்ற போது நாட்டில் கடும் மழை பெய்துள்ளது. இதனால், கணக்கெடுப்பாளர்கள் காத்திருந்த யானைகள் நீர் அருந்த வருகின்ற இடங்களை நோக்கி யானைகள் வந்திருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சில கணக்கெடுப்பாளர் காத்திருந்த இடங்களில் ஒரு யானை கூட வரவில்லை என்ற தகவலும் எமக்குக் கிடைத்துள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த கணக்கெடுப்பு தொடர்பில் எந்தவித கருத்தினை எம்மால் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டுக்கு பயன்பெறக்கூடிய வகையிலும் மனித – யானை மோதலை குறைக்கக்கூடிய வகையிலும் இந்த யானைகளின் குடித்தொகை கணக்கெடுப்பு அமைய வேண்டும் என சுபுன் லகிரு பிரகாஷ் தெரிவித்தார்.