நேர்காணல் ஒன்றில் தெரிவித்த விடயம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது: பைசால் காசிம்
முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது, அந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாக அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து அந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை விடவும், அரசாங்கத்தின் உள்ளே இருந்து பேசுவது - மிகவும் சௌகரியமானது என, இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் - தான் கூறியதை திரிவுபடுத்தி, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் கவலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலங்களில் கட்சியை உடைத்துக் கொண்டு, அப்போதைய அரசாங்கங்களில் இணையவிருந்தமையினால், கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே குறித்த அரசாங்கங்களுடன் தமது கட்சி இணைந்து கொண்டது என்று - தான் கூறியதை, 'கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளுந்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும்' என்று கூறியதாக சில ஊடகங்கள் தறவாக அர்த்தப்படுத்தி எழுதியுள்ளதாகவும் பைசால் காசிம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து அமையவுள்ள - பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் என்று - நான் கூறியதாக, மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நேர்காணலில் பொதுஜன பெரமுன கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 105க்கும் 110க்கும் இடையிலான ஆசனங்களை மட்டுமே பெறும் என நான் கூறியிருந்தமையை, பொய்யான செய்திகளைப் பரப்புவோர் குறிப்பிடத் தவறி விட்டனர். அதாவது, பொதுஜன பெரமுன கட்சியினால் ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதை, அந்த நேர்காணலில் நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
"முஸ்லிம்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசாங்கத்துடன் ஒத்துப் போவது - ஒப்பீட்டு ரீதியில் நல்லது என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேனே தவிர முஸ்லிம் சமூகத்தை வஞ்சிக்கின்ற, முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேசத்தைக் கக்குகின்ற, முஸ்லிம்களுக்கு உரிய மரியாதையை வழங்காத அரசாங்கம் ஒன்றுடன் இணைந்து போக வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி - இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அரசாங்கமொன்றை அமைக்கும். அந்த அரசாங்கத்தில் கௌரவமான பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்” என்றார்.
தொடர்புடைய செய்தி:
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் ஆளும் தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும்:பைசால் காசிம்
Comments (0)
Facebook Comments (0)