கொவிட்-19 பரவலினால் அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதா?

கொவிட்-19 பரவலினால் அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதா?

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பில் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆங்கில தேசிய நாளிதழொன்றில் இன்று வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதுமாகும்.

கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் நாளாந்த பணிகள் எவ்வித தடையுமின்றி முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் பணிகளுக்கென, ஏனைய அரச நிறுவனங்களை போன்று சேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியவசியமான மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பசில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி செயலணியின் பணிகளும் எவ்வித தடையுமின்றி அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய வெளிப்புற பிரிவினரே கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனர். பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் வழமைப்போன்று கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறுதிபடுத்துகின்றோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.