அஸாத் சாலியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
எம்.எப்.எம்.பஸீர்
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, சிஐடி எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் அசாத் சாலியின் கைது தொடர்பில் பிரதானமாக மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தை கோடிட்டு, அடிப்படைவாதிகளை பாதுகாத்ததாக கூறி கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல முன்னிலையில் சிஐடி இன்று பீ அறிக்கையும் சமர்ப்பித்தது.
அதன்படி சனூன் சாலி மொஹம்மட் அசத் எனப்படும் அசாத் சாலி தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்தது.
இவ்வாறு அசாத் சாலியை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, MOD/ LEG/ PTA/ 21/2021 எனும் கடிதம் ஊடாக கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் 44 (2 ) ஆம் உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த தடுப்புக் காவல் அனுமதி ஜனாதிபதியினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி கைது செய்யப்பட்டு, பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் இந்த 90 நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)