2022இல் மதிப்பாய்வு இன்றி தனியார் நிறுவனத்திற்கு 38 மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மதிப்பாய்வு இன்றி 2022ஆம் ஆண்டு Savorite எனும் தனியார் நிறுவனத்திற்கு 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய பதிவு விலக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது.
அத்துடன், Savorite என்ற தனியார் நிறுவனத்தை இவ்வாறு மருந்துகளை இறக்குமதி செய்வதற்குத் தெரிவுசெய்யுமாறு முன்னாள் சுகாதார அமைச்சரே அறிவுறுத்தல் வழங்கியதாக சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கோப் குழுவில் தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இரண்டாவது நாளாக அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் கோரிக்கை விடுக்கப்படாத 38 மருந்து வகைகளை இறக்குமதி செய்ய Savorite எனும் தனியார் நிறுவனத்திற்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மதிப்பாய்வு இன்றி பதிவு விலக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் குழுவில் தெரிவித்தார்.
மருந்து வகைகள் தரமானவை, பாதுகாப்பானவை மற்றும் வினைத்திறன் கொண்டவை (Quality, Safety, efficacy) என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், மருந்து விநியோகப் பிரிவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லையென்றும், இது விடயத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தனது பொறுப்பைத் தவறவிட்டிருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், விசேட நடைமுறைக்கு அமைய (Special pathway) மருந்துகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் முன்அனுமதி பெறப்பட்டிருந்தமையால், உரிய மதிப்பீட்டை மேற்கொள்ளாது பணிப்பாளர் சபையினால் அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்ற காரணத்தினால் இதற்கான பொறுப்பை ஏற்கவில்லையெனக் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, இது தொடர்பில் குழுவின் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மூன்று மாதங்களுக்கான நிலுவை மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு Savorite எனும் தனியார் நிறுவனத்தை தெரிவுசெய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தமை இதன்போது குழுவில் புலப்பட்டது.
அத்துடன், முன்னாள் சுகாதார அமைச்சரினால் 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 3 வாரங்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் பூஜ்ஜிய அளவை எட்டக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை பற்றி சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவினார்.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், மருந்து வகைகள் தொடர்பில் தற்போதுள்ள தரவுக் கட்டமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அமைச்சரவைப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தனர்.
எனினும், அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் ஒரே நேரத்தில் பூஜ்ஜிய அளவை எட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அத்தகைய அளவை அடையும் வரை சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளனர் என்றும் தலைவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், முன்னர் கொள்வனவு ஆணை வழங்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படவிருந்த மருந்துகளையும், பூஜ்ஜிய அளவை எட்டிய மருந்துகளாகக் காண்பித்து அந்த மருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், இந்த மருந்துகளின் இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை குழு தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், சமிந்த விஜேசிறி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சந்திம ஹெட்டியாராச்சி, அசித நிரோஷன எகொட விதான, கோசல நுவன் ஜயவீர, சுதத் பலகல்ல, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க மற்றும் சமன்மலீ குணசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)