2,691 கைதிகள் விடுதலை
நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் கருத்திற் கொண்டு 2,691 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று (04) அறிவித்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று வரையான காலப் பகுதியில இதுவரை 2,691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கட சிறைச்சாலை வளாகத்திற்கு ஜனாதிபதி மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதி செயலாளரிடம் முன்வைத்திருந்தனர்.
தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கான் இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)