68,000 இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்ப காத்திருப்பு: வெளியுறவுச் செயலாளர்
கொவிட் தொற்றுநோயின் காரணமாக மோசமான உலகளாவிய நிலைமை தூண்டப்பட்ட போதிலும், முடக்கநிலை, தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு மற்றும் வான்வெளியை மூடுதல் ஆகிய வெளிநாடுகளில் நிலவும் தீர்க்கமுடியாத சவால்கள் மிகுந்த நிலைமைகளின் மத்தியில், துன்பத்தில் இருக்கும் இலங்கையர்களின் விரைவான வருகையை உறுதி செய்வதற்காக, தற்போது நிலவும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் செயன்முறையானது அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் வழிகாட்டல்களின் பேரில் வெளிநாட்டு அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2019 பெப்ரவரி மாதத்தில் வுஹான் நகரத்திலிருந்து 33 மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வந்ததிலிருந்து இப்போது வரை அமைச்சு கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த மீளழைத்து வரும் பணிகளை முன்னெடுத்து வருவதுடன், இன்றுவரை 60,470 இலங்கையர்கள் - யாத்திரிகர்கள், மாணவர்கள், அரச அல்லது ஆயுதப்படை அதிகாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறுகிய கால விஜயங்களை மேற்கொண்டவர்கள், கடல் பிரயாணிகள் மற்றும் கருணை நோக்க காரணிகளையுடையவர்களை 137 நாடுகளில் இருந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலமாக அமைச்சு நாட்டிற்கு மீள அழைத்து வந்துள்ளது.
முக்கியமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை பயனடைந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் முதலிடத்தில் உள்ள அதே வேளை, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களில் இருந்து மேலும் 20,000 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் நிலைமைகள் மோசமடைந்து வருவதால், அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் மற்றும் வேலையின்மைக்கான ஏனைய காரணிகளினால், திரும்பி வருவதற்கு எதிர்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த வெளிநாடுகளிலுள்ள 68,000 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்காக அமைச்சினால் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
2021 ஜனவரி 02 முதல் 09 வரை இயக்கப்படும் புதிய இருவார கால அட்டவணையில், சென்னை, மெல்போர்ன், குவைத், தோஹா, கனடா, சைப்ரஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,400 பயணிகள் உள்ளடங்குவர் என வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
மிக முக்கியமாக, நட்பு நாடுகள், ஐ.நா. முகவர் நிலையங்கள் மற்றும் பிராந்திய அமைப்புக்களிடம் அமைச்சும், அதன் 67 தூதரகங்களும் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்ற அதே வேளை, அரசாங்கம் பெரும் தொகையை செலவு செய்வதினின்றும் தவிர்க்கும் வகையில், அவை பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள், ஆர்.ஏ.டி. கருவிகள், பரிசோதனை இயந்திரங்கள், உயிர் காக்கும் மருந்துகள், வென்டிலேட்டர்கள், ஈரப்பத மூட்டிகள் மற்றும் தேசிய கொவிட் கட்டுப்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான பெரிய அளவு எண்ணிக்கையிலான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகமூடிகளை அன்பளிப்புச் செய்தன.
தடுப்பூசிகளை தயாரிப்பது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து தடுப்பூசியை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முக்கிய மற்றும் சரியான நேரத்திலான தகவல் ஊடகமாக தூதரகங்கள் நெருக்கமாகப் பின்தொடர்கின்றன.
உடனடி நிவாரண நடவடிக்கைகளாக, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாலி, துபாய் மற்றும் தோஹாவுக்கு 10,000 உலர் உணவுப் பொதிகள் மற்றும் உள்நாட்டு மருந்துகளை அமைச்சு அனுப்பி வைத்ததுடன், வெளிநாடுகளில் உள்ள எமது சமூகங்களின் வாழ்வாதாரத்திற்காக இதுவரை 80 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளித்துள்ளது.
இந்த நிதிகள், அடிப்படை மருத்துவம், பரிசோதனை, தற்காலிகத் தங்குமிடம், பாதுகாப்பு துணைக்கருவிகள், உள்ளகப் போக்குவரத்து மற்றும் சில சந்தர்ப்பங்களில் விமான டிக்கெட்டுக்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)