பாராளுமன்றம் நாளை கூடும்
பாராளுமன்றம் நாளை (23) முற்பகல் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
அதன்படி, நாளை (23) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10வது சரத்தின் கீழ் இறக்குமதி வரி குறித்த பிரேரணை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்
அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நாளை மறுதினம் (24) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி ஆரம்பமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
மார்ச் 25ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதும், மார்ச் 26ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் 27(2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்படாது முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முழு நேரமும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தை மேற்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)