இஸ்லாம் பாடத்தில் 'ஏ' சித்தி பெற்ற மாணவி நதீஷா இளங்கோவன்
பிற சமயங்களையும் கற்பதே புரிந்துணர்வை கட்டியெழுப்பும்
எம்.ஏ.எம். அஹ்ஸன்
இனம் மற்றும் மதக்குழுக்களுக்கு இடையில் மோதல்களை சந்திக்கும் முக்கியமான நாடுகளுள் இலங்கைக்கு பிரதான இடம் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. கடந்த காலங்களில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் உட்பட கலவரங்கள், குண்டுவெடிப்புகள் என அனைத்துமே இதற்கு சாட்சியாகும்.
தாம் பின்பற்றுகின்ற சமயம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மற்றும் குறித்த சமயங்களைப் பின்பற்றும் மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் குறைபாடுகள் இருக்கின்றமையே இவ்வாறான இன, மத முரண்பாடுகள் இலங்கையின் தசாப்த காலமாக தொடர்வதற்குப் பிரதான காரணமாகும்.
தமது மதத்தின் வணக்க வழிபாடுகளை மதிக்கும் ஒருவரினால் ஏனைய வணக்க வழிபாடு ஒன்றை விமர்சிக்கத்தான் முடிகிறதே தவிர குறைந்தபட்சம் அது அவர்களின் நம்பிக்கை என கடந்து செல்லவாவது முடியவில்லை என்பது துரதிஷ்டமே. அதனால்தான் பாடசாலைக் கல்வி தொடக்கம் ஏனைய சமயங்கள் தொடர்பான அறிவு வழங்கப்பட்டால் இவ்வாறான புரிதலின்மையை தவிர்க்கலாம் என்கின்ற கருத்து புத்திஜீவிகளால் வெகுவாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இப் பின்னணியில் இலங்கையில் இன, மத ரீதியாக பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்பவே மதக் கல்வியும் ஊட்டப்படுகின்ற நிலையில், ஒரு மதத்தைப் பின்பற்றும் மாணவன் அல்லது மாணவி வேறு ஒரு சமயத்தைக் கற்று அதில் தேர்ச்சி பெறுவது பற்றிய தேடல் ஒன்றை மேற்கொண்டோம். அதற்கமைய வேறு சமய பாடங்களைக் கற்று சிறப்புச் சித்தி பெற்ற சில மாணவர்களை எம்மால் கண்டறிய முடிந்தது,
சைவ சமயத்திற்கு மாற்றீடாக தனது பாடசாலையில் இஸ்லாம் பாடத்தினைக் கற்ற மாணவி நதீஷா இளங்கோவன் இது தொடர்பாக தெரிவிக்கையில் “எல்லா சமயங்களும் நல்ல விடயங்களை மட்டுமே போதிக்கின்றன. மனதில் உறுதியும் பெற்றோரின் பக்கபலமும் இருக்கின்றபோது இந்த விடயம் சாதாரணமானதே” என தெரிவித்தார்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பேருவளையை வசிப்பிடமாகக் கொண்ட நதீஷாவுக்கு கல்வி கற்க அருகில் தனியான சைவ பாடசாலைகள் இருக்கவில்லை. இந்நிலையில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள நளீம் ஹாஜியார் பெண்கள் கல்லூரியில் நதீஷா சேர்க்கப்பட்டார்.
வீட்டில் சைவ முறைகளைப் பின்பற்றிய அவருக்கு சைவத்திற்கு மாறாக இஸ்லாம் பாடத்தினைக் கற்பது ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறுமியாக இருந்த நதீஷாவினால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. ஆனாலும் தந்தை இளங்கோவன் மற்றும் தாய் ஷாந்தி தேவி ஆகியோர் வழங்கிய ஆதரவு அவருக்கு புரிதலினை ஏற்படுத்தியது.
பரீட்சையில் தோல்விகள் வந்து விடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் இஸ்லாம் பாடத்தினை நதீஷா படிக்கத் தொடங்கியபோதும் காலப்போக்கில் அதுவே தனக்கு மிகவும் பிடித்தமான பாடமாக மாறிப்போகும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.
பரீட்சைக்கு வரக்கூடிய குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் வசனங்களை மிகவும் விருப்பத்துடன் மனனம் செய்வதுடன் அதில் உள்ள நல்ல விடயங்களை தனது குடும்பத்துடனும் அவர் பகிர்;ந்து கொள்வார். என்றபோதிலும் தான் பின்பற்றும் சமயத்தின் நெறிமுறைகளைப் பேணுவதற்கும் அவர் தவறியதில்லை.
நதீஷாவின் உடன் பிறந்த சகோதரி ஹர்ஷனி இளங்கோவன் சைவநெறிக்கு பகரமாக நளீம் ஹாஜியார் பெண்கள் கல்லூரியில் இஸ்லாம் பாடத்தினையே கற்கிறார். அவருடைய தம்பி டிலான் தனுஷன் அருகிலுள்ள சிங்கள மொழிப் பாடசாலை ஒன்றில் சைவ நெறிக்கு பகரமாக பௌத்த தர்மத்தினையே கற்று வருகிறார்.
முஸ்லிம் பாடசாலையில் நதீஷா கற்றபோதும் இந்து மாணவி என்ற அடையாளத்துடனேயே அவர் இருந்தார். முஸ்லிம் மாணவிகள் அணியும் பர்தா என்ற ஆடையை அணிந்தால் மாத்திரமே விளையாட்டு அணிவகுப்பில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலைமையினால் தனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பது அவருடைய சிறு வருத்தம்.
இஸ்லாமிய அறிவுப் போட்டிகளான மீலாதுன் நபி விழா போன்ற போட்டிகளில் பங்குபற்றுவதற்கு விருப்பம் இருந்தபோதிலும் விமர்சனங்களுக்கு அஞ்சி அவற்றில் பங்குபற்றுவதை நதீஷா தவிர்த்து வந்தார். சவால்களைத் தாண்டி தனக்கு மிகவும் பிடித்த இஸ்லாம் பாடத்தில் இந்து மாணவியான நதீஷா இளங்கோவன் சிறப்புச்சித்தியான ஏ சித்தியைப் பெற்றார்.
தாம் பின்பற்றுகின்ற சமயத்தை விடுத்து இன்னொரு சமயத்தை கற்பத்தினால் மொழி விருத்தி, புரிந்துணர்வு, சமாதானம் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வீணான தப்பெண்ணங்களையும் களைந்தெறிய முடிகின்றது.
இந்த அனுபவத்தை தெல்தெனிய தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரமீஷ் கான் பெற்றிருக்கிறார். பிறப்பில் முஸ்லிமாக இருக்கும் இவர் பௌத்த சமயத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்களையும் மதிக்கிறார். குறித்த சமயத்தினை பாடசாலைச் சூழலில் கற்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை நல்லதொரு வாய்ப்பாகவே ரமீஷ் கருதுகின்றார்.
“முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்களுக்கான காரணங்களை என்னால் இலகுவாக புரிந்துகொள்ள முடிகின்றது. இதற்கான காரணங்கள் தொடர்பான தெளிவு எனக்கு உடனடியாக கிடைப்பதுடன் அவை தொடர்பாக உரிய தரவுகளுடன் அவர்களுக்கு விளக்கமளிக்க என்னால் முடிகிறது” என ரமீஷ் தெரிவிக்கிறார்.
சமூக ஊடகங்களில் இஸ்லாம் சமயம் விமர்சிக்கப்படும்போது தனது பாடசாலையில் பெற்றுக்கொண்ட பௌத்த சமய ஆதாரங்களை பயன்படுத்தி சமூக ஊடக பாவனையாளர்களை தெளிவுபடுத்தும் பணியை ரமீஷ் மேற்கொள்கிறார்.
எவ்வாறாக இருந்த போதிலும் பாடசாலைக் கல்வியில் ஏதாவதொரு சமயம் கட்டாயப்படுத்தி கற்பிக்கப்படுவது ஆரோக்கியமான கல்வி முறையாக இல்லை என கிராஸ் ரூட் ட்ரஸ்ட் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் சமூக ஆர்வலருமான ஹான்ஸ் பில்லிமோரியா கருதுகின்றார்.
அத்துடன் குறித்த நபர் அவ்வாறு பிறிதொரு சமயத்தை கற்க விரும்பினால் அவ்வாறு கற்பதில் எவ்வித பிழையும் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் “சமயம் என்பது பாடசாலைகளில் கட்டாயப் பாடமாக இல்லாமல் தெரிவுப் பாடமாக இருப்பது நல்லதொரு விடயமாக அமையும்.
பொதுவாக எல்லோருடைய வீட்டுச்சூழலிலும் சமயக்கல்வி செயன்முறையில் இருக்கின்றது. இப்படியிருக்க பாடசாலைகளில் கட்டாயப்படுத்தி ஒரு சமயத்தை கற்பிப்பது நல்லதல்ல. மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட சமயங்களை ஒப்பீட்டு அடிப்படையில் கற்பிக்கும் பாடத்திட்டம் ஒன்றே இப்போது தேவையாக இருக்கிறது” என தெரிவித்தார்.
சமயம் என்ற பாடத்தின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மத்தியில் இன மத அடிப்படையில் பாரிய பிரிவினை ஒன்று தென்படுகின்றது. சமயம் தெரிவுப்பாடமாக மாறினால் அந்தப்பிரிவினையை முற்றாக ஒழிக்க முடியும் என ஹான்ஸ் கருதுகின்றார்.
அத்துடன் சமயம் கற்பிப்பதாக இருந்தால் இலங்கையில் பின்பற்றப்படும் அனைத்து சமயங்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான பாடத்திட்டமாக சமயம் அமைய வேண்டும் என்றும் அது கூட தெரிவுப்பாடமாகவே இருக்க வேண்டும் என்றும் ஹான்ஸ் விரும்புகிறார்.
தற்போது இதுபோன்ற ஒப்பீட்டு சமயக்கல்விக்கு வாய்ப்பு இல்லாத தருணத்தில் மாற்றுமத பாடசாலைகளில் கற்பது பிழையான தெரிவு கிடையாது என்பது சமய மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
ரமீஷ் கானின் அனுபவங்களின்படி சிங்களப் பாடசாலையில் பௌத்த சமயம் கற்பது ஒரு அசாதாரணமான விடயமாக அவருக்கு இருக்கவில்லை. சிங்கள மொழியின் முக்கியத்துவம் மற்றும் சிங்களப் பாடசாலைகளின் கல்வித் தரம் என்பவற்றை கருத்தில்கொண்டே தமது பெற்றோர் தன்னை சிங்கள மொழிப்பாடசாலை ஒன்றில் சேர்த்தார்கள் என்று தெரிவிக்கும் அவர், அதற்கு நேரடியாக எந்தவித விமர்சனமும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
“மறைவில் சிலர் விமர்சித்தார்கள். பிள்ளைகளை சிங்களக் கோலத்தில் வளர்க்கிறார்கள் என்று ஒரு சில உறவினர்கள் சாடை பேசினார்கள்” என்று தெரிவிக்கும் ரமீஷ் அதை ஒரு பெரிய விடயமாக எப்போதும் கருத்தில் கொண்டதில்லை என கூறுகின்றார்.
இலங்கையில் மத அல்லது இன அடிப்படையிலான பாடசாலைகள் இருக்கும் நிலைமையை மாற்றுவது கடினமான ஒரு விடயம். கிறிஸ்தவ மிஷனரி அல்லது சர்வதேச கிறிஸ்தவ பாடசாலைகளில் சமயம் என்ற பாடத்திற்கு மாற்றமாக ‘ஒப்பீட்டு சமயம்’ (Comparative Religion) என்ற பாடமே கற்பிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் சர்வதேச பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சமயம் என்ற பாடத்திற்கு மாற்றீடாக ‘உலகின் சமயங்கள்’ (World’s Religion) என்ற பாடமே கற்பிக்கப்படுகின்றது. ஆனால் 1940 இல் அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வித்திட்டத்தில் இந்த நடைமுறைகளுக்கு மாற்றமாக தாம் பின்பற்றும் குறிப்பிட்ட ஒரு சமயத்தை மாத்திரம் கற்கும் நிலைமைதான் இலங்கையில் இருக்கிறது.
சர்வதேச இளமானிப்பட்டங்களை கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பத்தில் உலகின் சமயங்கள் எனும் பாடத்தினை கற்பித்த பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் இலங்கை பாடசாலைகளின் சமய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் “பாடத்திட்டத்தில் சமயம், சமயம் என்றால் என்ன?, சமயங்கள் தோன்றிய பின்னணி, உலகில் இருக்கின்ற பல்வேறு சமயங்கள் தோன்றிய வரலாறுகள் என்பன இணைக்கப்பட்டு போதிக்கப்பட வேண்டும்.
பாடத்திட்டத்தில் வெவ்வேறாக தாம் பின்பற்றும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்ற அதேவேளை உலகில் இருக்கின்ற ஒவ்வொரு சமயம் தொடர்பான விவரணங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான கல்வி முறைகள் நடைமுறைச் சாத்தியம் ஆகும் வரை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களின்போது ஏனைய சமய பாடசாலைகளுக்கு பிள்ளைகளை குறித்த சமய அறிவைப் பெற்றுக்கொள்ள அனுப்புவதற்கு அச்சப்படத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மதங்களை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் தோன்றும் இலங்கை போன்றதொரு நாட்டில் தாம் பின்பற்றும் சமயம் தாண்டி ஏனைய சமயங்கள் தொடர்பான அறிவு மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஊடாக இலங்கையின் கல்வி முறையில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பது புலனாகின்றது.
அதேநேரம் இத்தனை முரண்பாடுகளைத் தாண்டி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களினால் தமது பிள்ளைகளை அந்நிய மத பாடசாலைகளில் சேர்ப்பதற்கான நிலைமைக்கு பெற்றோர்கள் வீணாக அஞ்சத்தேவையில்லை. குறித்த சமயத்தின் ஊடாக கிடைக்கும் அறிவு எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமே தவிர அநாவசியம் அல்ல.
எதிர்காலத்தில் சமயங்களிடையே புரிந்துணர்வு கொண்ட ஒரு சந்ததியைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சகலரும் சகல மதங்களையும் கற்கக் கூடிய கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதுவே பன்மைத்துவத்தை அங்கீகரித்து வாழக் கூடிய தலைமுறை ஒன்றை வளர்த்தெடுக்க உதவி புரியும்.
-Vidivelli-
Comments (0)
Facebook Comments (0)