சுற்றுலாத் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய சுற்றுலாக் கொள்கையொன்றை உருவாக்கல்
இலங்கையில் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தைத் திட்டமிடுதல், கொவிட்-19க்கு பிற்பட்ட பொருளாதார மீட்சிக்கு அதி முக்கியமானதாகும்.
இதற்கமைய, இலங்கைக்கான தேசிய சுற்றுலாக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியை சுற்றுலாத் துறை அமைச்சு இந்த வருட முற்பகுதியில் ஆரம்பித்தது.
இக்கொள்கையின் பிரதான அம்சங்கள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சு, சர்வ அமைச்சுக் குழு, ஆலோசனைச் சபை, சுற்றுலாத் துறை அமைச்சின் செயற்குழு, நிதியமைச்சு, தனியார் துறைப் பங்காளிகள் மற்றும் மாகாண மட்டத்திலான பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது இதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கியது. கொள்கை வகுப்பு நடைமுறையானது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குவதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கொவிட்-19 பரவலின் நிமித்தம் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலைமையிலும் பரந்தளவு பயனாளிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இத்தேசிய கொள்கையை வகுப்பதற்கு முன்னர் இரண்டு கேள்விக்கொத்துகள் வடிவமைக்கப்பட்டன.
முதலாவது கேள்விக்கொத்து இலங்கையில் தற்போதுள்ள சுற்றுலாத் துறை நிலைமையில் கவனம் செலுத்தியது. இக்கேள்விக்கொத்திற்குப் பெருந்தொகையானோர் பதிலளித்தனர்.
சுற்றுலாத் துறையில் முதலீடு செய்துள்ள சகல அரச மற்றும் தனியார் பங்காளிகளின் பிரதிநிதித்துவ ரீதியான அபிப்பிராயங்களை இதன் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, கேள்விக்கொத்து மூலமும் அரச துறைப் பிரதிநிதிகள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தனியார் துறைச் சங்கங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கள் மூலமும் கிடைத்த தகவல்களைக் கொண்டு பிரச்சினைகள் பற்றிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.
உத்தேச கொள்கைத் தலையீடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்காகவும் ஆலோசனைக் கூட்டங்களின்போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்காகவும் இரண்டாவது கேள்விக்கொத்து தொகுக்கப்பட்டது.
கொள்கைச் சீர்திருத்தக் கேள்விக்கொத்து என்று அழைக்கப்படும் இக்கேள்விக்கொத்து, சுற்றுலாத் துறையிலுள்ள அரச துறை நிறுவனங்கள் (அரசாங்க மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்), தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள், சிவில் சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஏற்புடைய ஏனைய அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் பொதுவானதாகும்.
இந்த இரண்டாவது பின்தொடர் கேள்விக்கொத்தின் முக்கியத்துவம் பற்றி சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் சிறி ஹெட்டியாராச்சி குறிப்பிடுகையில்,
"பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள தற்போதய நிலைமையிலும் இயன்றளவு அதிகமான பங்கேற்பாளர்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்காள்வதே அமைச்சின் நோக்கமாகும்.
மேலும் கொள்கையானது தொழில் துறையின் அபிலாசைகளையும் எதிர்காலக் கண்ணோட்டங்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன், சமூக மற்றும் சுற்றாடல் ரீதியில் நிலைபேறு தன்மையுள்ளதாகவும் அதிர்ச்சிகள் மற்றும் பின்னடைவுக்குத் தாக்குப்படிக்கும் ஆற்றல்களைக் கட்டியெழுப்பக்கூடியதாகவும் அது அமைய வேண்டும்" என்றார்.
இக்கேள்விக்கொத்து, அக்கறையுள்ள சகல தரப்பினரும் தமது வாதங்களை முன்வைக்கவும் தீர்வுகளைப் பிரேரிக்கவும் ஒருமித்த கருத்தை எட்டவும் வாய்ப்பளிக்கின்றது. கேள்விக்கொத்தின் மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு கொள்கைப் பிரேரணைகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள்; உருவாக்கப்படும்.
அவையே இறுதியான தேசிய சுற்றுலாக் கொள்கையை வடிவமைப்பது தொடர்பில் நிறுவன, சட்ட, ஒழுங்குபடுத்தல் மற்றும் நிதி ரீதியான சீர்திருத்தங்களுக்கு யோசனைகளைத் தெரிவிப்பதுடன் பிரதான முன்னுரிமைகளையும் அடையாளம் காட்டும்.
எதிர்வரும் தசாப்தங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் நிலைபெறு தன்மையுள்ளதாக மாற்றுவதற்கு தேசிய சுற்றாடல் கொள்கை ஓர் அத்தியாவசிமான கூறாக அமையும். இலங்கையில் சுற்றுலாத் துறையின் ஒத்திசைவான மீட்சியை நோக்கமாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்கு சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆதரவை உறுதி செய்துகொள்வதற்காக ஜூலை மாத இறுதியளவில் இதற்கான உறுதிப்படுத்தல் தேசிய கருத்தரங்கொன்று நடத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது என்பது அநீதி, வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் பிரதான ஐக்கிய நாடுகள் அமைப்பாகும். நிபுணர்கள் மற்றும் பங்காளிகளை உள்ளடக்கிய எமது பரந்த வலையமைப்பின் ஊடாக 170 நாடுகளில் பணியாற்றும் நாம், மக்களுக்கும் புவிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் நிலைத்திருக்கும் தீர்வுகளைக் கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுக்கு உதவுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)