முஸ்லிம் வேட்பாளரை புறந்தள்ளி களமறிங்கும் பொதுஜன பெரமுன
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நேற்று (12) திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.
இந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாங்கள் போட்டியிட தீர்மானித்துள்ள மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களினை கையளிக்க வேண்டும்.
நாடளாவிய ரீதியிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா நிதகஷ் பொதுஜன சந்தான, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலகய என்ற கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளன.
இதனால் தற்போது வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மேற்குறிப்பிட்ட கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், கட்சி மாறும் படலங்களும் இடம்பெற்று வருகின்றன.
"இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறுவதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான இலக்கு" என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். "இதற்காக எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா நிதகஷ் பொதுஜன சந்தானவின் வேட்புமனு கையெழுத்திடும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்ட தலைவராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதற்கு மேலதிகமாக 16 மாவட்ட தலைவர்களும் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
இதற்கமைய தினேஷ் குணவர்த்தன – கொழும்பு, பிரசன்ன ரணதுங்க – கம்பஹா, நாமல் ராஜபக்ஷ - ஹம்பாந்தோட்டை, டலஸ் அழகப்பெரும – மாத்தறை, ரமேஷ் பத்திரண – காலி, ரோஹித அபேயகுணவர்த்தன – களுத்துறை, ஆறுமுகம் தொண்டமான் - நுவரெலியா, வாசுதேவ நாணயக்கார - இரத்தினபுரி, கனகா ஹேரத் - கேகாலை, மஹிந்தானந்த அளுத்கமகே – கண்டி, சனத் நிசாந்த – புத்தளம், சஷீந்திர ராஜபக்ஷ - மொனராகலை, எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம், சுசந்த புஞ்சிநிலமே – திருகோணமலை ஆகியோர் ஸ்ரீலங்கா நிதகஷ் பொதுஜன சந்தானவின் மாவட்ட தலைவர்களாக வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இருவர் மாத்திரம் மாவட்ட தலைவர்களாக வேட்புமனுவில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவரான நிமல் ராஜகபக்ஷ பதுளை மாவட்ட தலைவராகவும், முன்னர் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வன்னி மாவட்ட தலைவராகவும் இதன்போது கையெழுத்திட்டனர்.
எனினும் பொலநறுவை, திகாமடுல்ல (அம்பாறை), மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் களமிறங்கவுள்ள தலைமை வேட்பாளர்கள் தொடர்பில் இதுவரை நியமிக்கப்படவில்லை.
சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு எதிர்பார்த்தளவு வாக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த இரண்டு மாகாணங்களிலும் அக்கட்சியினர் களமிறங்குவதில்லை என முன்னர் தீர்மானித்திருந்தாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டன. இந்த நிலையிலேயே திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களுக்கான தலைமை வேட்பாளர்களை அக்கட்சியினர் நியமித்துள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா நிதகஷ் பொதுஜன சந்தானவின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா களமிறங்கவிருந்தார். எனினும் அவரை தனித்து களமிறங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியதாக அம்பாறை மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
இதனால், தேசிய காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக அதிகாரி ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி என்று அழைக்கப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினை யாழ். மாவட்டத்தில் தனித்து போட்டியிடுமாறும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஈ.பி.டி.பி யாழ். மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தினை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இந்த தேர்தலிலும் அக்கட்சி தனித்து களமிறங்க தயாராகியுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.
இதேவேளை, வட மேல் மாகாண ஆளுநராக செயற்படும் ஏ.ஜே.எம்.முஸம்மில், குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜப்ஷவுடன் இணைந்து போட்டியிட தயாராகியிருந்தார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளினையும் அவர் ஏற்கனவே முன்னெடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படட ஆளுநர்களில், இவர் மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவரது நியமனம் ஒரு குறுகிய காலத்திற்கானது என அரசாங்கத்தினால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது மாத்திரமல்லாமல் ஆளுநராக செயற்பட்டுக் கொண்டு நேரடி அரசியல் நடவடிக்கைகளையும் முஸம்மில் மேற்கொண்டிருந்தார்.
அவரது மனைவியான பெரோஸா முஸம்மிலும் குருநாகல் மாவட்டத்தில் தங்கியிருந்து கணவருக்கு ஆதரவாக அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்து வந்தார். இந்த நிலையிலேயே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவர் தீடிரென அறிவித்துள்ளார்.
எனினும் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு இவருக்கு வாய்ப்பு வழங்காமையினாலேயே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்க மர்ஜான் பளீல் (களுத்துறை மாவட்டம்), முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா (கொழும்பு மாவட்டம்), அம்ஹர் மௌலவி (கம்பஹா மாவட்டம்) ஆகியோர் தயாராக இருந்தனர்.
எனினும் இவர்களுக்கு அக்கட்சி சார்பாக களமிறங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் பிரபல மாணிக்கக் கல் வியாபாரியான மர்ஜான் பளீலின் பெயர் தேசியப்பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது மிக அரிது என என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் அனைவரையும் பல தடவை தொடர்புகொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.
ஆளுநர் முஸ்மிலை போன்று தொழிலதிபரான பாரிஸ் ஹாஜியாரும் கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளித்து வரும் அக்குரணை பிரதேச சபையின் தவிசாளரான இஸ்திகார் இமாமூடீன் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று கண்டி மாவட்டத்தில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மிக நெருக்கமாக செயற்படும் கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் இரத்தின கல் வியாபாரியொருவரின் ஆலோசனையுடனே இந்த சுயேட்சை குழு களமிறங்குகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த சுயேட்சை குழு களமிறங்குகின்றமையினாலேயே அக்கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவதாக முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பாரிஸ் ஹாஜியாருக்கு இறுதி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 15 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கவுள்ள இந்த சுயேட்சை குழு, 45,000 வாக்குளினைப் பெற்றால் ஒரு முஸ்லிம் எம்.பியினை பெற முடியும் என பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.
இது முற்றிலும் தவறான என்னப்படாகும். 2010ஆம் ஆண்டு நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று அல்லது இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வந்துள்ளனர்.
இந்த சுயேட்சை குழு போட்டியிடுவதன் காரணமாக தற்போது கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றாக குறைவடையும் வாய்ப்பே அதிகமாக காணப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை ஆளும் அரசாங்கம் பெருவதென்றால் முஸ்லிம்களின் வாக்கு அத்தியவசியமாகும். இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக செயற்படும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வறான நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவதில்லை என அக்கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் காரணமாக அக்கட்சிக்கு கிடைக்கவிருந்து முஸ்லிம் வாக்குளையும் இல்லாமலாக்கும் நடவடிக்iயே இதுவாகும்.
தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என முஸ்லிம் சமூகம் ஏங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படாவிட்டால் அது, குறித்த சமூகத்தினை மேலும் கவலையடைச் செய்யும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலிய மாவட்டத்தினை பொதுஜன பெரமுனவினால் வெற்றி பெற்ற முடியவில்லை. எனினும் குறித்த மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பான சிறுபான்மை இன வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமல்லாமல் தற்போதைய ஆளும் அரசாங்கத்திற்கு சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஒரு போதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற முடியாது.
இதனால், சிறுபான்மை வேட்பாளர்களை கட்டாயம் அவர்கள் களமிறக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைவதற்கு இன்று ஏழு நாட்கள் உள்ளன. இக்காலப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்க்கமான முடிவொன்றினை மேற்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்.
முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என அங்கலாய்ப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை. தாமரை மொட்டு அணி முஸ்லிம்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும்.
இதனைவிடுத்து முஸ்லிம்களை ஒதுக்கிவைத்து தனி சிங்கள வாக்குகளை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படுவது ஓர் அரசியல் கட்சிக்கு அழகல்ல. அதுமட்டுமன்றி, இவ்வாறு முஸ்லிம்களை ஒதுக்கி இனவாதம் மூலம் நாட்டின் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ள முயல்வதானது மிகமோசமான அரசியல் கலாசாரத்தை இளையோர் மத்தியில் விதைப்பதாகவே தோன்றுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டணியானது ஐக்கியத்துடன் நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும். எனவே இனவாதிகளுக்கு கட்டுப்படாது முஸ்லிம்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் ஊடாக முஸ்லிம் வாக்குகளை அக்கட்சி கைப்பற்ற முடியும். அவ்வாறில்லாத பட்சத்தில் குறித்த கட்சி தொடர்பான தவறான பார்வை முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடரும் என்பது நிச்சயம்.
Comments (0)
Facebook Comments (0)