நாட்டுக்கு அவசியமான புதிய கல்விக் கொள்கை தயாரிப்பு: கல்வி அமைச்சர்
aநாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் பணியிடத் தெரிவு தொடர்பான வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றார்.
கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க மொழிகள் வீழ்ச்சியுறும் நிலைக்குச் சென்றிருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது ஆங்கிலம் கல்வி மொழியாகிவருவது தொடர்பிலும் அவர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.இலங்கை சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை 02 வாரங்களுக்குள் உப குழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. சட்டத்தை தனியானதொரு பாடமாக அல்லாது குடியியல் கல்வியில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலும் அதில் விடயங்கள் உள்ளடக்கப்படுவது முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் காணப்படும் உறவு இதில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்குவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
60,000 பட்டதாரிகளில் 18,000 பேர் ஏற்கனவே பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள நடைமுறை குழப்பம் நிறைந்தது என பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்குழுவில் சுட்டிக்காட்டினர்.
ஏற்கனவே, பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள சில பட்டதாரிகள் இது தொடர்பில் விருப்பம் தெரிவிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இங்கு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வேலைத்திட்ட நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் செயற்றிட்டத்துக்கு பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் ஒழுங்கீனம் காணப்படுகிறது என்பது குழுவில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இந்தத் திட்டத்தை மீளாய்வுசெய்யுமாறு குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்குத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுப பஸ்குவல், யதாமினி குணவர்த்தன, பிரேம்நாத்.சி.தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்குழுவில் இணைந்துகொண்டனர்.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் கலந்துகொண்டிருந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் கூடிய இந்தக் குழு சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது கல்வி அமைச்சுசார்
ஆலோசனைக் குழுக் கூட்டம் இதுவாகும்.
Comments (0)
Facebook Comments (0)