சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் மீஸான் சஞ்சிகை வெளியீடு
சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி (Ghazal'24) கசல் ‘24’ எனும் கலாசார நிகழ்வோடு 57வது மீஸான் சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டப் புலமை மற்றும் கலாச்சார வெளிப்பாடு ஆகிய இரண்டையும் கொண்டாடும் வகையில் நீதித்துறைப் பிரமுகர்கள், சட்ட அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் பதில் தலைவர் எம்.டி. லாஃபர் மற்றும் நீதிபதி கே.எம்.ஜி.எச். குலத்துங்க, இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ் ஆகியோர் பங்குபற்றினர்.
சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில் 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில் மீசான் 1962ஆம் ஆண்டு A.M.M இன் தலைமையின் கீழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது. சட்டத்தரணி சுபைர் மற்றும் சட்டத்தரணி எம். தசூக்கி மொஹமட் ஆகியோரினதும் பங்களிப்பு இதில் அளப்பரியது.
இந்நிகழ்வில் உரையை ஆற்றிய கலாநிதி ஜெஹான் பெரேரா, நீதி மற்றும் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தியதோடு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை குறிப்பிட்டோடு உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த கடந்தகால ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் பரிந்துரைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் சொற்பொழிவை தொடர்ந்து நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் சட்ட மற்றும் கல்வித் துறைகளில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களுக்கு உயர்வதைக் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் கமிஷன் அறிக்கையை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கைப் பற்றியும் புறநிலை உண்மையைத் தேடுவதில் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.
எதிர்பார்க்கப்பட்ட தருணமான மீசான் 57வது பதிப்பின் அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து, நீதிபதி நவாஸுக்கு LSMM இன் தலைவர், செயலாளர் மற்றும் இதழாசிரியரினால் மீஸான் பிரதி வழங்கப்பட்டது. கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ், தனது உரையில், இலங்கை சட்டக் கல்லூரியின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால சட்ட வல்லுனர்களிடையே நீதி மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதில் சட்டக் கல்வியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பத்திரிகையின் மதிப்புரை தொடர்பில் திரு. எம்.ஏ.எம். ஹக்கீம் (கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்தரணி) நுண்ணறிவு விமர்சனத்தை வழங்கினார். இறுதியில் கசல் '24 கலைக் கூறுகளைப் புகுத்திய இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றைக் கலந்த புதுமைப்படைப்பின் வெளியீடு இனிதே நிறைவுற்றது.
Comments (0)
Facebook Comments (0)