அநுரவின் ஆட்சியிலும் இராஜதந்திர சேவையில் தொடரும் அரசியல் நியமனங்கள்

அநுரவின் ஆட்சியிலும் இராஜதந்திர சேவையில் தொடரும் அரசியல் நியமனங்கள்

றிப்தி அலி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவினால் வழங்கப்பட்டுள்ள ஒன்பது உயர் இராஜதந்திர நியமனங்களில் ஏழு அரசியல் நியமனங்கள் எனத் தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் இராஜதந்திர நியமனங்களை கடுமையாக விமர்ச்சித்து வந்தார்.

இவ்வாறான நிலையில் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் அவர் எதிர்த்த அரசியல் நியமனங்கள் இராஜதந்திர பதவியில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக இலங்கை வெளிநாட்டு சேவையாளர்கள் சங்கம் கண்டன அறிக்கையொன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் இராஜதந்திர பதவிகளில் அரசியல் நியமனங்கள் தொடர்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து இராஜதந்திர பதவிகளில் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைவரும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.  இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்கும் பணியில் தற்போது ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். 

இதற்கமைய அவுஸ்திரேலியா, இந்தியா, பிரித்தானியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு உயர் ஸ்தானிகர்களும் ஜப்பான், கியூபா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களும் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கு நிரந்த பிரதியும் நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர் ஸ்தானிகர்கள் மாத்திரமே இலங்கை வெளிநாட்டு சேவையினை சேர்ந்தவர்களாவர். ஏனைய ஏழும் அரசியல் நியமனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான யசோஜா குணசேகர, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானியராக நியமிக்கப்படவுள்ளார். தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் இவர், இந்தோனேசியாவிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகராக மகிஷினி கோலனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவிற்கான பிரதி உயர் ஸ்தானிகராக கடமையாற்றிய இவர், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

அண்மையில் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட பிரதிநிதியாக முன்மொழியப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அங்கு பணியாற்றிய மொஹான் பீரிஸும் பிரதம நீதியரசராக குறிப்பிட்ட காலம் பணியாற்றியுள்ளார். இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி சமரசிங்க, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் மினிஸ்டர் கொன்சியூலராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேலதிகமாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பெரட் செனவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு கடற் படையில் இணைந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வரை சுமார் 36 வருடங்கள் கடற் படையில் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெற்றுள்ளார்.

குருநாகலைச் சேர்ந்த இவர் தேசிய மக்கள் சக்தியின் தீவிர செயற்பட்டாளராவார். கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவருடைய பெயர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இறுதியாக செயற்பட்ட மொஹான் விஜயவிக்ரமவும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் அருஷா குரே ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். நிதித் துறையில் பேராசிரியரான இவர், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட போது நோர்வேயிற்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டார்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவர்  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார பொருளாதார துறையின் பேராசிரியரான பிவிதுரு ஜனக குமாரசிங்க, ஜப்பானிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த 2007ஆம் ஜப்பானின் ரிட்சூமெய்கன் ஆசிய பசுபிக் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தினை இவர் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றுகின்றார்.

ராவய பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றிய மஹிந்த ரத்நாயக்க, கியூபாவிற்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளார். இதேவேளை, விமானப் படைத் தளபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற எயார் மார்ஷல் உதானி ராஜபக்ஷ, தென்னாபிரிக்காவிற்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான நிமால் சேனாதீர, ஐக்கிய இராச்சியத்திற்கான உயர் ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டவுள்ளார். தற்போது இவர் ஸ்கொட்லாந்தில் உயர் கற்கைநெறியொன்றினை மேற்கொண்டு வருகின்றார்.

குறிப்பிட்ட காலம் இலங்கை நிர்வாக அபிவிருத்திக்கான நிறுவகத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2010 – 2014ஆம் ஆண்டு வரை வெளிவிவகார அமைச்சில் பணிப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார். 

பின்னர், தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாயத்தில் மினிஸ்டர் கொன்சியூலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இராஜதந்திரிகளாக நியமிக்கப்படவுள்ள இவர்கள் ஒன்பது பேரும் விரைவில் பாராளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி 7ஆம் திகதி நான்கு தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிகக்ப்பட்டனர். இலங்கை வெளிநாட்டு சேவையினைச் சேர்ந்த இவர்களுக்கான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலேயே வழங்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இவர்களின் பதவியேற்பில் காலதாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.