ஞானசார தேரரின் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

ஞானசார தேரரின் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் 'அபே ஜன பலய' கட்சியினால் பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (22) திங்கட்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.  

2020ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 'அபே ஜன பலய' கட்சியினால் குருநாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  

குறித்த வேட்புமனுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த வேட்பாளர்களின் சத்தியக் கடதாசிகள், சமாதான நீதவானினால் உறுதிப்படுத்தப்படாமையில் குறித்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிராகரிப்பு எதிராக 'அபே ஜன பலய' கட்சியினால்  மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதியரசர் சோபித ராஜகருண ஆகியோர் முன்னிலையில் இன்று (22) திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டன.

எந்தவித விசாரணைகளுமின்றி குறித்த மனுக்கள் அனைத்தும்  நீதிரியரசர்கள் குழுவினால் நிராக்கரிப்பட்டு; தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உள்ளிட்ட 'அபே ஜன பலய' கட்சியின் வேட்பாளர்கள் பலர் இந்த மனுக்களை தாக்கல், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரீட் ஆணை கோரியிருந்தனர்.