கோப் குழு நாளை (20) முதல் மீண்டும் கூடும்
கொவிட் 19 நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) செயற்பாடுகளை நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இதற்கமைய கொவிட் -19 சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடைய தொடர்புடைய திட்ட முகாமைத்துவப் பிரிவுகளின் அதிகாரிகள் நாளையதினம் (20) கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப் பிரிவின் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதிகாரிகள் மாத்திரம்
நாளையதினம் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை இங்கு ஆராயப்படவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Comments (0)
Facebook Comments (0)