குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உபகரணங்களை சுகாதார அமைச்சு பெற்றுக் கொண்டது
கொவிட்-19இற்கு எதிரான தடுப்பூசிகள் உள்ளடங்கலாக, தடுப்பூசி வழங்கல் சேவைகளை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யுனிசெப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உபகரணங்களின் முதல் தொகுதி சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய (யுனிசெப்) அலுவலகத்தின் பிரதிநிதி எமா பிரிஹம், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் சுகியாமா அகிரா ஆகியோர் யுனிசெப் அலுவலகத்தில் வைத்து 500 தடுப்பூசி கொள்கலன்களை கையளித்தனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் இவை பெற்றுக் கொள்ளப்பட்டன. அடுத்த தொகுதிகளில், 100 குளிரூட்டல் வசதி கொண்ட குளிரூட்டிகள், 145 குளிர்சாதன வெப்பநிலை கண்காணிப்பான்கள் மற்றும் 1,000இற்கு மேற்பட்ட தடுப்பூசி கொள்கலன்கள் என்பன உள்ளடங்குகின்றன.
"இந்த உபகரணங்கள் தற்போது நடைமுறையிலுள்ள தடுப்பூசி நடவடிக்கைக்கும், கொவிட்-19இற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கலுக்கு மட்டுமல்லாது நீண்டகால முற்றுமுழுதான தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு ஆதரவாகவுள்ளது.
தடுப்பூசி வழங்குவதற்கும் எங்கள் குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த முக்கியமான பொருட்களுக்கு உதவித்தொகை வழங்கிய ஜப்பான் அரசுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான எங்கள் நீண்டகால உறவை இப்போது நான் நினைவுபடுத்துகிறேன், எங்கள் நாட்டை ஆதரிக்க நீங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்" என சுகாதார அமைச்சர் வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "அதே மனப்பான்மையுடன் யுனிசெப்பின் நாடு முழுவதுமான தடுப்பூசி வழங்கல் மற்றும் குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உபகரண கொள்வனவுக்கு அரசாங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஜப்பானியத் தூதுவர் சுகியாமா, "இலங்கையின் நீண்டகால நண்பராக, ஜப்பான் இலங்கைக்கு 'கடைசி ஒரு மைல் ஆதரவு ஊடாக குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி முறையை விஸ்தரித்து நாடு முழுவதும் தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசிகளை சமமாக கிடைப்பதனை உறுதி செய்கிறது.
உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கு ஜப்பான் அத்தகைய அவசர உதவிகளை யுனிசெப் மூலம் வழங்கும்போது, 500 தடுப்பூசி கொள்கலன்கள் இன்று இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன, இது நமது உலகளாவிய 'கடைசி ஒரு மைல் ஆதரவு' திட்டத்தின் கீழ் தடுப்பூசி உபகரணங்களின் முதல் தொகுதி ஆகும்.
யுனிசெப் இலங்கை மற்றும் சுகாதார அமைச்சின் திறமையான கொள்முதல் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். முறையான வெப்பநிலை கட்டுப்பாட்டின் கீழ் தடுப்பூசிகளை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் விநியோகிப்பதன் மூலம் 500 தடுப்பூசி கொள்கலன்கள் இலங்கையில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் என்று ஜப்பான் அரசு நம்புகிறது.
அரசு இதுவரை இலங்கையின் கொவிட்-19 பதிலளிக்கும் செயற்பாட்டிற்கு 14.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஜப்பான் வழங்கியுள்ளதுடன், கொவெக்ஸ் வசதிக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளது. கொவிட்-19 தடுப்புச் செயற்பாட்டிற்கு அரசாங்கத்துடனும் இலங்கை மக்களுடனும் ஜப்பான் அரசு தொடர்ந்து ஒற்றுமையுடன் நிற்கும்" எனத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அமைய, கொவிட-19இனால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்துக் கொண்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உள்ளடங்கலாக முன்னுரிமை குழுக்களுக்கான பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலங்கை தற்போது வழங்கி வருகின்றது.
இது தொடர்பில் யுனிசெப் இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதி எமா பிரிஹம கருத்து தெரிவிக்கையில்,
"இந்த உலக நோய்த்தடுப்பு வாரத்தில் தடுப்பூசிகள் நம்மை ஒன்றிணைக்கின்றன மற்றும் தடுப்பூசிகள் வேலை செய்கின்றன என்ற கருப்பொருள்களின் கீழ் குறிக்கப்பட்டுள்ளதை விட, இந்த குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி கருவிகளை ஒப்படைக்க இதைவிட சிறந்த நேரம் இருந்திருக்க முடியாது.
ஜப்பான் அரசு, யுனிசெப் மற்றும் சுகாதார அமைச்சின் இந்த கூட்டு, கொவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, முன்னெப்போதையும் விட இப்போது முக்கியத்துவம் வாய்ந்த நோய்த்தடுப்பு சேவைகளை அதிகரிக்க ஒன்றிணைவதற்கான சக்தியை துல்லியமாக நிரூபிக்கிறது" என்றார்
"ஜப்பான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவு மற்றும் இலங்கையில் சுகாதார அமைச்சகத்துடன் வலுவான ஒத்துழைப்புக்கு யுனிசெப் நன்றியுடன் உள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொவெக்ஸ் வசதி மூலம், மார்ச் மாதத்தில், யுனிசெப் ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனெக்கா 'கொவிஷீல்ட்' தடுப்பூசிகளின் முதல் தொகுதியாக 264,000 அளவுகளில் கொண்டு வந்தது. இன்று பெறப்பட்ட குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உபகரணங்கள் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தைப் பெறுதல், சேமித்தல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த நோய்த்தடுப்பு முறையை அதிகரிக்கும்.
Comments (0)
Facebook Comments (0)