கொரோனா மரண இறுதிக் கிரிகைகள்: முரண்பாடுகளும், எட்டப்பட்ட சமாதான தீர்வுகளும்
சமீஹா சபீர்
இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளினால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையினை கண்டு அவற்றினை சுமுகமாக தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு தனது வகிபாகத்தை வகிக்கின்றது.
இனங்களுக்கடையில் ஏற்படும் முரண்பாடுகள் மட்டுமல்ல பல்லின சமூகம் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இன, மத, கலாசார பாரம்பரிய மரபு கோட்பாடுகளுக்கு ஏற்ற வகையில், அந்தந்த மக்களை வாழவைப்பதும் அந்த நாட்டின் பாரிய பொறுப்பாகும்.
அத்துடன் வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்க மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மூலமும் அவர்களுக்கிடையே சகவாழ்வை பலப்படுத்த வேண்டிய முக்கிய பெறுப்பும் உண்டு.
ஓவ்வொரு இனமும் தங்களது மத கலாசார உரிமைகளுடனான சகவாழ்வை அடையவும் , வாழவும் ,அரசியல் தலைமைத்துவம் ,சிவில் சமூகம் மற்றும் ஊடகவியளாளரினதும் பாரிய பொறுப்புனர்ச்சி அவசியமாகின்றது. மதிப்புடனும் சுய மரியாதையுடனும் தங்களுடைய கலை கலாசார பண்பாடுகளுடன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவதே ஒவ்வொரு மனிதனின் பண்பாக விளங்குகின்றது.
இந்த பண்பானது இன, மத காலாசாரத்திற்கு ஏற்ப வேறுபட்டு காணப்படும். வேறுபட்டு காணப்படும் பன்புகள் ஒருவரை ஒருவர் ஒண்றிணைப்பதோடு உரிமைப்பாதுகாப்பாகவும் அமைகின்றது.
கொவிட்19 வைரஸ் தொற்றானது உலக மக்களின் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றது. பல இலட்சக்கணக்காண உயிரிழப்புக்களுடன் மக்களின் இயல்பு நிலை வாழ்கையையும் அழித்துவிட்டது. அத்துடன் அவர்களது கலாசார மரபு பாரம்பரிய ,செயற்பாடுகளையும் , ஒழுக்கங்களையும் தலைகீழாக புறட்டிப்போட்டும் விட்டது என்றே சொல்லாம்.
கொவிட்19 காலப்பகுதியில் உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கை பெரும் பேசும் பொருளாகவே பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளின் பார்வையும் இலங்கை மீதே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசாங்கமானது கொரோனா வைரசினால் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் உடல்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பின் பிரிவு 14ஆனது மற்றவர்களது கலாசாரத்தை ஊக்குவித்து மக்கள் சுதந்திரமாக வாழ்வதையும் உறுதி செய்கின்றது. இனம் மதம் என்ற வேறுபாடின்றி இந்த சுதந்திரமானது அனைத்து பிரஜைகளுக்கும் உரித்தானது என்று அரசியல் அமைப்பு குறிப்பிடுகின்றது.
இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினதும் நம்பிக்கைக்கு மாற்றமான முறையில் கொரோனாவினால் மரணமடையும் உடல்கள் எரியூட்டப்பட்டதால் மனவேதனைக்கும், மன உளைச்சளுக்கும் அவர்கள் ஆளாக்கபட்டிருந்தனர்.
சாதாரன வைத்தியங்களுக்கு கூட வைத்தியசாலைகளுக்கு செல்ல பயந்த நிலையிலேயே காணப்பட்டனர். மரணிப்போரின் உடல்களை எரியூட்டும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு உலக இஸ்லாமிய கூட்டமைப்பின் (OIC) மனித உரிமைக்கான பரிவு (IPHRC) தனது கண்டனத்தை தெரிவத்திருந்தது.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது என்பது பல மதத்தினர் பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். பல மனித உரிமை அமைப்புக்களும், ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையும், மதசுதந்திர மற்றும் நம்பிக்கை குறித்த சிறுபான்மை மக்களின் அடக்கம் உரிமைகளை மதிக்குமாறும் வலியுருத்தியிருந்தது.
அரசு எரித்தல் என்ற நிலைபாட்டிலேயே ஏன் இருந்தது?
பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டும் அரசாங்கம் பல காரணங்களுக்காக எரியூட்டல் செய்யும் விடயத்தில் தன் பக்க நியாயத்தையும் பின்வருமாறு தெளிவுபடுத்தியிருந்தது.
இலங்கை பொது சுகாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு நாடாகும். இதனை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியிருக்கின்றது. ஏனைய நாடுகள் கூட எங்களை உதாரணமாக கொண்டு இயங்குகின்றது.
இதனால் இலங்கை சுகாதார குழு இந்த விடயத்தில் மிகக் கவனமாக செயற்பட்டது. ஏனையவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் மிகவும் புத்திசாலித்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை புதைப்பதன் மூலம் சடலங்களில் இருந்து வைரஸ் கிருமிகள் நிலத்தின் கீழ் பரவலாம் என்ற அச்சம் காணப்பட்டது. எமது நாட்டின் பௌதீக தன்மையை பொறுத்தவரையில் நிலக் கீழ் நீரானது பசைத்தன்மை கூடியதாகவும், அதிகளவான நீர் கொண்டதுமான நிலமாக காணப்படுகின்றது.
மழைக் காலங்களில் இது இன்னும் அதிகரிகின்றது. ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் வேறு வைரஸ்களால் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் அடகஸ்தலங்களில் இருந்து வழிந்தோடும் நீர்களில் இருந்து அந்த வைரஸ்கள் வெளியாகி இருந்ததாக ஆராய்ச்சிகளில் அறியப்பட்டது.
அதனாலேயே இந்த கொரோனா வைரஸ் மூலமாகவும் இது பரவக்கூடும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்ததினாலேயே எரியூட்டல் என்ற நிலைபாட்டில் அரசாங்கம் இருந்து வந்ததாகவும் அதற்கு ஆதாரமாக ஆய்வினை ஒன்றையும் அரசாங்கம் முன்வைத்திருந்தது. தாய்லாந்தில் பிணவரையில் கொரோனாவால் இடந்த உடல்களில் இருந்து வெளியேறிய கொரோனா வைரஸ் அதில் பணிபுரிந்த ஒருவருக்கு தொற்றியதாக ஆய்வில் உருதிப்படுத்தப்பட்டிருந்ததாக அறிவித்திருந்தது.
இவை போன்ற காரணங்களினாலேயே அடக்கம் என்ற முடிவுக்கு அரசாங்கம் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. மத ரீதியான பிரச்சனையாக இதை அரசாங்கம் பார்க்கவில்லை , விஞ்ஞான ரீதியான பார்வையிலேயே அதை அரசாங்கம் பார்ப்பதாக தெளிவுபடுத்திpயிருந்தது.
புதைப்பதால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் நோக்கமாகவும் இருந்தது. எரிப்பதன் மூலம் அதனூடேயே கிருமிகளும் எரிந்து போய்விடுவதாக விஞ்ஞான ஆய்வுகள் சொல்வதாகவும் அரசு தன் பக்க நியாயங்களை முன்வைத்திருந்தது.
இவ்வாறான காரணங்களை அரசாங்கம் முன்வைத்திருந்தாலும், அரசாங்கம் பக்கசார்பாகவே நடந்து கொண்டதாகவும் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. பலஅரசியல் வாதிகளும், மத போதகர்களும் தங்களது கருத்துக்களையும் பின்வருமாறு வெளியிட்டிருந்தார்கள்.
எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தனது கருத்தினை இவ்வாறு வெளியிட்டிருந்தார். ''கொரோனா தொற்றினால் உயிரிழக்கும்; உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். உலக சுகாதார தாபனம் அடக்கத்திற்கான அனுமதி வழங்கியிருந்தும், நாட்டின் கொரோனா பரவல் ஏற்பட்டதை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களுடைய மதப்பிரகாரம் இறந்த உடல்களை எரிப்பதற்கு அடிப்படைவாத தீர்மானமே எடுக்கப்பட்டிருப்பதாக" அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
முஸ்லிம் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவது என்பது உண்மையிலேயே எம் மனதுகளை மிகவும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. எல்லா வகையிலும் இந்த தொற்று நோயை அதீத கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற மனப்பக்குவத்துடனேயே முஸ்லிம் மக்கள் மிகவும் ஒத்துழைப்புடனேயே நடந்து கொண்டனர்.
உலக சுகாதார அமைப்பு அடக்கத்திற்கான அனுமதியை வழங்கியிருந்த போதும் இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஒரு ஒரு பக்க நியாயபாட்டினை மட்டுமே கொண்டு செயற்பட்டனர். சர்வதேச வதிமுறைகளைப் பேணி நல்லடக்கம் செய்யலாம் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கான ஒத்துழைப்பை வழங்காது செயற்பட்டனர்
நாங்கள் இந்த அரசாங்கத்திடம் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட படி எங்களது மார்க்க சுதந்திரங்களை மதித்து தகனம் செய்கின்ற செயற்பாட்டை மாற்றியமைத்து குறிப்பாக கொவிட் தொற்றினால் மரணிக்கின்ற எமது உறவுகளை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்கின்டிருந்தோம்.
உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறையாக நல்லடக்கம் இருக்கின்ற போதிலும் நம் நாட்டில் மட்டுமே இது மறுக்கப்பட்ட உரிமையாக இருந்தது. இதனை அனைத்து அரசியல் தலைவர்களும் இன, மத அரசியல் பேதங்களை மறந்து உணர்வு பூர்வமாக உணர்ந்து செயற்படுமாறும் வினயமாக கேட்டுக் கொணடிருந்தோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இது தொடர்பாக வினவிய போது மேற் கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவர் பி. பி. சி. சிங்கள சேவைக்கு அவர் அளித்திருந்த பேட்டியில்,
''உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராக இருக்கும் 182 நாடுகளில் இலங்கை மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை எரியூட்டுகிறது. இந்த உடல்களை புதைப்பதால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பன அறிவியல் விளக்கங்களோடு, அதிகார பூர்வமாக நிரூபித்தால் அரசின் அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்" என்றும் தெரிவித்திருந்தார்.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார் நாயக்க குமாரதுங்க வெளியட்டிருந்த தனது கருத்தில் ''கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற தனது முடிவை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதேவேளை உடல்களை தகனம் செய்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என தான் கருதுவதாக தனது உத்தியோகபூர்வ முகநூலில் வெளியிட்டிருந்தார்.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் ஆராய்ந்த பின்னர்தான் உடல்கள் தகனம் செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்த விடயங்கள் ஆதாரமற்றவை. உடல்களை அடக்கம் செய்வதை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றுகின்றனர்.
தங்கள் மத நம்பிக்கையை பின்பற்றி உடல்களை அடக்கம் செய்வதற்கான நியாயபூர்வமான உரிமையுள்ளது. அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதே அரசின் கடமையாகும். எனவும் தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களின் எரிப்புக்கு எதிராக ஆரம்பத்திலேயே பாதையில் இறங்கி குரல் கொடுத்தவர் மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள் சமரவீர ஆவார்.
அனைவரினதும் உடல்கள் எரிக்கப்படவே வேண்டும். இதில் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ விதிவிலக்கல்ல என பௌத்த பிக்குகளில் பெரும்பாலானோர் எதிர்ப்புக்களையும், ஆர்பாட்டங்களையும் நடாத்திக் கொண்டிருந்த வேளையில் பொகவந்தலாவை ராஹூல பௌத்த மதகுரு முஸ்லிம், கத்தோலிக்க மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்திருந்தார்.
"இறந்தவர்களின் உடல்களை உரிய முறையில் நல்லடக்கம் செய்வது அவரவர் மதக் கடமை. அந்த கடமையை இல்லாமல் ஆக்குவது பாவமான செயலாகும். இதற்காக நான் குரல் கொடுத்த போது பல அழுத்தங்களை எதிர் கொண்டேன்.
பௌத்த மதத்தை, புத்த தர்மத்தின் போதனைகளை புரிந்து கொள்ளாமல் யாராவது பேசினால் எப்படி எனக்கு வலிக்குமோ அது போல்தான் அடுத்தவர்களின் மதங்களையும் , முஹம்மது நபியின் போதனைகளையும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டால் அது அவர்களுக்கும் வலிக்கும்'' என்று பௌத்த தர்மதின் நியாயமான நீதியான கருத்தை முன்வைத்திருந்தார் போகவந்தலாவை ராஹுலதேரர்.
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் 46வது கூட்டத் தொடரில் இலங்கையின் ஜனாசா எரிப்பு பற்றிய விடயமும் பெரும் பேசும் விடயமயாகவே இருந்தது. இதில் இலங்கையில், கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் பன்னுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்பதில் உலக நாடுகள் அக்கரையாக இருக்கின்றன என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிகாட்டிதுடன் அதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பலத்த பல போராட்டங்களின் பின் வென்றெடுக்கப்பட்ட உரிமை
இந்த போராட்டங்களில் பெரும் பேசும் நிகழ்வாக அமைந்ததுதான் வெள்ளை துணி (கபன் சீலை) போராட்டம் . இந்த போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தவர் சமூக ஆர்வலர் அஞ்சுல ஹெட்டிகே ஆவார்.
அவர் பொரளை கனத்தை வேலியில் வெள்ளை துணி ஒன்றை கட்டி தனது எதிர்ப்பை வெளியிட்டு முஸ்லிம், கத்தோலிக்க மக்களுக்காக துணை நின்றாவராவார். இந்த வெள்ளை துணி போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்து கொண்ட இன்னுமொருவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா.
ஜனாசா எரிப்புக்கான தனது எதிர்ப்பை பொரளை கனத்தை வேலியில் வெள்ளை துணியை கட்டிவிட்டு அவர் தனது உருக்கமான கருத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார். '' இன பேதங்களை மறந்து மனித நேயமுள்ள மனிதர்கள் இந்த வெள்ளை துணி போராட்டத்தில் இணைந்து இங்கே வந்து வெள்ளை துணிகளை கட்டினார்கள்.
இதில் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பல்லின சமூகத்தவரும் எம்முடன் களமிறங்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நம்முடடைய உணர்வுகளில் பங்கெடுத்து கொண்டிருப்பது எமது உரிமை போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.
இவரது இந்த கருத்து மக்களிடையே பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் பொரளை கனத்தை வேலியில் வெள்ளை துணிகளை கட்டி இப் போராட்டத்திற்கு ஆதரவு காட்டத் தொடங்கியிருந்தனர்.
இந்த வெள்ளை துணி போராட்டத்தில் தன் எதிர்ப்பை தெரிவித்து துணி ஒன்றை கட்டிய சட்டத்தரணி லிஹினி பெர்னானன்டோ கருத்து தெரிவித்திருக்கையில். ''கொரோனா பரவல் என்பது எல்லோருக்குமே பொதுவான ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இதை ஒரு காரணமாக காட்டி இனங்களுக்கிடையில் மோதல்களை தோற்றுவிப்பது நல்ல காரியமல்ல. உடல்களை அடக்கம் செய்வதால் விஞ்ஞான ரீதியான ஆபத்துக்கல் இல்லை என்றே உலக சுகாதார அமைப்பிலிருந்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே உடல் அடக்கத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்று தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
அரசின் நல்லடக்க அனுமதிக்கு அழுத்தம் பிரயோகித்த மற்றுமொரு காரணிதான் உயிரியல் நிபுனர்களின் விஞ்ஞான ரீதியான கருத்துக்கள். பேராசரியர்களான திஸ்;ச விதாரன , மலிக் பீரிஸ் போன்ற நிபுணர்கள் கொவிட் தொற்றினால் இறக்கும் சடலங்களை அடக்கம் பன்னுவதால் நிலத்தடி நீர் மாசடையாது என விஞ்ஞான ரீதியான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இவர்களது இந்த கருத்துக்கள் அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தது.
2020 மார்ச் மாதம் 30ம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் கொவிட் தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற கட்டாய தகனத்தில் இருந்து, உரிமை போராட்டம், நியாயமான கருத்துக்கள் எதிர்ப்பு பேரணிகள் , உலக நாடுகளின் அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து சுமார் ஒருவருட காலமாக நிறுத்தப்பட்டிருந்த நல்லடக்கம் செய்யும் உரிமை மீளவும் கிடைக்கப்பெற்றிருந்துது.
அதனடிப்படையில் 2021 பெப்ரவரி 25ம் திகதி சுகாதார அமைச்சு அடக்கம் செய்ய முடியும் என்ற வர்த்தமானியை வெளியிட்டிருந்து. எனினும் அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடம், சுகாதார வழிகாட்டல்கள் தயார் நிலையில் இல்லாமல் இருந்ததனால் உடனடியாக நல்லடக்கம் இடம் பெறவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் மடக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியின் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் காணி பிரதேச சபையாலும் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தாலும் அடையாளம் காணப்பட்டு ஜனாசாக்களை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சுமுகமான முறையில் அடக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. அடக்கப்பட்டு வரும் உடல்களின் பெயர் விபரங்கள், தொடர் இலக்கங்கள் என்பன முறையாக பதியப்பட்டும் வருகின்றன. இப்பணியை ஓட்டமாவடி , ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனங்கள் இணைந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் சிறப்பாக இந்த சமூகசேவையை முன்னெடுத்து வருகின்றன.
இதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை ஏற்படுத்தி தருமாறு அசாங்கத்திடம் வேண்டுகோளும் முன்வைக்கபட்டிருக்கின்றது.
''அரசாங்கம் கொரோனாவால் இறக்கும் உடல்களை எரித்தபோது அதற்காக குரல் கொடுத்தவர்களுள் நீங்களும் ஒருவர். அப்போது அன்று அந்த நிலைமையை எப்படி பார்த்தீர்கள் ? இன்று நல்லடக்கம் தீர்வு ஒன்று எட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை இப்போது எப்படி பார்க்கின்றீர்கள் ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது , பின்வருமாறு பதிலளித்திருந்தார்
''அரசாங்கம் அனைத்து மனிதாபிமான நடைமுறைகளையும் மீறி , முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கிலும் தனது ஆதரவு தளத்தைப் பாதுகாக்கவும் தேசிய பிரச்சனைகளை திசைதிருப்பவுமே கொவிட் மரணங்களை எரிப்பதில் விடாப்பிடியாக நின்றது. எமது போராட்டமும் சர்வதேச அழுத்தங்களும் அந்த நிலையை விட்டும் பின்னடையச் செய்தன.
இன்று உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றன. அதிலும் கொரோனா மரணங்களை ஒரிரு இடங்களில் மாத்திரம்தான் அடக்கலாம் என்ற அரசின் விஞ்ஞான பூர்வற்ற நிலைப்பாடு பாராட்டுக்குரியதல்ல. குறைந்நது ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒர் இடமாவது இதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.
அடக்கத்திற்கான தீர்வு கிடைத்தாலும் முழுமையாக கிடைத்த தீர்வாக இதை பார்க்கமுடியாது. உலக நாடுகளை பார்க்கும் போது பல இடங்களில் அடக்கம் செய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் மட்டும் ஒரு இடத்தில் மாத்திரம் அடக்கம் செய்ய கூடிய நிலைதான் காணப்படுகின்றது.
இதற்காக எத்தனையோ வரைமுறைகள் , உடல்களை கொண்டு போவதில் உள்ள பிரச்சனைகள் போன்ற பல சிக்கல்கள் காணப்படுகின்றன. அதனால் அந்தந்த பகுதிகளில் அடக்கம் செய்வதற்குரிய அனுமதிகள் கிடைக்கப்பெறுமானால் மக்களுக்கு பல சிரமங்களில் இருந்து விடுபடக்கூடிய நிலைமைகள் காணப்படும்.
எனவே அரசாங்கம் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட இடங்களிலும், அந்தந்த பகுதிகளில் நல்லடக்கத்திற்கான அனுமதிகளை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை (22.09.2021 )இந்த மஜ்மா நகரில் கொவிட் தொற்றினால் இறந்தவர்களின் 2,963 பேரின் உடல்கள் நல்லடகம் செய்யப்பட்டிருக்கின்றது. கொவிட் தொற்றினால் உயிரிழந்த உடல்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திலிருந்து சுமார் 11 மாதங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற இந்த சுமுகமான தீர்வானது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமாக இது பார்க்கப்பட வேண்டி உள்ளது.
இதிலிருந்து, ஒரு விடயம் முரண்பாட்டுக்கு வரும் போது அதற்கான நியாயங்களை இரு பக்கங்களிலிருந்தும் சம அளவில் தெளிவாக பெற்றுக்கொள்வதுடன், சாத்தியமான காரணிகள், தரவுகளிலும் அவதானம் செலுத்தப்படவேண்டும்.
அத்துடன் இந்த முரண்பாட்டு உரிமை போராட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை நிறையவே உள்ளது. சிறுபான்மை சமூகங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும் போதோ, வேறு பிரச்சனைகளிள் நியாயமான தீர்வினை கேட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போதோ இன மத பேதங்களை மறந்து ஒருமித்து ஒன்று பட்டு குரல் கொடுத்தால், போராடினால் உரிமை மறுப்பாயினும் வென்றெடுத்து விடலாம் என்பதற்கு இந்த கொவிட் ஜனாசா எரிப்பு உரிமை போராட்டம் சிறந்த உதாரணமாம்.
ஒரு சமூகத்திற்கு நெருக்கடி ஏற்படும் போது பாதிக்கப்பட்ட சமூகம் மாத்திரமே தனித்து நின்று போராடவேண்டும் என்ற நியதியில்லை. மாறாக நியாயமான கோரிக்கைகள் வேண்டி நிற்கும் போது ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் நீதி நிலைநாட்டப்படும்.
MWRAF நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான சமாதான ஊடகவியல் இருநாள் பயிற்சி நெறியினை தொடர்ந்து சமாதான ஊடகவியலின் அடிப்படைகளை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
Comments (0)
Facebook Comments (0)