காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு அறிவுத் திட்டம்

காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு அறிவுத் திட்டம்

றிப்தி அலி

உலகளாவிய ரீதியில் இன்று பேசுபொருளாகவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான அறிவினை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை மத்திய சுற்றாடல் அதிகார சபை தற்போது முன்னெடுத்துள்ளது.

இத்திட்டம் கல்வி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்தே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் பெருங்கடல் நாட்டு பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் கடல் பல்லுயிர், கடல் மாசுபாடு மற்றும் நிலையான கடல் உணவு ஆகிய மூன்று முக்கிய சவால்களை முறியடிக்க இலங்கையில் பல்வேறு செயற்திட்டங்களை இங்கிலாந்து மேற்கொண்டு வருகின்றது.

கடல்சார் சூழலை வளப்படுத்தல் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு நோக்கங்களை கொண்டதாக இந்த செயற்திட்டங்கள் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையிலேயே காலநிலை மாற்றம் தொடர்பான அறிவினை இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அந்நாட்டின் கூட்டு இயற்கை பாதுகாப்பு குழுவின் கடல்சார் விஞ்ஞானிகள் மற்றும் சுற்றாடல், மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் விஞ்ஞான நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செயற்திட்டத்தினை அமுல்ப்படுத்துகின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் பெருங்கடல் நாட்டு பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் நான்கு கோடி ரூபா நிதி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான காலநிலை மாற்றம் தொடர்பான கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக நான்கு பாடங்களை உள்ளடக்கிய ஒரு கையேடும் தரம் 6 தொடக்கம் 11 வரையான இடைநிலை மாணவர்களுக்காக நான்கு பாடங்களை உள்ளிடக்கிய நான்கு கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இந்த கையேடுகள் வீடியோ வடிவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தன. சுமார் 4 தொடக்கம் 7 நிமிடங்களைக் கொண்ட இந்த வீடியோக்கள் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அனைவரும் இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் சிறந்த படைப்பாற்றலுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யூடியுப் பக்கத்திற்கு இந்த லிங்கின் ஊடாகச் சென்று https://www.youtube.com/@centralenvironmentalauthor3017/videos பார்வையிட முடியும்.  

எனினும், பின்தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு குறித்த  வீடியோக்களை பார்வையிடுவது மிகவும் சிரமமாகவுள்ள விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த கையேட்டு வீடியோக்கள் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நூல்களாக அச்சடிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டன.

கொழும்பு – 10 இலுள்ள நாளந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற வெளியிட்டு நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சுற்றாடல், மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் விஞ்ஞான நிலையத்தின் பிரதிநிதி திருமதி சார்லட் ரீவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நூல்களை எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிப்பது என்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கான செயலமர்வொன்றினையும் விரைவில் முன்னெடுக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

"குறிப்பிட்ட அளவிலான புத்தங்களே தற்போது அச்சடிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஐந்து பிரதிகள் என்ற அடிப்படையில் அனைத்து மாகாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் மேம்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சியாமணி பெரியப்பெரும தெரிவித்தார்.

இந்த நூலினை ஆங்கிலத்திலும் வெளியிடுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையினால் இந்த நூல்களின் அடுத்த தொகுதியினை விரைவில் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"தற்போது இணைப்பாடவிதானமாகவுள்ள இந்த நூல்கள் எதிர்காலத்தில் ஒரு பாடத்திற்மாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது" என பணிப்பாளர் சியாமணி தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான அறிவினை வழங்கும் செற்பாடு ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவிற்கமைய உந்துசக்தியாக அமையும் எனவும் அவர் கூறினார்.

இந்த கையேட்டு நூல்களின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் என பணிப்பாளர் சியாமணி நம்பிக்கை வெளியிட்டார்.  

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மாணவர் சுற்றுச்சூழல் முன்னோடித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சாரணர் படையணி மற்றும் முதலுதவி படையணி போன்றே மாணவர் சுற்றுச்சூழல் முன்னோடித் திட்டம் அமைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் அங்கத்தவர்களாக உள்ளதாக அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றனர். இதன் அங்கத்தவர்களுக்கு ஜனாதிபதி சின்னம் உட்பட ஐந்து சின்னங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றன.

இது போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் விழிப்புணர்வினை மேற்கொள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இந்த முயற்சிகள் வெற்றியளிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். இதன் ஊடாக காலநிலை மாற்றத்தினால் எமது நாட்டுக்கு ஏற்படும் அனர்த்தங்களை நிச்சயமாக குறைக்க முடியும்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடம் - 01

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடம் - 02

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடம் - 03

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடம் - 04

இடைநிலை மாணவர்களுக்கான பாடம் - 01

இடைநிலை மாணவர்களுக்கான பாடம் - 02

இடைநிலை மாணவர்களுக்கான பாடம் - 03

இடைநிலை மாணவர்களுக்கான பாடம் - 04