பசி போக்கும் நிவாரண பணிகளை விமர்சிக்காதீர்

பசி போக்கும் நிவாரண பணிகளை விமர்சிக்காதீர்

ரூமி ஹாரிஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வல்லரசு நாடுகள் கூட பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. முதலாளி வர்க்கத்தை தவிர ஏனைய பெரும்பாலானவர்களிடம் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது.

கூலித் தொழிலாளிகள், நாளாந்தம் சம்பளம் பெறுவோர், சிறு தொழில்களை மேற்கொள்வோர் மற்றும் சிறிய ஊதியம் பெறுவோர் என பல தரப்பினரும் இன்று அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம், சமூக நலன்புரி அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமய நிறுவனங்கள் இணைந்து தேவையுடையோருக்கு அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்ற நிதி பெரும்பாலும் ஒரு தனிநபருடைய நிதி அல்ல. மாறாக கூட்டாகச் சேர்த்து பெறப்பட்ட நிதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த சமூக அமைப்புக்கள் தாங்கள் குறித்த செயல் திட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் மூலம் குறித்த செயல் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றோம் என்பதனை நிதி உதவி வழங்கியவர்களுக்கு அறிவிப்பது சிறந்தது.

இதன் மூலம் தாம் ஒரு பயன்மிக்க விடயத்திற்கே செலவு செய்துள்ளோம் என அவர்கள் திருப்தியடைவார்கள். அதேபோன்று இவ்வாறான வேலைத்திட்டங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது ஏனைய சமூக அமைப்புகளும் தாங்களும் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென ஆர்வம் கொண்டு செயற்படுவார்கள்.

இதன் மூலம் பலர் நன்மையடைய வாய்ப்பு இருக்கின்றது. குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது பிழையான ஒன்றல்ல. ஆனால் இவ்வாறான உதவித்திட்டங்களை பிறருக்கு வழங்கும் போது பயன்பெறுபவர்களை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது விரும்பத்தக்கதல்ல.

இதன் மூலம் குறித்த நபர்களின் சுயகௌரவம் பாதிக்கப்படுவதாக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறான விமர்சனங்களை மேற்கொள்ளும் பெரும்பாலானோர் பிறருக்கு எந்தவித உதவிகளையும் செய்யாமலும் ஏனையோர் மேற்கொள்கின்ற உதவி திட்டங்களை விமர்சிப்பதும் வழமையானதே.

இவ்வாறானவர்கள் ஒரு வேளை கூட பட்டினியில் இருந்திருக்கமாட்டார்களென நினைக்கிறேன். பட்டினியில் இருப்பவர்களுக்கு சுயகௌரவம் ஒன்றும் பெரிதல்ல. பட்டினியின் காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் இன்று நாடளாவிய ரீதியில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

மேலும் ஒருவேளை சாப்பாட்டிற்காக விபச்சாரத்தில் கூட ஈடுபடுவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இஸ்லாம் கூட வறுமை இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் என எச்சரித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு உலர் உணவு பொதிக்காக மதம் மாறியவர்களும் உலகில் இல்லாமல் இல்லை. எனவே மேற்கூறப்பட்ட பாரதூரமான விடயங்களைவிட உதவி செய்பவர்கள் குறித்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது ஒன்றும் பாரதூரமான விடயமல்ல என நான் நினைக்கிறேன்.

இயன்றவரை பயன்பெற்றவர்களின் சுய கௌரவம் கருதி இவ்வாறான பதிவேற்றங்களை தவிர்ந்து கொள்வது சிறந்தது. மேலும் தனிப்பட்டவர்கள் தங்களது தர்மங்களையும், ஸதகாக்களையும் பகிரங்கப்படுத்துவதை முற்றாக தவிர்ந்து கொள்வது வரவேற்கத்தக்கது.

கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் என தெரிந்திருந்தும், அதன் தாக்கம் எவ்வளவு பாரதூரமானது என அறிந்திருந்தும், கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் இலங்கையில் அதன் இறுதிக் கிரியைகள் எவ்வளவு பயங்கரமானது எனத் தெரிந்திருந்தும் தமது உயிரையும் துச்சமென கருதாது பட்டினியால் வாடுகின்ற ஏழைகளின் பசியைப் போக்கவும், இடைவேளை இல்லாத தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் மற்றும் Lockdown கட்டுப்பாடு என்பன காரணமாக கையில் பணம் இருந்தும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் உணவுக்கு திண்டாடுகின்ற  குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்ற தொண்டர்களை நீங்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை விமர்சித்து மனம் தளர செய்யாதீர்கள்.

அவர்களுக்கும் தங்கள் உயிர் மேல் ஆசை இல்லாமல் இல்லை. தங்கள் ஆரோக்கியம் குறித்து அக்கறை இல்லாமல் இல்லை. இறைவனின் அருளையும், பாதிக்கப்பட்டவர்களின் துஆவினையும் நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார்கள். எல்லோரையும் போன்று Stay Home என்று தொண்டர்களுக்கும் வீட்டிலேயே இருந்து விடலாம்.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் வைத்தியர்களால் வீட்டில் இருக்க முடியுமா? பாதுகாப்பு படையினரால் வீட்டில் இருக்க முடியுமா? அவ்வாறுதான் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்ற தொண்டர்களின் பணியும் தவிர்க்க முடியாதது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

அரசாங்கம் மக்களுக்கு அத்தியாவசியமான உலர் உணவுகளை நிவாரணமாக வழங்குமாக இருந்தால் இவர்களுக்கும் Stay Home என்று வீட்டிலேயே இருந்து விடலாம். ஆனால் இதுவரை அரசாங்கத்தின் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயம். இதன் காரணமாக கொரோனாவினால் இறப்போரின் எண்ணிக்கையை விட பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.

Lockdown செய்யப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்களிடமும், கையிருப்பில் உணவுப் பொருட்கள் இல்லாமல் இருப்பவர்களிடமும் நிவாரணப் பொருள் விநியோகப் பணி அவர்களுக்கு எந்தளவிற்கு பேருதவியாக அமைந்தது என்பதை கேட்டுப் பாருங்கள். கண்ணீர் மல்க நன்றியோடும், பிரார்த்தனையோடும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்களை நேரில் பார்த்திருக்கின்றேன்.

அவர்களது பிரார்த்தனைகள்தான்  இவ்வாறான நிவாரணப் பணிகளை தடையின்றி தொடரச் செய்து கொண்டிருக்கிறது என நம்புகிறேன். முடிந்தவரை நீங்களும் இவ்வாறான நிவாரண பணிகளுக்கு ஒத்துழையுங்கள்,  தொண்டர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

முடியாவிட்டால் மௌனமாகவே இருந்து விடுங்கள். பசியினால் அழுத ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் ஓய்ந்திருக்கின்றது. யாரோ ஒருவரின் வயிறு பாதியளவாவது நிறைந்திருக்கிறது.

பொதுவாகவே எந்த ஒரு செயல்திட்டத்திற்கும் ஆதரவு இருக்கின்ற அதேவேளையில் இன்னும் பல எதிரான குரல்களும் இல்லாமலும் இல்லை. இந்த சமூகம் எதைச் செய்தாலும் குற்றம் பிடிக்கத்தான் செய்கிறது.

யாரோ ஒருவர் இன்னொருவருக்கு உதவி திட்டத்தை வழங்கி சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்து அதன் மூலம் அவர் அரசியல் அல்லது வேறு இலாபங்களை அடைந்தாலும் எல்லாவற்றையும் விட ஒரு மனிதனின் பசி ஆறியிருக்கின்றது என்பது ஆறுதலான விடயமே. ஒவ்வொருவரது எண்ணங்களுக்கும் ஏற்ப அவர்களுக்குரிய குறைவும் இல்லாத நிறைவும் இல்லாத கூலிகளை வழங்குவதற்கு இறைவன் காத்திருக்கிறான்.