எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இங்கிலாந்து கலவரங்கள்

 எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இங்கிலாந்து கலவரங்கள்

அமந்த குணரத்ன

சமீபத்திய ஐக்கிய இராச்சிய கலவரங்கள் சமூக ஊடக தவறான தகவல்களின் அழிவு சக்தியையும் நிஜ உலக வன்முறையைத் தூண்டும் திறனையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த தவறான தகவலை பரப்புவதில் X மற்றும் Telegram போன்ற தளங்கள் முக்கிய பங்கு வகித்ததுடன், தீவிர வலதுசாரி குழுக்கள் அவற்றை வன்முறையை ஒழுங்கமைக்கவும் தூண்டவும் பயன்படுத்துகின்றன.

இந்த கலவரங்கள் இதேபோன்ற இனப் பதட்டங்கள், எரிச்சலூட்டும் பிரச்சாரங்களால் முக்கியமாக ஏனோக் பவலின் "இரத்த ஆறு" பேச்சுக்களால் தூண்டப்பட்ட 1970களின் இனக் கலவரங்களுக்கு இணையான குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

சமீபத்திய கலவரங்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு மற்றும் தவறான தகவல்களால் தூண்டப்பட்டன. இது சவுத்போர்ட்டில் இடம்பெற்ற ஒரு மோசமான சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்தது, சவுத்போர்ட்டில் ஒரு பொது நிகழ்வின் போது மூன்று இளம் பெண்கள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டனர்.

சந்தேகநபர் இங்கிலாந்து நாட்டவராக இருந்தாலும், தாக்குதல் நடாத்தியவர் முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின. இந்த பிழையான தகவல் நாடு முழுவதும் உள்ள தீவிர வலதுசாரி குழுக்களையும் தனிநபர்களை தூண்டியதுடன், இது முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைக்கின்ற வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

டாமி ராபின்சன் போன்ற நன்கு அறியப்பட்ட நபர்கள் உட்பட தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், இந்த தளங்களில் பிழையான கதைகள் மற்றும் எரிச்சலூட்டும் பிரச்சாரங்களை, மக்களின் கோபத்தை அல்லது பிற வலுவான உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான மொழி மூலமாக பயன்படுத்தி, அமைதியின்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.

டெலிகிராம், அதன் "குறைவான ஒழுங்குபடுத்தப்பட்ட" சூழலுடன், தீவிர வலதுசாரி குழுக்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் தீவிரவாத கருத்துக்களை பரப்புவதற்குமான ஒரு மையமாக மாறியுள்ளதுடன் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

2023 இல் இயற்றப்பட்ட இங்கிலாந்தின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் நிகழ்நிலை உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையாகப் பாராட்டப்பட்டாலும், அதன் நடைமுறை வினைத்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அதன் முதன்மை நோக்கமாக தவறான தகவல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு உட்பட சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களின் பரவலைக் குறைப்பதன் நோக்குடன் சமூக ஊடக தளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் உள்ளடக்கத்திற்கு அதிகமாக பொறுப்புக்கூற வேண்டும் என்பதாகும்.

இச்சட்டமானது இணங்கத் தவறிய தளங்களுக்கு அபராதம் விதிக்க அல்லது தடைசெய்யும் இயலுமையுடன், இந்த விதிகளைச் செயற்படுத்த, ஊடக ஒழுங்குமுறை நிறுவனமான Ofcomக்கு சட்டம் வலுவூட்டல் அளிக்கிறது. இது பயனர்களுக்கு பாதுகாப்பான நிகழ்நிலை சூழல்களை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையாகும்.

இச்சட்டம் Ofcomக்கு விதிகளைச் செயற்படுத்தவும், இணக்கமற்ற தளங்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரத்தை அளித்தாலும், அதன் பல முக்கிய விதிகள் இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என்பதுடன், அமுலாக்கத்தில் குறிப்பிடத்தக்க இடைவெளியை ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த நிறுவனங்கள் தங்களது தளங்களில் சுய-பாதுகாப்புக்கு கடுமையாக உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நம்பியிருப்பது சிக்கலானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் அமுலாக்க பொறிமுறைகளின் மெதுவான வெளியிடுகை தவறான தகவல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையும் வளர அனுமதித்துள்ளது.

இதுவரை முஸ்லிம் சமூகங்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து, தீவிர வலதுசாரிக் குழுக்களும் தனிநபர்களும் வீதிகளில் இறங்கினர்.

குறிப்பான சம்பவங்களில் மசூதிகள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கு சொந்தமான வணிகங்கள் சூறையாடுதல் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு தீ வைப்பு ஆகியவை உள்ளடங்குகின்றன.

இந்த கலவரங்களால் கார்கள் மற்றும் கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு, லண்டன், மான்செஸ்டர் மற்றும் பெல்ஃபாஸ்ட் உட்பட பல நகரங்களில் பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியது. 700 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, 300 க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டதுடன் டசின் கணக்கான பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

எலோன் மஸ்க் இந்த கலவரங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்த அவரது கருத்துக்களுக்காக குறிப்பிடத்தக்க விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பலர் குறிப்பாக X (ட்விட்டர்) இல் அவர் வெளியிட்ட பதிவுகள் எரிச்சலூட்டுவதாகக் கருதினர். மஸ்க் குறித்த நிலைமையை தவிர்க்க முடியாத "உள்நாட்டுப் போர்" என்று விவரிக்கும் அளவிற்கு சென்றதுடன், இது "ஆழமான பொறுப்பற்ற தன்மை" என்று ஐக்கிய இராட்ச்சிய அரசாங்க அதிகாரிகளால் கண்டனம் செய்யப்பட்டது.

அவரது கருத்துக்கள் தீவிரமான அமைதியின்மையின் போது பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் காணப்பட்டது. டாமி ராபின்சன் போன்ற தீவிர வலதுசாரிப் பிரமுகர்கள் அமைதியின்மைக்கு பங்களித்த தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதற்கு அனுமதித்த மஸ்க்கின் தளமான X பற்றி மேலும் கரிசனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

டிஜிட்டல் வெறுப்பை எதிர்ப்பதற்கான நிலையத்தின் ஆய்வின் பிரகாரம், ராபின்சன் போன்ற நபர்களின் இடுகைகள் தீங்கு விளைவிக்கும் கதைகளின் பரவலைத் தணிப்பதற்கு தளத்திலிருந்து சிறியளவான தலையீட்டுடன் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

டாமி ராபின்சன் போன்ற முன்னர் தடைசெய்யப்பட்ட பயனர்களை மீண்டும் அனுமதித்தமை உட்பட மஸ்கின் நடவடிக்கைகள் தவறான தகவல் பரவலை அதிகப்படுத்தியதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ராபின்சனிடமிருந்து ஒரு காணொளியை மீள்இடுகை செய்தல் உட்பட, எரிச்சலூட்டும் உள்ளடக்கத்துடன் அவரது ஈடுபாடு, தீவிர வலதுசாரி பிரச்சாரத்தின் எல்லையை அதிகப்படுத்தியதுடன், அமைதியின்மைக்கு பங்களித்தது.

இங்கிலாந்து அரசாங்கம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடக தளங்களை வலியுறுத்துவதன் மூலம் பதிலளித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரவிருக்கும் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் X தளமானது சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடுமா அல்லது இங்கிலாந்தில் தடை செய்யப்படுமா என்பது பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் இத்தகைய உணர்ச்சிகரமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் சமூக ஊடகத் தளங்களுக்கான கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுத்தன.

இத்தகைய நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தை மீறும் என மஸ்க் போன்றவர்கள் கூறி பதிலளித்துள்ளனர். சமீபத்திய ஐக்கிய இராச்சிய கலவரங்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சு முதன்மையாக தீவிர வலதுசாரி குழுக்களிடமிருந்து உருவானதுடன், டெலிகிராமின் குறைவான ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்தி இனவெறி, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பிரச்சாரங்களைப் பரப்பி, அவர்களைப் பின்பற்றுபவர்களை வன்முறைக்கு அணிதிரட்டுகிறது. இதற்கான உதாரணங்களில் சமூகப் பிரச்சினைகளுக்காக புலம்பெயர்ந்தவர்களைக் குற்றம் சாட்டும் எரிச்சலூட்டும் இடுகைகள் அடங்கும்.

UK இன் ஊடக ஒழுங்குபடுத்துனரான Ofcomக்கு, இணக்கமற்ற தளங்களுக்கு அபராதம் விதிக்கும் அல்லது தடைசெய்யும் அதிகாரத்துடன், இந்த விதிகளைச் செயற்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், முன்னய பழமைவாத அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் சில விமர்சனங்களை எதிர்கொண்டது, ஏனெனில் அதன் பல அமுலாக்க பொறிமுறைகள் இன்னும் முழுமையாக செயற்படவில்லை.

இந்த கலவரங்கள் 1970 களில் நடந்த கலவரங்களுக்கு இணையானவையாகும். அந்தக் காலகட்டத்தின் கலவரங்கள், எரிச்சலூட்டும் பிரச்சாரங்களால் குறிப்பாக 1968 இல் ஆற்றிய ஏனோக் பவலின் "இரத்த ஆறு" பிரச்சாரத்தால் அதிகப்படுத்தப்பட்டது. பிரிட்டன் குடியேற்றத்தால் மூழ்கியிருப்பதாக எச்சரித்த பவலின் பேச்சு, வெள்ளை பிரித்தானியர்களிடையே வெறுப்பைத் தூண்டியதுடன் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டியது.

இன்று, பவலின் பேச்சை எதிரொலிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் பிளவுபடுத்தும் கதைகளை விரிவுபடுத்துவதால், இதேபோன்ற பரிமாணம் செயற்படுகின்றது. 1970 களில் இனப் பலிகடாக்கள் போன்று புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சுகளால் சமீபத்திய கலவரங்கள் தூண்டப்பட்டன.

ஊடகங்கள் விருத்தியடைந்திருந்தாலும், அடிப்படை அச்சங்களும் பதட்டங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. முக்கிய வேறுபாடானது டெலிகிராம் மற்றும் எக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களால் தூண்டப்பட்டு, இன்று தவறான தகவல் பரவக்கூடிய அளவு மற்றும் வேகத்தில் உள்ளதுடன், இது நிலைமையை மேலும் நிலையற்றதாக ஆக்குகிறது.

இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், இனவெறி, குடியேற்றம் மற்றும் சமூகப் பிளவு ஆகியவற்றின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிப்பதுடன், பிரிட்டிஷ் சமுதாயத்தில் இன்னும் முழுமையாகக் கவனிக்கப்படாத ஆழமான வேரூன்றிய சவால்களை வெளிப்படுத்துகின்றன.

தவறான தகவல்களில் இருந்து சமுதாயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், புலம்பெயர்ந்தோர் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடாத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் முக்கியமானதாகும்.

அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் அடிப்படை மனித உரிமைகளுக்கு தகுதியுடையவர்களாவர். இங்கிலாந்தில் கலவரங்கள் குறைவடைந்ததும், சிறுபான்மை சமூகங்களை இலக்காகக் கொண்ட தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளின் வன்முறை வடிவங்களை எதிர்த்து, இந்த உரிமைகள் மிகவும் வினைத்திறனான ஒழுங்குமுறை சூழல் அமைப்பால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.