COVID-19க்காக அமெரிக்காவினால் இலங்கைக்கு 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

COVID-19க்காக அமெரிக்காவினால் இலங்கைக்கு 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

COVID-19 இற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் போராட்டத்தில் அந்நாட்டுக்கு உதவுவதற்காக 4.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை வழங்குவதாக அமெரிக்கா இன்று (06) புதன்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பினை அடுத்து COVID-19 இற்கான அமெரிக்காவின் இலங்கைக்கான மொத்த பங்களிப்பை 5.8 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது.

"இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான அமெரிக்க உதவியின் நீண்ட பாரம்பரியத்தை இந்த உதவி தொடர்கிறது" என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

"சுகாதாரத் துறைக்கான 26 மில்லியன் டொலர் உட்பட கடந்த 20 வருடங்களில் இலங்கைக்கான அமெரிக்காவின் மொத்த உதவியானது ஒரு பில்லியன் டொலரையும் விட அதிகமாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அனுப்பப்பட்ட இந்த உதவியில் இந்த நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சனத்தொகைக்கான சமூக சேவைகளை அதிகரிப்பதற்கான மற்றும் சமூக ஒத்திசைவை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கான இரண்டு மில்லியன் டொலரும் அடங்குகிறது.

மேலுமொரு 2 மில்லியன் டொலரானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தும் என்பதுடன், பெண்களின் பொருளாதார பங்கேற்பையும் அதிகரிக்கும். புதிதாக அறிவிக்கப்பட்ட உதவியின் அங்கமொன்றாக அமெரிக்கா 590,000 டொலர் மனிதாபிமான உதவியையும் வழங்குகிறது.

இது இந்த தொற்றுப்பரவலின் போது பாதிக்கப்படும் ஏதுநிலை கொண்ட மக்களுக்கு உதவும். ஆய்வுக்கூட முறைமைகளை தயார்படுத்தவும் நோயாளர் கண்டுபிடிப்பு மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்தவும், பதிலளிப்பு மற்றும் தயார் நிலைக்கு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உதவவும் அரசாங்கத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தினால் அறிவிக்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர் சுகாதார உதவியை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய உதவி முன்னெடுக்கப்படுகிறது.

தொற்று நோயின் ஆபத்து பற்றி மேலும் பயனுறுதிமிக்க வகையில் தொடர்பாடலை நடத்தவும் சுகாதார ஸ்தானங்களில் தொற்று நோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அமெரிக்க உதவியானது இலங்கைக்கு உதவுகிறது.

COVID-19 பரவத் தொடங்கியதிலிருந்து அவசர சுகாதார, மனிதாபிமான, பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக அமெரிக்க அரசாங்கம் உலகளாவிய ரீதியில் 775 மில்லியன் டொலருக்கும் மேற ;பட்ட தொகையை வழங்கியுள்ளது.

இந்த தொற்றுப்பரவலை சமாளிக்க உலகம் முழுவதிலுமுள்ள சமூகங்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் பல்தரப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய நிதியளிப்புகளுக்கு மேலதிகமானதாகவே இந்த உதவி அமைந்துள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் COVID-19 இற்கு எதிரான போராட்டங்கள் மாதக் கணக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலகளாவிய பதிலளிப்பு முயற்சிகளுக்கான மிகப்பெரிய தனியொரு நன்கொடையாளி நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நேரடி நிதியளிப்புக்கு மேலதிகமாக, எமதுAll-of-America அணுகுமுறையானது அமெரிக்க தனியார் வர்த்தகங்கள், இலாப நோக்கற்ற குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், நம்பிக்கை அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் தாராள மனப்பான்மையின் ஊடாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவி வருகிறது.

மொத்தத்தில், உலகளாவிய COVID-19 பதிலளிப்பு நடவடிக்கைகளில் அரச மற்றும் அரச சார்பற்ற நன்கொடைகள் மற்றும் உதவிகளில் சுமார் 6.5 பில்லியன் டொலர் மதிக்கத்தக்க தொகையை அமெரிக்கர்கள் வழங்கியுள்ளனர்.
COVID-19 இற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கான அமெரிக்காவின் பங்களிப்புகள் பற்றிய மேலதிக தகவல்களை இங்கே காண முடியும்: