பிரதமர் மோடி 04 முதல் 06 வரை இலங்கை வருகை
BIMSTEC அமைப்புக்கு தற்போது தலைமைவகிக்கும் தாய்லாந்தினால் 2025 ஏப்ரல் 4ஆம் திகதி நடத்தப்படும் ஆறாவது BIMSTEC மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஓர் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா விடுத்த அழைப்பின் அடிப்படையிலும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3-4 ஆகிய திகதிகளில் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் தாய்லாந்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவாகும். 2018இல் நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 4ஆவது BIMSTEC மாநாட்டின் பின்னர் BIMSTEC தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் முதலாவது மாநாடு இதுவாகும்.
கடந்த ஐந்தாவது BIMSTEC மாநாடு 2022 மார்ச்சில் இலங்கையின் கொழும்பு நகரில் மெய்நிகர் மார்க்கமூடாக நடைபெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் ஆறாவது BIMSTEC மாநாட்டின் தொனிப்பொருளாக "வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான பிம்ஸ்டெக் (BIMSTEC)” அமைந்துள்ளது.
இம்மாநாட்டின்போது BIMSTEC ஒத்துழைப்புக்கு சிறந்த உந்துசக்தியை வழங்குவதற்கான செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் BIMSTEC கட்டமைப்புக்குள் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் திறன் விருத்தி செயற்பாடுகள் மற்றும் நிறுவக நடவடிக்கைகள் குறித்தும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பினை பலப்படுத்தல்; வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை எளிதாக்கல்; நேரடி, கடல் மற்றும் டிஜிட்டல் தொடர்புகளை ஸ்தாபித்தல்; உணவு, சக்தித்துறை, காலநிலை மற்றும் மனிதப் பாதுகாப்பு குறித்த விவாகாரங்களில் ஒத்துழைப்பு; திறன் மற்றும் ஆளுமை விருத்தியினை மேம்படுத்தல்; மற்றும் குறித்த நாடுகளின் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் உட்பட பிராந்திய ஒத்துழைப்பினையும் பங்குடைமையினையும் வலுவாக்குவதற்காக BIMSTEC இல் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இரு தரப்பு உறவுகளின் அடிப்படையில் ஏப்ரல் 03ஆம் திகதி பிரதமர் மோடி தாய்லாந்து பிரதமரை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு பிரதமர்களும் மீளாய்வு செய்யவுள்ளதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான எதிர்கால பங்குடைமைக்கான பாதைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.
கலாசாரம், மொழி மற்றும் மதம் அடிப்படையிலான உறவுகளால் அடித்தளமிடப்பட்டுள்ள பொதுவான நாகரீக உறவுகளை கொண்டிருக்கும் கடல்மார்க்கமான நட்புநாடுகளாக இந்தியாவும் தாய்லாந்தும் உள்ளன.
தாய்லாந்திலிருந்து பிரதமர் மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் ஏப்ரல் 04 முதல் 06 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது நிறைவேற்றப்பட்ட “ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான பங்குடைமைகளை வளர்த்தல் என்ற அடிப்படையிலான கூட்டு தொலைநோக்குப் பார்வையில் இணக்கம் காணப்பட்ட ஒத்துழைப்பு துறைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் அங்கமாக ஏனைய சிரேஸ்ட பிரமுகர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார் அத்துடன் இந்திய நிதி உதவியின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணத்துக்காக பிரதமர் அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி இறுதியாக 2019இல் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். முன்னதாக இலங்கை ஜனாதிபதி பதவியேற்ற பின்னரான முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு ஓர் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
மிகவும் வலுவான கலாசார மற்றும் வரலாற்று தொடர்புகளுடன் இந்தியாவும் இலங்கையும் பகிரப்பட்ட நாகரீக பிணைப்புகளைக் கொன்டுள்ளன. இவ்விஜயமானது நாடுகளுடனான வழமையான உயர் மட்ட ஈடுபாடுகளின் அங்கமாக காணப்படுவதுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக பங்குடைமையை வலுவாக்குவதில் மேலும் உந்துசக்தியளிப்பதாகவும் அமையும்.
Comments (0)
Facebook Comments (0)